disalbe Right click

Friday, February 10, 2017

மஞ்சள்காமாலை நோயல்ல… அறிகுறி!


மஞ்சள்காமாலை நோயல்ல… அறிகுறி!

நோயை வெல்வதற்கான முதல் படி, அதைப் பற்றிய விழிப்பு உணர்வை வளர்த்துக்கொள்வதுதான். நோய்களைப் பற்றிய வெளிச்சம் தந்து வரும் ‘நோய் நாடி’ தொடரில், இந்த இதழில் மஞ்சள்காமாலை பற்றி விரிவான மருத்துவத் தகவல்கள் தருகிறார், சென்னையைச் சேர்ந்த ஒய்வு பெற்ற அரசு பொதுநல மருத்துவர் நாராயணன்…
‘‘மஞ்சள்காமாலை ரொம்ப கடுமையான வியாதி… அவ்வளவு சுலபத்தில் குணப்படுத்த முடியாது என்றெல்லாம் பலரும் பேசக் கேட்டிருப்போம். உண்மையில், மஞ்சள்காமாலை என்பது ஒரு நோயே இல்லை. சில வியாதிகளின் அறிகுறி.
இந்த அறிகுறியைக்கொண்டு அந்த வியாதியைக் கண்டறிந்து, உரிய சிகிச்சை எடுத்து குணம் பெறுவது… இன்றைய மருத்துவத்தில் மிகவும் எளிதான விஷயமாகிவிட்டது. தேவை… அதைப் பற்றிய தெளிவே!’’ என்று பயம் அகற்றி அறிமுகம் தந்த டாக்டர், விரிவாகப் பேசத் தொடங்கினார்…
‘‘ரத்தத்தில் பிளிருபின் (Bilirubin) அளவு அதிகமாவதே, மஞ்சள்காமாலை எனலாம்.
பிளிருபின்… ஒரு விளக்கம்!பிளிருபின் என்பது, கொழுப்பைக் கரைக்கக்கூடிய ரத்தத்தில் உள்ள மஞ்சள் நிறமி. நம் உடலில் உள்ள ரத்தத்தில் பிளிருபின் அளவானது 1.2 மில்லி கிராமுக்குள் (சாதாரணமாக ஒரு நாளைக்கு 4 மில்லிகிராம் பிளிருபின் உற்பத்தியாகும்) இருக்க வேண்டும். அதைவிட அதிகரிக்கும்பட்சத்தில் அது மஞ்சள்காமாலையாக மாறிவிடும்.
அதாவது, பிளிருபின் என்பது ஒரு கழிவு என்பதால், அது மலம் வழியாகவும், சிறுநீர் வழியாகவும் வெளியேறும். பிளிருபின் உடலில் இருந்து வெளியேறுவதில் ஏதாவது பிரச்னை ஏற்படும்போது, அது நம் உடலில் தேங்கிவிடக்கூடும். பிளிருபின் மஞ்சள் நிறமி என்பதால், அது உடலில் மஞ்சள்காமாலையாக வெளிப்படுகிறது.
மஞ்சள்காமாலை மூன்று வகை!மஞ்சள்காமாலை என்பது பிறந்த குழந்தை முதல் வயதானவர் வரை யாருக்கு வேண்டுமானாலும் வரக்கூடியது. இந்நோயின் பாதிப்பை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். 1. சிறுவயதில் வருவது 2. கல்லீரல் பாதிப்பால் வருவது 3. பித்தப்பைக் கல்லால் வரக்கூடியது.
சிறு வயதில் வருவது: பிறந்த குழந்தைக்கு, அதாவது குழந்தை பிறந்த 3 முதல் 8 நாட்களில் வரக்கூடிய மஞ்சள் காமாலை இது. சிவப்பணுச் சிதைவினாலும், பிறவிக் குறைபாட்டாலும் ஏற்படக்கூடிய பாதிப்பு. இதில் குழந்தையின் உடல் முழுவதும் மஞ்சள் நிறமாக இருக்கும். அந்தக் குழந்தைகளை `அல்ட்ரா லைட்’டில் வைத்து சிகிச்சை கொடுக்க, குணம் பெறுவார்கள்.
கல்லீரல் பாதிப்பால் வருவது : வைரஸ் (ஹெபடைட்டிஸ் A, B, C, D, E, F, G), பாதிப்பு, புற்றுநோய், சிரோசிஸ் (Cirrhosis) என்னும் ஈரல் சுருங்கிப்போவது, ரத்தத்தில் பிளிருபின் அளவு கட்டுப்பாட்டில் இல்லாமல் அதிகமாவது, ஈரல் சரியாக வேலை செய்யாதது போன்றவை கல்லீரல் பாதிப்புக்குக் காரணமாகலாம். இவற்றில் வைரஸ் B மற்றும் C-யால் வரக்கூடிய மஞ்சள்காமாலை, தீவிரமாக இருக்கும்.
பித்தப்பைக் கல்லால் வரக்கூடியது: கணையத்தில் பித்தப்பைக் கல்லால் அடைப்பு ஏற்பட்டு பித்தம் உள்ளேயே தங்கிவிடுவது மற்றும் கணையத்தில் ஏதேனும் வியாதி ஏற்படுவது இந்த வகை மஞ்சள்காமாலையைத் தோற்றுவிக்கும்.
அறிவோம்… அறிகுறிகள்!
# கண்கள், உடல் மஞ்சள் நிறமாவது
# வாந்தி
# மலம் வெள்ளையாகப்போவது
# சோர்வு
# தலைவலி
# குமட்டல்
# எடை குறைவு
# காய்ச்சல்
# பசியின்மை
# உடல் அரிப்பு
# சிறுநீரில் இயல்புக்கு மீறிய மஞ்சள் நிறம்
# நாக்கு, உள் உதடு மற்றும் கைகளில் மஞ்சள் நிறப் புள்ளிகள்
மேற்சொன்னவை எல்லாம், மஞ்சள்காமாலையை வெளிப்படுத்தும் அறி குறிகள்.
பொதுவாக, தினமும் கண்ணாடியில் முகம் பார்த்தாலும், 90 சதவிகிதம் பேர் கண்களைக் கவனிப்பதில்லை. வழக்கமாகவே, முகம்போல கண்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்துக் கவனிக்க வேண்டும். கண்ணின் வெள்ளைப் பகுதியில் மஞ்சள் நிறமாகத் தெரிந்தால், அடுத்த இரண்டு தினங்களுக்கு எச்சரிக்கையோடு அதைக் கண்காணிக்க வேண்டும். அது மாறாத அல்லது அதிகரிக்கும்பட்சத்தில் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று சிறுநீர், ரத்தப் பரிசோதனை மற்றும் அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இந்தச் சோதனைகளை அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளிலும் செய்துகொள்ளலாம். அரசு மருத்துவமனைகள் மற்றும் சில தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இலவசமாகவும், மற்ற இடங்களில் குறைந்த கட்டணத்திலும் செய்துகொள்ளலாம். பரிசோதனையின் முடிவில் அது மஞ்சள்காமாலை என்று கண்டறியப்பட்டால் ஒரு நிமிடம்கூடத் தாமதிக்காமல் உடனடியான அதற்குரிய சிகிச்சையை ஆரம்பிக்க வேண்டும்.
என்னென்ன பாதிப்புகள் வரும்?கல்லீரல் சரியாக வேலை செய்யாமல், மூளை பாதிப்புவரை உண்டாகி, உரிய சிகிச்சையளிக்காவிட்டால் மரணம்வரை ஏற்படலாம்.
கோமா நிலை அடைய வாய்ப்புள்ளது.
HBsAg வைரஸால் (ஹெபடைட்டிஸ் பி-வைரஸில் ஒரு வகை)பாதிக்கப்பட்டவர்களைக் குணப்படுத்துவது சிரமம். இவர்களால் மற்றவர்களுக்கும் தொந்தரவுகள் ஏற்படும். ரத்தம் கொடுக்கமுடியாது. இவர்களுக்கு வெளிநாடு செல்ல அனுமதியில்லை.
மேற்சொன்ன பாதிப்புகள் எல்லாம், நோயைக் கண்டறியாமல், கண்டறிந்தும் உரிய சிகிச்சையளிக்காமல் விடுவதால் நேரும் பாதிப்புகளே. எனவே, மஞ்சள் காமாலை ஏற்பட்டாலே இந்த பாதிப்புகள் எல்லாம் நேரும் என்பதில்லை. மஞ்சள்காமாலைக்கான காரணத்தைக் கண்டறிந்து, அதற்கான சரியான சிகிச்சையை அளிக்கும்போது, இந்நோயை எளிமையாகக் குணப்படுத்த முடியும்.
சிகிச்சை முறைகள்!மஞ்சள்காமாலையைப் பொறுத்தவரையில் போதிய மாத்திரை, மருந்துகளும், தேவையான ஓய்வுமே அதைக் குணப்படுத்திவிடும். இயற்கை மருத்துவத்தில் கீழாநெல்லி இந்நோய்க்கு மிகச்சிறந்த மருந்து என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. கல்லீரல் பாதிக்கப்பட்டவர் களுக்கு ஈரல் மாற்று சிகிச்சைகள்கூட இன்றைக்குப் பரவலாக எல்லா இடங்களிலும் சாத்தியமாகியுள்ளது. HBsAg, மது அருந்து வதால் வரக்கூடிய சிரோசிஸ் என்னும் ஈரல் சுருங்கல் போன்ற பாதிப்புகளை மட்டும் குணப்படுத்துவது கஷ்டம். மற்றபடி மஞ்சள்காமாலை குறித்த அச்சத்தை தூரவைக்கும் மருத்துவ முன்னேற்றங்கள் வந்துவிட்டன.
மொத்தத்தில்,
முன்னெச் சரிக்கை நடவடிக்கை,
முறையான பரிசோதனை,
முழுமையான சிகிச்சை…
இவை மூன்றும் இருந்தால் மஞ்சள்காமாலையை எதிர்த்து வெல்லலாம்!’’
– விழிப்பு உணர்வோடு நம்பிக்கையும் தந்து முடித்தார் டாக்டர் நாராயணன்.
நோய் வராமல் தடுக்க!>>>கொதிக்கவைத்த தண்ணீர் குடிப்பது நல்லது.
>>>மலம் கழித்துவிட்டு கையைச் சரியாகக் கழுவாமல் உணவைத் தொடும்போது, உணவு வழியாக வைரஸ் பரவக்கூடும் என்பதால் ஒவ்வொரு முறை மலம் கழித்தபின்னும் சோப்பால் கைகளைத் சுத்தமாகக் கழுவ வேண்டும்.
>>>ஒவ்வொரு முறை சாப்பிடுவதற்கு முன்னும் கைகளைச் சுத்தமாகக் கழுவவேண்டியது கட்டாயம்.
>>>வெளியிடங்களில் மலம் கழிப்பது, மஞ்சள் காமாலை ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். அதிலும் வெஸ்டர்ன் டாய்லெட்டைப் பயன்படுத்தும் போது அதன் சுகாதாரத்தை உறுதிபடுத்திக்கொள்வது நல்லது.
>>>கழிவறையைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும், கழிவறைக்கு அருகில் சமையல் பொருட்கள், பாத்திரங்களை வைக்கக் கூடாது.
>>>காய்கறிகள், பழங்கள், கீரைகள் என எதையும் சுத்தமாகக் கழுவிய பிறகுதான் பயன்படுத்த வேண்டும்.
>>>அதிகமாக நகம் வளர்ப்பது, நகம் கடிப்பது கூடாது.
>>>அடுத்தவர்கள் பயன்படுத்திய பிரஷ், ஷேவிங் செட், சீப்பு, கைக்குட்டை போன்றவற்றைப் பயன்படுத்தக்கூடாது.
>>>பிறந்த 18 மாதக் குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மஞ்சள்காமாலைக் கான தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம். இந்த ஊசியை 0 மாதம், 1 மாதம், 6 மாதங்கள் என மூன்று இடைவெளிகளில் மூன்று டோஸ்களாகப் போட்டுக்கொள்ள வேண்டும்.
>>>மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட தாய், குழந்தைக்குப் பால் கொடுப்பதால் குழந்தைக்கும் பாதிப்பு வரக்கூடிய வாய்ப்பு உள்ளது. அதுவே தடுப்பூசி போட்டுக்கொண்ட தாய் எனில், குழந்தைக்கு பாதிப்பு வராது. அப்படியே வந்தாலும் பாதிப்பு குறைவாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
>>>கொழுப்பு சார்ந்த உணவுப் பொருட்களைத் தவிர்ப்பது மிக மிக நல்லது.
>>> சுகாதாரமற்ற உணவுகளை உட்கொள்ளும்போது, வைரஸ்கள் உடலுக்குள் சென்று கல்லீ ரலைப் பாதித்து, மஞ்சள் காமாலையை ஏற்படுத்தும் என்பதால் ரோட்டோர மற்றும் வெளியிட உணவுகளைத் தவிர்க்கவும்.
>>>மதுப்பழக்கம் கூடவே கூடாது.
>>>டிஸ்போசபிள் ஊசியையே பயன்படுத்த வேண்டும்.
நன்றி : அவள்விகடன் - 09.02.2016

No comments:

Post a Comment