disalbe Right click

Friday, February 10, 2017

சர்க்கரை நோயை வெல்லலாம்

சர்க்கரை நோயை வெல்லலாம்
இதயம், கல்லீரல், மூளையின் முக்கியத் துவம், செயல்பாடு பற்றி தெரிந்துவைத்துள்ள நமக்கு, கணையம் பற்றி அந்த அளவுக்குத் தெரியாது.
கணையத்தில் என்ன நடக்கிறது?
எப்படி இன்சுலின் செயல்திறன் பாதிப்பு ஏற்படுகிறது ?
செரிமான மண்டலத்தில், வயிற்றின் மையப் பகுதியில், இலைபோன்ற தோற்றத்தில் கணையம் அமைந்திருக்கிறது. கணையத்துக்கு இரண்டு முக்கியப் பணிகள் உள்ளன.
முதலாவது, ஹார்மோன்களைச் சுரந்து, ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள்வைக்கிறது.
இரண்டாவது, உணவு செரிமானம் ஆக சரியான நேரத்தில், என்சைம்களைச் சுரக்கிறது.
கணையத்தின் 95 சதவிகித திசுக்கள், உணவு செரிமானத்துக்கான நொதிகளைச் சுரக்கும் நாளமுள்ள சுரப்பியின் வேலையைச் செய்கின்றன. மீதம் உள்ள செல்கள் நாளமில்லா சுரப்பியின் பணியைச் செய்கின்றன. இந்த செல்களை `லாங்கர்ஹான்ஸ் திட்டுக்கள்என்போம்.
இங்கிருந்துதான், இன்சுலின் மற்றும் குளுக்ககான் எனும் இரண்டு ஹார்மோன்கள் சுரக்கின்றன. இன்சுலின் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கும் பணியையும், குளுக்ககான் சர்க்கரை அளவை அதிகரிக்கும் பணியையும் செய்கின்றன. ரத்தத்தில் சரியான அளவு சர்க்கரை இருக்க, இந்த இரண்டு ஹார்மோன்களும் முக்கியம்.
சாப்பிட்டதும் என்ன நடக்கிறது?
பைக், கார் என எந்த ஒரு வண்டியும் ஓட எரிபொருள் தேவை. அது பெட்ரோலாக இருக்கலாம், டீசலாக இருக்கலாம். அதுபோல, நம் உடல் என்ற வண்டி ஓட எனர்ஜி தேவை. இது, நாம் சாப்பிடும் உணவில் இருந்து கிடைக்கிறது.
நாம் உட்கொள்ளும் உணவு கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு என மூன்று வகையான பொருட்களால் ஆனது.
கார்போஹைட்ரேட் என்பது குளுக்கோஸ். இது உடனடியாக உடலுக்கு ஆற்றலைத் தருகிறது.
புரதச்சத்து மினோஅமிலத்தால் ஆனது. இது உடல் கட்டமைக்கப்பட அவசியம்.
கொழுப்பு அமிலங்களால் ஆனது. இவை செல்களின் உருவாக்கத்துக்கும் ஆரோக்கியத்துக்கும் மிகவும் அவசியம்.
கொழுப்பு எதிர்கால ஆற்றல் தேவைக்காக சேகரித்து வைக்கப்படுகிறது. நாம் சாப்பிடாமல் விரதம் இருந்தோம் என்றால், அந்த நேரத்தில் இந்தக் கொழுப்பு பயன்படுத்தப்படும்.
நாம் உணவு உட்கொண்டதுமே கணையம் தன்னுடைய வேலையைத் தொடங்கிவிடும். சாப்பிட்ட உணவு செரிமானம் செய்யப்பட்டு, குளுக்கோஸாக மாற்றப்பட்டு, ரத்தத்தில் கலந்ததுமே, கணையத்தில் இருந்து இன்சுலின் சுரந்து, ரத்தத்தில் கலக்கிறது.
இன்சுலினை சுமைதாங்கி என்று சொல்லலாம். இது, ரத்தத்தில் உள்ள குளுக்கோஸைசெல்களுக்குள் கொண்டுபோய் சேர்க்கும் வேலையைச் செய்கிறது.
இப்படிச் சரியாகச் செயல்பட்டால் மட்டுமே, ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். இன்சுலின் செல்களை அடைந்ததும், பூட்டு-சாவி போன்ற நுட்பத்தில் செல்கள் திறந்து, குளுக்கோஸை உள்ளே அனுமதிக்கின்றன. இந்த குளுக்கோஸ்தான் செல்களுக்கான உணவு.
இந்த பூட்டு-சாவி நுட்பம் வேலை செய்யாதபோதுதான் சர்க்கரை நோய் ஏற்படுவதற்குக் காரணமான இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் எனப்படும் இன்சுலின் செயல்திறன் குறைவு நிலை உருவாகிறது. இதற்கு, மிக முக்கியக் காரணமாக இருப்பது, நம்முடைய ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை.
அடிக்கடி சிறுநீர் கழித்தல், தாகம், பசி, உடல் எடை குறைதல் போன்றவற்றைச் சர்க்கரை நோயின் அறிகுறிகள்.
இந்த அறிகுறிகள் எப்படித் தோன்றுகின்றன?
ரத்தத்தில் சர்க்கரை இயல்பு நிலை என்பது 80 முதல் 140 மி.கி/டெசி லிட்டர். சர்க்கரை நோய் ஏற்பட இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் முக்கியக் காரணம். இதற்கு, உடல்பருமன், மனஅழுத்தம், புகைப்பழக்கம், உடல் உழைப்பு குறைவு போன்றவை காரணங்கள். இவை ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கக் காரணமாகின்றன.
சிறுநீரகம் 180 மி.கி/டெசி லிட்டர் வரையில் சர்க்கரையை ரத்தத்தில் இருக்க அனுமதிக்கும். 180-க்கும் மேல் செல்லும்போது, அதைச் சிறுநீர் வழியாக வெளியேற்றும். இதனால், சர்க்கரை நோய் வந்தால் முதலில் அதிகமாகச் சிறுநீர் கழிக்கத் தூண்டும். அதிகப்படியான சிறுநீர் வெளியேறுவதால், உடலில் நீரிழப்பு ஏற்படுகிறது. இதை ஈடுகட்ட தாகம் எடுக்கிறது.
இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் காரணமாக குளுக்கோஸ் செல்களுக்குள் சென்று சேராமல் சிறுநீரகம் வழியாக வெளியேறிவிடுவதால், உடல் இயங்க ஆற்றல் போதாமல் அடிக்கடி பசி எடுக்கிறது. என்னதான் சாப்பிட்டாலும், குளுக்கோஸ் ரத்தத்தில் கலந்தாலும் செல்களுக்கு ஆற்றல் கிடைக்கவில்லை என்பதால், உடல் எடை குறைகிறது.
ஸ்வீட்டர்:
காலையில் ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொண்டால், சர்க்கரை நோயைத் தவிர்க்கலாம்.
டயாபடீஸ் டவுட்
சர்க்கரை நோய்க்குப் பரிந்துரைக்கப்படும் மருந்துகளால் சிறுநீரகம் பாதிக்கப்படுமா?
இல்லை. சர்க்கரை நோய்க்கான மருந்துகள் மிகவும் பாதுகாப்பானவை. நீண்ட காலம் எடுத்தாலும் பிரச்னை ஏற்படுத்தாதது. பொதுவாக, ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இல்லாமல் போனால், சிறுநீரகப் பிரச்னை வரும். இந்தச் சூழ்நிலையில் உள்ளவருக்கு சர்க்கரை நோய்க்கான மருந்துகளைக் கொடுப்பதில் கவனம் தேவை. இவர்களுக்குத் தரப்படும் சர்க்கரை நோய்க்கான மருந்து, நிலைமையை இன்னும் மோசமாக்கலாம். எனவே, சர்க்கரை நோய் நிபுணரை அணுகி,ஆலோசனை பெற்றுவந்தால், இந்தப் பிரச்னையைத் தவிர்க்க முடியும்.
நன்றி : டாக்டர் விகடன் - (01/02/2016

No comments:

Post a Comment