disalbe Right click

Saturday, February 25, 2017

தானே ஆஜராகி வாதாடுபவர்கள் கவனத்திற்கு.....


தானே ஆஜராகி வாதாடுபவர்கள் கவனத்திற்கு.....
நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிடும் மனுதாரருக்கு சட்ட அறிவு தேவை: 
உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை:
'வழக்குகள் தொடர்பான நீதிமன்றத்தில் மனுதாரர்களே ஆஜராகி வாதிடும்போது சட்டத்திற்குட்பட்டு எதை பேச வேண்டுமோ அதை வாதிட வேண்டும். சட்டம் பற்றி அறிந்திருக்க வேண்டும்; தெரியாது எனக்கூறி தப்பித்துக் கொள்ளக்கூடாது,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்துார் கணபதிராஜ். இவர், மாசிலாமணி என்பவருக்குச் சொந்தமான வீட்டில் வசித்து வந்தார். வீட்டை காலி செய்ய, வாடகை கட்டுப்பாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் கணபதிராஜ் மனு செய்தார். 
அம்மனு பரிசீலனைக்கான ஆரம்ப கட்ட (எஸ்.ஆர்.,) எண் வழங்கப்பட்டது. பிரதான எண் வழங்கப்படவில்லை. இம்மனு நிலை நிற்கத்தக்கதா? என்ற தலைப்பின் கீழ் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. 
நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு விசாரித்தார். 
மனுதாரர் ஆஜராகி,“கீழமை நீதிமன்றம் சரியாக விசாரிக்கவில்லை. சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை சரியாக நடத்தவில்லை,” என்றார்.
நீதிபதி: 
ஏற்கனவே கீழமை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நிலுவையில் இருந்தபோது, அதை எதிர்த்து மனுதாரர் தாக்கல் செய்த மனுவை இந்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதன் பின் கீழமை நீதிமன்றம் வீட்டை காலி செய்யுமாறு உத்தரவிட்டது. 
ஏற்கனவே தாக்கல் செய்த வழக்கை மறைத்து, மனுதாரர் இங்கு மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார். அவர் உரிய மேல்முறையீட்டு நீதிமன்றத்தை நாடியிருக்க வேண்டும்.
பலமுறை மனுதாரர் ஆஜராகியும், இம்மனு நிலைத்து நிற்கத்தக்கதல்ல என இந்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 
சட்டம் பற்றி தெரியாமல் இருப்பது தவறில்லை. ஆனால், மனுதாரரே ஆஜராகி வாதிடும்போது, சட்டம் பற்றி அறிந்திருக்க வேண்டும். சட்ட உதவி மையத்தை அணுகி, அதன் சேவையை பயன்படுத்தியிருக்கலாம். 
மனுதாரரைப் போல் வழக்குகள் தொடர்பாக மனுதாரர்களே ஆஜராகி வாதிடும்போது எதை வேண்டுமானாலும் பேசலாம் என கருதுகின்றனர். 
சட்டத்திற்குட்பட்டு எதை பேச வேண்டுமோ அதையே வாதிட வேண்டும். சட்டம் தெரியாது எனக்கூறி தப்பித்துக் கொள்ளக்கூடாது.
மனுதாரரின் பொருளாதார நிலையை கருதி, கருணை அடிப்படையில் அவருக்கு அபராதம் விதிப்பதை தவிர்க்கிறேன். 
இனியாவது சரியான சட்ட வழிமுறைகளை மனுதாரர் பின்பற்றுவார் என இந்நீதிமன்றம் நம்புகிறது. 
மனு விசாரணைக்கு உகந்ததல்ல. மனுவை நிராகரிக்கிறேன், என்றார். 
நன்றி : தினமலர் நாளிதழ் - 25.02.2017

No comments:

Post a Comment