எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யலாம்!
சொகுசு விடுதியில் எம்.எல்.ஏ.,க்கள் வருமான வரித்துறை மவுனம் ஏன்?
கோவை:கூவத்துார் விடுதியில், சொகுசு வாழ்க்கை நடத்திய, எம்.எல்.ஏ.,க்கள் மீது ஊழல் தடுப்பு சட்டத்தில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழக அரசியலில் நிலவும் பரபரப்பான சூழலில், சசிகலா ஆதரவுடன் இடைப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்றார். பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்த பின், அமைச்சர் கள் உட்பட அனைவரும் கூவத்துார் விடுதிக்கு சென்றுள்ளனர். கூவத்துார் விடுதியில் அடைபட்ட, எம்.எல்.ஏ.,க்கள் மீது பொது மக்களின் கோபம் திரும்பியுள்ளது. தங்களது எண்ணத்துக்கு ஏற்ப செயல்படாத எம்.எல்.ஏ.,க் களை, ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என, தெரிவித்துள்ளனர்.
இதை வெளிப்படுத்தும் விதமாக, கூவத்துாரில் இருந்து பதவியேற்பு விழாவுக்கு கிளம்பி சென்ற, எம்.எல்.ஏ.,க்களை, பொதுமக்கள் கடுமையாக திட்டித் தீர்த்தனர். இதற்கிடையில், அரசு சம்பளம் வாங்கும் எம்.எல்.ஏ.,க்கள், சட்டவிரோதமாக சொகுசு விடுதியில் தங்கி, மறைமுகமாக யாரோ அளிக்கும் பணத்தில் பொழுதை கழிப்பதால், அவர் கள் மீது ஊழல் தடுப்பு பிரிவினர் மற்றும் வருமான வரித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, சட்ட நிபுணர்கள் கூறியதாவது:
ஊழல் தடுப்பு சட்டம், -1988ன் படி, அரசு ஊழியர்கள் மற்றும் அரசு பதவி வகிப்பவர்கள், தாங்கள் வாங்கும் சம்பளத்துக்கேற்ப தான் வாழ வேண்டும். சட்டவிரோதமாக, யாரோ ஒருவரது பணத்தில் வாழக் கூடாது. ஆனால், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க் கள், கூவத்துார் விடுதியில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளனர்.
அரசு பதவி வகிப்பவர்கள், எந்த ஒரு சலுகையும் பெறக் கூடாது. இதை மீறி, எம்.எல்.ஏ.,க்கள் யாரோ அளிக்கும் பணத்தில், சொகுசாக இருந்துள்ளனர். அவர்கள் வாங்கும் சம்பளத்தை காட்டிலும், பல மடங்கு சொகுசு நிறைந்த விடுதியில் தங்கி யுள்ளனர். நாள்தோறும், ஒரு எம்.எல்.ஏ., வுக்கு, 70 ஆயிரம் ரூபாய் செலவு செய்யப்படு கிறது. இதற்கான பணம், யாரிடம் இருந்து வருகிறது என, ஊழல் தடுப்பு பிரிவு மற்றும் வருமான வரித்துறையினர், உடனடியாக விசாரணை நடத்த வேண்டும்.
எந்தவித சட்டவிரோத பலனையும் அனுபவிக்க மாட்டேன் என, உறுதிமொழியுடன் பதவி யேற்கும் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க் கள், மறைமுக சலுகை பெற்றது சந்தேகங்களை எழுப்புகிறது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
அரசு பதவியில் உள்ள நபர்கள், தங்களது சம்பளத்துக்கு மீறி சட்டவிரோதமாக தங்கியுள்ள நிலையில், அவர்களின் எம்.எல்.ஏ., பதவியை தகுதிநீக்கம் செய்ய முடியும். ஆனால், ஊழல் தடுப்பு சட்டம் தெரிந்த அதிகாரிகள், ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுகிறது.
நன்றி : தினமலர் நாளிதழ் - 17.02.2017
No comments:
Post a Comment