சட்டசபை தீர்மானத்தை எதிர்த்து வழக்கு தொடரலாம்:
சட்ட நிபுணர்கள் கருத்து
சட்டசபையில், முதல்வர் கோரிய நம்பிக்கை தீர்மானம் செல்லுமா என்ற சர்ச்சை எழுந்து உள்ளது. எம்.எல்.ஏ.,க்களை வெளியேற்றி விட்டு, நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
சட்டசபையில் நேற்று, முதல்வர் இடைப்பாடி பழனிசாமி, நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தார். தி.மு.க., சார்பில், ரகசிய ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது. அதற்கு, சபாநாயகர் சம்மதிக்கவில்லை.
தி.மு.க.,வினரின் ரகளையை தொடர்ந்து, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அதை தொடர்ந்து, சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தது. முதல்வர் பழனிசாமி அரசு, ஓட்டெடுப்பில் வெற்றி பெற்றது.
அவகாசம்
இதுகுறித்து, முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலும், மூத்த வழக்கறிஞருமான பி.வில்சன் கூறியதாவது:
சட்டசபையில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பு செல்லாது என கேட்டு, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம்.
அதை,எம்.எல்.ஏ.,க்கள் தான் தொடர வேண்டும். நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது சுதந்திரமாக, மனமுவந்து, எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டளிக்க வேண்டும்.
சட்டசபையை கூட்ட, இரண்டு வார அவகாசத்தை கவர்னர் வழங்கி உள்ளார். அப்படி இருக்கும் போது, இரண்டு நாட்களில் சபை கூட்டப்படுகிறது.
சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர, 14 நாட்களுக்கு முன், 'நோட்டீஸ்' கொடுக்கப்பட வேண்டும். அப்படி யாராவது தீர்மானம் கொண்டு வந்துவிட்டால், அதை தான் முதலில் எடுக்க வேண்டியதிருக்கும்.
அதனால் தான், இரண்டு நாட்களில் சபை கூட்டப்பட்டதாக கருதுகிறேன்.
ரகசிய ஓட்டெடுப்பு கோரிக்கை, பரிசீலிக்காமலே நிராகரிக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே,எம்.எல்.ஏ.,க்களை ரிசார்ட்டுகளில் இருந்து அழைத்து வந்துள்ளனர். வெளிப்படையான ஓட்டெடுப்பு என்றால் தங்களுக்கு தகுதியிழப்பு ஏற்படும் என, எம்.எல். ஏ.,க்கள் சிலர் பயப்படலாம்; ரகசிய ஓட்டெடுப்பு என்றால் எந்த பயமுமின்றி ஓட்டுப்பதிவு செய்யலாம்.
பலத்தை நிரூபிக்க தான், சட்ட சபை கூட்டம் கூட்டப்பட்டு உள்ளது. ஒட்டு மொத்தமாக, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை வெளி யேற்றி விட்டு, நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்துவது எப்படி சரியாகும்? இவ்வாறு அவர் கூறினார்.
உத்தரவு
உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கே.சக்திவேல் கூறியதாவது:
கர்நாடகாவில், 2010ல், பா.ஜ., ஆட்சியின் போது, முதல்வராக இருந்த எடியூரப்பா, நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தார்; அதில், வெற்றி பெற்றார். அப்போது, அந்த நம்பிக்கை ஓட்டெடுப்பு பற்றி பிரச்னை எழுப்பப்பட்டது. இதையடுத்து, மீண்டும் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த, கவர்னர் உத்தரவிட்டார்; அதிலும், அவர் வெற்றி பெற்றார்.
எனவே, நம்பிக்கைதீர்மானத்தின் மீதான ஓட் டெடுப்பு முறையாக நடக்கவில்லை என்பதில் கவர்னர் திருப்தியடைந்தால், மீண்டும் ஓட்டெடுப்பு நடத்தும்படி கூறலாம். ஏற்கனவே, சபையில் இருந்து, தி.மு.க., உறுப்பினர்கள் வெளியேற்றப் பட்டு, ஓட்டெடுப்பு நடத்தப்பட்டுள் ளதால் மீண்டும் ஓட்டெடுப்பு நடத்தும்படி கோர முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.
வெளியேற்றம்:
உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஒருவர் கூறியதாவது: தி.மு.க.,வினர் ரகளையில் ஈடுபட்டதால், சபையை நடத்த முடியவில்லை; அதனால், அவர்கள் வெளியேற்றப்பட்டனர் என்ற நிலையை, சபாநாயகர் எடுக்க முடியும்.
எதிர்க்கட்சி தலைவர், ரகசிய ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என்பதை, விதிகளை சுட்டிக்காட்டி கேட்கிறார்.
ரகசிய ஓட்டெடுப்பை நிராகரிப்பதற்கான காரணங்களை கூறிவிட்டு, அதை சபாநாயகர் நிராகரித்திருக்கலாம்; அவ்வாறு செய்யாமல், நேரடியாக கோரிக்கையை நிராகரித்திருப்பது தெரிகிறது.
உத்தர பிரதேச வழக்கில் கூறிஉள்ளபடி, முதல்வர் பதவிக்கு உரிமை கோருபவர்கள் முன்னிலையில், சட்டசபை கூட்டத்தை கூட்டி, ஓட்டெடுப்பு நடத்தியிருக்கலாம் அல்லது ரகசிய ஓட்டெடுப்பை பின்பற்றியிருக்கலாம்.
ஆனாலும், ரகசிய ஓட்டெடுப்பு பற்றி முடிவு செய்ய வேண்டியது சபாநாயகர் தான்.
சட்டசபையில் இருந்து, தி.மு.க.,வினர் வெளியேற்றம், அதைத் தொடர்ந்து நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பை எதிர்த்து வழக்கு தொடரலாம். இதுவும், நீதிமன்றத்தின் ஆய்வுக்கு உட்பட்டதே.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -
நன்றி : தினமலர் நாளிதழ் - 18.02.2017
No comments:
Post a Comment