இரைப் பை வாதம் என்றால் என்ன ?
டயாபடிக் கேஸ்ட்ரோபெரிசிஸ் என்றால் என்ன?
இரைப்பையில், எவ்வளவு நேரம் உணவு இருக்கலாம். எப்போது சிறுகுடலுக்கு அனுப்ப வேண்டும் என்பதை தீர்மானிப்பது வேகஸ் நரம்புகள் தான். இந்த நரம்புகள் பாதிக்கப்பட்டால் கேஸ்ட்ரோபெரிசிஸ் எனும் இரைப்பை வாதம் வரும்.
இப்பாதிப்பு ஏற்பட காரணம்?
ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்காத போது, டயாபடிக் கேஸ்ட்ரோபெரிசிஸ் ஏற்படுகிறது.
டயாபடிக் நியூரோபதியின் வகை என்கிறார்களே?
உண்மை தான், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும் போது அது ரத்தக்குழாயைப் பாதித்து, நரம்புகளுக்குத் தேவையான உணவு மற்றும் ஆக்சிஜன் கிடைப்பதைத் தடை செய்கிறது.
இப்பாதிப்புக்கு யாரெல்லாம் ஆளாகின்றனர்?
பெரும்பாலும், டைப் 1 சர்க்கரை நோயாளிகளுக்கு அதிகளவில் இப்பிரச்னை ஏற்படுகிறது. டைப் 2 சர்க்கரை நோயாளிகளுக்கும் ஏற்படுகிறது.
அறிகுறிகள்?
இப்பாதிப்பு ஏற்பட்டால், ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் வாந்தி, குமட்டல் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தி, அசவுகரியத்தை அளிக்கும். இந்த அறிகுறிகள், மனிதருக்கு மனிதர் தீவிரமாகவோ அல்லது சாதாரணமாகவோ ஏற்படலாம்.
இதன் பாதிப்பு?
உணவு இரைப்பைக்கு வந்து நீண்ட நேரம் கழித்து சிறுகுடலுக்குள் நுழையும். அங்கே ஊட்டச்சத்து கிரகிக்கப்பட்டு, ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரிக்கும். நீண்ட நேரம், இரைப்பைக்குள்ளேயே உணவு இருக்கும் போது பாக்டீரியா கிருமிகளின் வளர்ச்சி அதிகரிக்கலாம். உணவு மேலும் கடினமாகி, வாந்தியை ஏற்படுத்தலாம் அல்லது குடலில் அடைப்பை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
பரிசோதனைகள் என்னென்ன?
பேரியம் எக்ஸ்ரே, ரேடியோஐசொடோப் கேஸ்டிரிக் எம்டியிங் ஸ்கேன், ஒயர்லெஸ் மொட்டிலிட்டி கேப்ஸ்யூல், மேல் வயிறு எண்டோஸ்கோப்பி, அல்ட்ராசவுண்ட் என, பல பரிசோதனைகள் உள்ளன.
இப்பாதிப்பு வராமல் தடுக்க என்ன செய்வது?
உணவு உண்ணுவதை மாற்றியமைப்பதன் மூலம் இரைப்பை வாதத்தை தவிர்க்க முடியும். மூன்று வேளைக்கு பதிலாக ஆறு வேளையாக சாப்பிடுவது நல்லது. உணவை உண்ணும் போது மெதுவாக சுவைத்து சாப்பிட வேண்டும்.
இந்த பாதிப்புள்ளவர்கள் உடற்பயிற்சிகள் செய்யலாமா?
உணவு உண்டதற்கு பிறகு அரை மணிநேரம் கழித்து சிறிய நடைபயிற்சி செய்யலாம். நடைபயிற்சியே போதுமானது. பொதுவாக காலையில், 45 நிமிடங்கள் நடைபயிற்சி செய்வது நல்லது.
சிகிச்சைகள் என்ன?
ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க வேண்டும். இதற்காக இன்சுலின், வாய்வழி மருந்துகள், உணவுப் பழக்கத்தில் மாறுதல்கள் போன்றவையே பரிந்துரைக்கப்படும். நோயாளியின் உடல்நிலையை பொறுத்து மாத்திரைகள் பரிந்துரைக்கப்படும்.
ரா.நாராயணமூர்த்தி
நீரிழிவு நிபுணர்
நன்றி : தினமலர் நாளிதழ் - 01.02.2017
No comments:
Post a Comment