disalbe Right click

Thursday, February 16, 2017

சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க


சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க
ஒரு சட்டசபையில் ஆட்சியமைக்க அழைப்பதற்கு கவர்னர் என்ன செய்ய வேண்டும்?
சட்டமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களை பெற்றுள்ள கட்சியின் தலைவரை ஆளுநர் ஆட்சியமைக்க அழைக்கவேண்டும். பெரும்பான்மை உறுப்பினர்களின் நம்பிக்கை குறித்து சந்தேகம் வந்தால் பெரும்பான்மை இருப்பதாகச் சொல்லி முதல்வராக பொறுப்பேற்றவர், சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டும். அதாவது இருக்கின்ற மொத்த சட்டப்பேரவை உறுப்பினர்களில் பாதிக்கும் மேல் எண்ணிக்கை கொண்ட உறுப்பினர்கள் அவரை ஆதரிக்க வேண்டும்" இதுதான் விதி.

அது போன்ற சூழ்நிலையில் ஆளுநர் அவர்கள் கட்சியின்
பெரும்பான்மையை நிரூபிக்க இரு வகைகளை பின்பற்றுவார். 

ஒன்று ஃப்ளோர் டெஸ்ட். (loor test)
மற்றொன்று காம்போசிட் ஃப்ளோர் டெஸ்ட்.(composite floor test)

 ஃப்ளோர் டெஸ்ட் என்றால் என்ன?
முதலில் பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களின் பலம் தனக்கு உள்ளதாக சொல்லும் கட்சித்தலைமையை ஆட்சி அமைக்க அழைத்து பதவிப்பிரமாணம் செய்து வைத்து, அவரை பெரும்பான்மை நிரூபிக்கக் கோர வேண்டும். 

அது போன்று அவர் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு குறிப்பிட்ட காலத்துக்குள் சட்டப்பேரவையை கூட்டி பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதை நிரூபிக்க வேண்டும்.

தமிழக சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 234 சட்டமன்ற  உறுப்பினர்களில்  சபாநாயகர் தவிர 233 பேர். இவர்களில் பாதிக்கும் மேல் அதாவது குறைந்தபட்சம் 117 உறுப்பினர்களின் ஆதரவு அவசியம். ஒருவேளை இருவரும் சரிசமமான உறுப்பினர்களின்  ஆதரவை பெற்றால், சபாநாயகர் யாரை ஆதரிக்கிறாரோ அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்.

சில சமயங்களில் ஆளுநரால் இதில் சில சலுகையும் வழங்கப்படும். அதாவது சட்டசபையின் மொத்த உறுப்பினர்களில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு பதிலாக,சட்டசபையில் வாக்கெடுப்பு நடக்கும் அன்று இருக்கும் உறுப்பினர்களில் பெரும்பான்மை ஆதரவு இருக்கிறது என நிரூபித்தால் போதுமானது என ஆளுநர் சலுகை வழங்கலாம். 

இதன்படி சட்டப்பேரவையில் வாக்கெடுப்பு நடக்கும் அன்று மொத்தம் 220 உறுப்பினர்கள் இருந்தால், 111 பேரின் ஆதரவு இருந்தாலே போதுமானது. 117 பேரின் ஆதரவு தேவை என்ற அவசியமில்லை. இதற்குப் பெயர்தான்  ஃப்ளோர் டெஸ்ட் எனப்படும்.

காம்போசிட் ஃப்ளோர் டெஸ்ட் (composite floor test)
இது தவிர இன்னொரு முறையும் இருக்கிறது. அது காம்போசிட் ஃப்ளோர் டெஸ்ட் ஆகும். 

அதாவது முதல்வர் பதவிக்கான போட்டி இருவருக்கு இடையில் இருக்கும் பட்சத்தில் இருவரும் ஒரே நேரத்தில் தங்களது பெரும்பான்மையை நிரூபிப்பதுதான் காம்போசிட் ஃப்ளோர் டெஸ்ட். 

இதற்காக சட்டப்பேரவையை ஆளுநர் கூட்டலாம். 

சட்டப்பேரவையில் முதல்வர் பதவிக்கு போட்டியிடும் இருவர் ஒரே நேரத்தில் தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். யார் பெரும்பான்மை நிரூபிக்கிறார்களோ, அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அவர் முதல்வர் பதவியேற்க அழைக்கப்படுவார். 

தற்போது தமிழ்நாட்டுக்கு அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி அவர்கள் இந்த முறையைத்தான்  பரிந்துரைத்துள்ளார்கள்.

இந்த முறை இதுவரை தமிழகத்தில் இதுவரை அமல்படுத்தப்பட்டதில்லை. 

உத்திரபிரதேசத்தில் ஒரே நேரத்தில் கல்யாண் சிங்கும், ஜெகதாம்பிகா பால் இருவரும் முதல்வராக செயல்பட... இது போன்று கூட்டாக சட்டசபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க உத்தரவிடப்பட்டனர்.

உச்சநீதிமன்றத்தால் முன்மொழியப்பட்ட இந்த முறையானது இதுவரை இந்தியாவில் ஓரிரு முறைதான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
*****************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி

No comments:

Post a Comment