disalbe Right click

Saturday, February 11, 2017

போதைக்கு அடிமையான அப்பாவிற்கு

Image may contain: text

போதைக்கு அடிமையான அப்பாவிற்கு .....

அந்த பழக்கம் உங்களுக்கு இல்லாமல் இருந்திருந்தால் இந்த கடிதத்தை எழுதும் அவசியம் இருந்திருக்காது அப்பா...!'

அன்புள்ள அப்பா,

காலம் எவ்வளவு வேகமாக உருண்டோடிவிட்டது....?! ஆனால், எல்லாமே நேற்று நடந்தது போல உள்ளது... இன்றோடு 10 ஆண்டுகள் ஆகின்றன. என்னால் நம்ப முடியவில்லை. 

10 ஆண்டுகளுக்கு முன்னால் இன்றைய தினம்தான் என்னிடம் இருந்து, இல்லை எங்களிடம் இருந்து பிரியா விடை பெற்றீர்கள் அப்பா! நினைக்கும்போதே என்னவோ செய்கிறது.

அப்பா, இப்போது எனக்கு 24 வயதாகிறது. என்னைச் சுற்றி என் வயதுடையவர்கள் படித்து முடித்து விட்டார்கள். சிலருக்கு திருமணமும் முடிந்து விட்டது. ஆனால், நான் நீங்கள் பாதியில் விட்டுச் சென்ற பயணத்தைத் தொடர, இப்போது ஒரு துணிக்கடையில் வேலை செய்கிறேன். 10 வருடங்களாக பல வேலைகளைச் செய்து வருகிறேன். 

ஆம் அப்பா, நீங்கள் சென்றதில் இருந்து நான் பள்ளிக்குச் செல்லவே இல்லை. மூத்த பெண் குழந்தையைச் செல்லமாக வளர்த்தீர்கள். தம்பிகள் இருவரும் உங்களைப் பார்த்தே வளர்ந்தார்கள். உங்களைப் பற்றியே கேட்டு கேட்டு, இன்று அவர்களின் நிலையைக் காண நீங்கள் இல்லை. அது ஒருபுறம் இருக்க, 'அவர்களையாவது படிக்க வைக்க வேண்டும்' என்ற மிகப் பெரிய பொறுப்பு என்மீது இருந்தது.

நீங்கள் தொடர்ந்து புகையிலையைப் பயன்படுத்தியதால் அம்மாவிற்கு காச நோய் வந்துவிட்டது. நீங்கள் இறந்துபோனதும், அம்மாவை வேலைக்கு அனுப்பினாலும், அதிகமாக வேலை செய்ய முடிந்ததில்லை. அதனால், அப்போது நான் செங்கல் செய்யும் வேலைக்குச் சென்றேன். இது அனைத்தையும் நீங்கள் எங்கிருந்தோ பார்த்துக் கொண்டு இருப்பீர்கள் என நினைத்து சமாதானப்படுத்திக் கொண்டேன். அங்கு இரவு 12 மணிக்கெல்லாம் எழுப்பி விடுவார்கள். 

உங்கள் அருகில் உறங்கியது போல நிம்மதியாக என்னால் உறங்க முடிந்ததே இல்லை. அங்கு நான் மிகவும் கஷ்டப்பட்டேன். ஆனால், யாரிடமும் கூறிக் கொள்ளவில்லை. என் படிப்பு போனதுதான் மிகுந்த வருத்தத்தை அளித்தது. ஆனால், தம்பிகள் படிக்க வேண்டும் அல்லவா? அவர்கள் நிச்சயம் பெரிய ஆளாக வருவார்கள் என, கேட்டதை எல்லாம் செய்தேன். ஆனால், அவர்கள் அருகில் இருந்து என்னால் கண்டித்து வளர்க்க முடியவில்லை. அது எவ்வளவு பெரிய தவறு என இப்போது தெரிகிறது!

செங்கல் சூளையில் தரும் 300 ரூபாயில் அம்மாவின் மருந்து செலவு, தம்பிகளின் படிப்பு, சாப்பாடு என அனைத்தையும் பார்க்க மிகவும் கஷ்டப்பட்டேன். அதனால், துணி மில்லுக்கு வேலைக்குச் சென்றேன். அங்கு இதைவிட வலி அதிகம் அப்பா. நான் அழாத நாட்களே இல்லை. நான் பெண் என்பதால் ஒரு தந்தையிடம் சொல்ல முடியாத கஷ்டங்களை அனுபவித்தேன். 

ஆனால், தம்பிகளின் படிப்பிற்காக அனைத்தையும் பொறுத்துக் கொண்டேன். அவர்களுடைய அனைத்து தேவைகளுக்கும் பணம் கொடுத்த நான், அந்தப் பணத்தை என்ன செய்கிறார்கள் எனக் கவனிக்கத் தவறினேன். நீங்கள் இருந்து இருந்தால் நிச்சயம் இப்படி நடந்திருக்காது, என நினைக்கிறேன்!

அம்மாவின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து கொண்டு இருக்கிறது. அம்மாவுடன் இருக்க வேண்டும் என்பதால் வேலையை விட்டு வந்தேன். இங்கு துணிக் கடையில் மாதம் ரூ.3,000 த்திற்கு வேலை செய்கிறேன். உங்களிடம் சிலவற்றை கேட்க வேண்டும் என்ற எண்ணம், என்னை இப்போது அதிகளவு தொற்றிக் கொண்டுள்ளது. அதனால்தான் இக்கடிதத்தை எழுதுகிறேன்.

ஒரு அப்பாவின் அரவணைப்பில் நான் இருந்த காலம் மிகவும் குறைவு. உங்களின் சிரிப்பு மட்டுமே என் நினைவில் உள்ளது. நான் உங்களிடம் ஆறாவது பிறந்தநாள் அன்று பரிசாக ஒரு வரம்... ஆம் வரம் என்றே கூறலாம். வரம் கேட்டேன். "அப்பா புகையிலை பழக்கத்தை விட்டு விடுங்கள்" என்று. 

ஆனால், அதை ஏனோ எனக்குத் தர மறுத்து விட்டீர்கள். அதனால், நாங்கள் அனாதையாக மாறினோம். அன்று நாங்கள் ஆதரவின்றி போனோம் என்று மட்டும்தான் எண்ணினேன். ஆனால் இப்பொழுதுதான் தெரிகிறது உங்கள் இருப்பின் தாக்கமும், இறப்பின் தாக்கமும் எந்தளவு தொக்கி நிற்கிறது என்று. உங்கள் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்ததால், இதுநாள் வரை எனக்கு உங்கள் மீது கோபம் வந்ததே இல்லை. 

இப்போது வருகிறது அப்பா. அதிகமாக வருகிறது. நீங்கள் எங்களைப் பார்த்துக் கொண்டுதானே, உங்களின் இன்பத்திற்காக, சுயநலத்திற்காக புகையிலை உபயோகித்தீர்கள். எங்கள் மீது நீங்கள் வைத்திருந்த அன்பைக் காட்டிலும் புகையிலை முக்கியமாகப் போனது. அதனால்தான் நான் இன்று கண்ணீரால் இக்கடிதத்தை எழுதும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கம் உங்களுக்கு இல்லாமல் இருந்திருந்தால் இன்று நான் இந்த கடிதத்தை எழுதும் அவசியம் இருந்திருக்காது அப்பா...!

புற்றுநோயினால் நீங்கள் அவதிப்பட்டு, இறந்து போன நொடிகளில் என் பாதி உயிர் போனது. என் மீதி உயிரைக் கொடுத்து படிக்க வைத்த என் தம்பிகள், இன்று புகையிலைக்கு அடிமையாகி விட்டார்கள். எப்படி என்று தெரியவில்லை. அம்மாவின் இயலாமையைப் பயன்படுத்தி இப்படி செய்துள்ளார்கள் அப்பா.

பீடியோ, சிகரெட்டோ, பொடியோ ஏதாவது ஒரு வழியில் அவர்களுக்கு போதை தேவைப்படுகிறது. நான் என்ன செய்ய முடியும்...? நீங்கள் அம்மாவை அடித்து காசு வாங்கிச் செல்வது போல, அவனும் வாங்குகிறான். சிறு வயதில், உங்கள் செயல்கள் அவர்களின் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டன. ஒரு அப்பாதான் தன் பிள்ளைகளின் ஹீரோ. 

ஆனால் ஏனோ உங்கள் செயலால்தான் இன்று தம்பிகள் மெல்ல மெல்ல புகையிலைக்கு அடிமையாகி விட்டார்கள். பள்ளிக்குச் செல்வதை நிறுத்தி விட்டார்கள். பயமாக உள்ளது. இவர்களின் இந்த பழக்கத்தால், நாளை மீண்டும் என்னைப் போல ஒரு மகனோ, மகளோ இதுபோல அவனுக்குக் கடிதம் எழுதும் நிலை ஏற்பட்டு விடக்கூடாது. 

அப்பா, இன்று இரண்டாம் முறையாக உங்களிடம் ஒரு வரம் கேட்கிறேன். அவர்களைத் எப்படித் திருத்துவது என ஒரு வழி கூறுங்கள் அப்பா. என் கண்ணீர் நிச்சயமாக உங்களை வந்து சேரும் என்ற நம்பிக்கையோடு கடிதத்தை முடிக்கிறேன் அப்பா.

இப்படிக்கு உங்கள் செல்ல மகள்......
(புகையிலை போதைக்கு அடிமையான அனைத்து அப்பாக்களுக்கும் சமர்ப்பணம்)
நன்றி : விகடன் செய்திகள் - 31.05.2016



No comments:

Post a Comment