வலிப்பு... ஏன்? எதற்கு? எப்படி?
நன்றி குங்குமம் டாக்டர்
அரிதாக வரும் நோயாக... ஆனால் ஆபத்து நிறைந்ததாக வரும் நோய் வலிப்பு. Epilepsy என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த நோய், உலக அளவில் 150 பேரில் ஒருவரை பாதிக்கிறது. இந்த வலிப்பு நோய் ஏன் வருகிறது, வந்தால் என்ன செய்ய வேண்டும், வராமல் தடுக்க என்ன வழி என்ற நம் சந்தேகங்களுக்கு முழுமையான விளக்கம் அளிக்கிறார் நரம்பியல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் ப்ரித்திகா சாரி.
வலிப்பு நோய் யாருக்கு வருகிறது?
‘‘உடல் உறுப்புகளில் மிகவும் முக்கியமான ஒன்று மூளை. மூளையில் ஏற்படக்கூடிய தொந்தரவுகளால் கைகள், கால்களில் அடுத்தடுத்து காரணமில்லாமல் உதறல் ஏற்படுவதை வலிப்பு நோய்(Epilepsy) என்கிறோம். நமது உடலில் உள்ள நரம்பு செல்களே உடலின் மொத்த இயக்கத்தையும் கட்டுப்படுத்துகிறது.
மூளை மற்றும் நரம்பு செல்களுக்கு இடையே செல்லும் மின் அதிர்வுகளில் தடை ஏற்படும் போதுதான் இதுபோல் வலிப்பு உண்டாகிறது. பெரும்பாலும் வலிப்பு நோய் 10 முதல் 25 வயது வரை உள்ளவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படுகிறது. அதாவது, மூளை வளரும் பருவத்தில் உள்ளவர்கள் மற்றும் முதுமை அடைந்த மூளை உடையவர்களுக்கு இந்த நோய் அதிக அளவு ஏற்படுகிறது.’’
வலிப்பு வருவதற்கான காரணங்கள் என்ன?
‘‘10 பேரில் ஒருவருக்கு தூக்கமின்மை, கடுமையான வெயிலில் அதிக நேரம் இருப்பது, அதிக நாட்கள் பட்டினியோடு இருப்பது மற்றும் அதிர்ச்சி தரக்கூடிய செய்திகளைக் கேட்கும்போது என சில தூண்டுதல்களால் வலிப்பு வருகிறது. சிலருக்கு என்ன காரணத்தால் வலிப்பு வந்ததென்று கண்டுபிடிக்க முடியாமலும் போகும்.
ஆனால், பொதுவாக வலிப்பு வருவதற்கு என்று சில காரணங்கள் உள்ளன. இந்த காரணங்கள் ஒவ்வொருவரின் வயதுக்கேற்ப மாறுபடும். குழந்தை பிறக்கும்போது தலையில் அடிபடுவதால் வலிப்பு வரலாம். வைட்டமின் B6, கால்சியம், குளுக்கோஸ் போன்ற சத்துக்கள் குறைவதாலும் வரலாம். மூளைக்காய்ச்சல் காரணமாகவும் குழந்தைகளுக்கு வலிப்பு ஏற்படுகிறது.
இதில் 5 முதல் 7 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு வரும் அதிக காய்ச்சலால் ஏற்படும் வலிப்பினை Febrile Seizure என்கிறோம்.இந்த காரணங்கள் தவிர நரம்பு மண்டலத்தில் ஒட்டுண்ணிகளால் ஏற்படும் நோய்கள் மற்றும் நச்சுத்தன்மை (காரீயம், பூச்சிமருந்துகள், சாராயம்) உடலுக்குள் செல்லும்போதும் வலிப்பு ஏற்படுகிறது. தலையில் அடிபடுவது, மூளையில் கட்டி ஏற்படுவது, ரத்த ஓட்ட பாதிப்பு, மூளை வளர்ச்சியில் ஏற்படும் கோளாறுகள் மற்றும் மரபணு தன்மை போன்ற காரணங்களாலும் வலிப்பு ஏற்படுகிறது.’’
இதில் வகைகள் ஏதேனும் உண்டா?
‘‘மூளையில் ஏற்படும் பாதிப்பின் அளவுகள் மற்றும் அறிகுறிகளின் அடிப்படையில் வலிப்பு நோய் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது. மூளையின் மொத்தப்பகுதியும் பாதிக்கப்படும்போது, உடல் முழுவதும் அந்த வலிப்பு எதிரொலிக்கும். இதற்கு Generalized Seizure என்று பெயர். இதற்குள் உட்பிரிவாக 5 வகைகள் உள்ளன.நினைவாற்றல் தவறுதல், கை, கால்களில் விறைப்புத்தன்மை மற்றும் உடல் உதறுதல், வாயில் நுரைதள்ளுதல், சில சமயம் தன்னை அறியாமல் சிறுநீர், மலம் கழிப்பது போன்ற அறிகுறிகளோடு வருவதை Tonic clonic generalized seizure என்கிறோம்.
இந்த அறிகுறிகளோடு கை, கால் வெட்டுதல் இல்லாமல் இருப்பதற்கு Tonic Seizure என்று பெயர். உடல் திடீரென நிலைகுலைந்து போதல், தற்காலிக மறதி மற்றும் ஞாபகமின்மை போன்ற அறிகுறிகளோடு இருப்பதை A Tonic Seizure என்கிறோம். தலை மற்றும் உடலின் மேல்பாகத்தி–்ல் திடீரென தொய்வு ஏற்பட்டு கீழே கவிழ்ந்து விடுவதை Myoclonic Seizure என்கிறோம். சில நொடிகள் உணர்வில்லாமல் போவது மற்றும் கண்சிமிட்டுவது போன்ற அறிகுறிகளோடு இருப்பதை Absence seizure என்கிறோம்.
இதேபோல் மூளையில் குறிப்பிட்ட பாகத்தில் ஏற்படும் பாதிப்பினால் வரக்கூடிய வலிப்பிற்கு Partial Seizure என்று பெயர். இந்த பிரிவில் 2 வகைகள் உள்ளன. இந்த இரண்டு வகைகளிலும் உடலிலுள்ள முகம், கை, கால் போன்ற ஏதாவது ஒன்றில் ஒரே பக்கத்தில் வெட்டுதல் ஏற்படுகிறது. நினைவாற்றல் மாறாமல், உடலின் ஒரு பாகத்தில் கை, கால்களில் வெட்டுதல் ஏற்படுவதை Simple partial Seizure என்கிறோம்.
நினைவாற்றலில் மாற்றம் ஏற்பட்டு, நினைவு தவறுதல், மனக்குழப்பம் மற்றும் பிதற்றுதல் போன்ற அறிகுறிகளோடு இருப்பதை Complex partial Seizure என்கிறோம். இந்த வகையினர் சில சமயம் சுயநினைவில்லாமல் அங்கும் இங்குமாக நடப்பது, ஆடைகளைக் கழற்ற முயற்சிப்பது, வாய், முகபாவனைகளில் மாற்றம் ஏற்படுவது, இதைத் தொடர்ந்து குழப்பமான முகத்தோற்றத்தோடும் இருப்பார்கள். இதனால் அவர்களுக்கு ஆபத்துகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.’’
வலிப்புக்கான சிகிச்சைகள் என்ன?
‘‘வலிப்பு நோயாளியிடம் தோன்றும் அறிகுறிகளை வைத்து, எந்த வகை வலிப்பு என்பதை மருத்துவர் முதலில் கண்டறிய வேண்டும். ரத்தப் பரிசோதனை, எக்ஸ்ரே, EEG பரிசோதனைகள், எம்.ஆர்.ஜ. ஸ்கேன் மற்றும் வீடியோ டெலிமெட்ரி பரிசோதனைகள் மூலமாக வலிப்பு நோயின் தன்மைகளை கண்டறியலாம்.வலிப்பு நோயின் வகை மற்றும் அறிகுறிகளுக்கு ஏற்றாற்போல சிகிச்சை அளிக்க வேண்டும். மருத்துவர் சரியான மருந்தை சரியான அளவில் கொடுக்கும்போது பலருக்கு வலிப்பு கட்டுப்படுத்தப்படுகிறது.
அப்படி வலிப்பு மருந்துகளுக்கு கட்டுப்படாதபோது மூளை அறுவைச் சிகிச்சை மற்றும் கீட்டோஜெனிக் டயட் (அதிக கொழுப்பு சத்துள்ள உணவு) மருத்துவ முறை அவர்களுக்கு பரிசீலிக்கப்படுகிறது. 70 சதவிகிதம் வலிப்பு உள்ளவர்களுக்கு 3 முதல் 5 வருடங்கள் வரை மருந்துகள் சாப்பிட்ட பின்பு வலிப்பு வராமல் இருந்தால் மருந்துகளை நிறுத்திவிட வாய்ப்பு உள்ளது.பெரும்பாலும் வலிப்பு நோயின் பாதிப்புகளை மருத்துவர்களால் நேரில் பார்க்க முடிவதில்லை.
அப்படி பாதிப்பின் அறிகுறிகளை நேரில் பார்த்தவர்கள் சொல்லும் தகவலானது, நோய் பாதிப்பின் தன்மைகளை அறிந்து, மருத்துவர் சரியான சிகிச்சையளிக்க உதவியாக இருக்கும். அதற்கு வலிப்பின் அறிகுறிகள் பற்றிய சரியான தகவல்களை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். மேலும் வலிப்பு வருகிறபோது செய்ய வேண்டிய முதலுதவிகளை தெரிந்து கொள்வதும் அவசியம்.’’
வலிப்பு வந்தவர்களுக்கு செய்ய வேண்டிய முதலுதவி என்ன?
‘‘வலிப்பு நோயின் அறிகுறிகள் ஒருவரிடம் தென்பட்டால் பயம் கொள்ளவோ, பதற்றப்படவோ கூடாது. அவரை சுற்றியுள்ள சூழ்நிலையை அமைதியாக்க வேண்டும். வலிப்பு வந்தவர்களை கீழே விழாதவாறு பிடித்து தரையில் அமர்த்த வேண்டும். வலிப்பு வந்தவரின் தலையின் கீழ் மென்மையான துணி அல்லதுதலையணையை தலையில் அடிபடாமல் இருக்குமாறு வைக்க வேண்டும்.
உடலில் அடிபடாமல் இருக்க அருகிலுள்ள பொருட்கள் மற்றும் அவரது கையில் உள்ள கூர்மையான பொருட்களை அகற்றிவிடுவது நல்லது. உடல் மற்றும் கழுத்தைச் சுற்றியுள்ள ஆடைகள் இருக்கமாக இருந்தால், தளர்வுபடுத்த வேண்டும். சுவாசம் சீராக இருக்க ஒரு பக்கமாக உடலும், தலையும் இருக்கும்படி திருப்பி வைக்க வேண்டும். இதனால் வாயிலிருந்து வரும் உமிழ்நீர் மூச்சுக்குழலுக்குள் செல்வது தவிர்க்கப்படுகிறது.
வலிப்பிலிருந்து முழுவதும் மீண்டு வரும்வரை, அருகிலிருந்து கவனித்து அவர்களை சமாதானப்படுத்த வேண்டும்.முக்கால்வாசி வலிப்புகள் ஒன்றரை அல்லது இரண்டு நிமிடங்களில் அதுவாகவே அடங்கிவிடும். அடுத்தடுத்து வலிப்பு வந்தாலோ, தொடர்ந்து 10 முதல் 15 நிமிடங்களுக்கு மேல் வலிப்பு இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்
வலிப்பு வந்தால் செய்யக் கூடாதவை என்ன?
‘‘வலிப்பின் போது ஏற்படும் கை, கால் வெட்டுதலை அடக்கிப் பிடிக்கக் கூடாது. கையில் சாவி கொடுப்பது, மூக்கில் செருப்பைக் காட்டுவது போன்ற செயல்களை செய்யக் கூடாது. வாயிலிருந்து வெளிவரும் நுரை மூச்சுக்குழலுக்குள் சென்றால் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.வலிப்பிலிருந்து முழுவதும் மீண்டு வரும்வரை எந்த விதமான ஆகாரமோ, தண்ணீரோ கொடுக்கக் கூடாது. வலிப்பின்போது மருந்து, மாத்திரை மற்றும் தண்ணீ–்ர் கொடுக்கக் கூடாது. வாயில் எந்த பொருளையும் திணிக்கக் கூடாது. ஆபத்தான சூழ்நிலை தவிர மற்ற சூழ்நிலைகளில் வலிப்பு முழுவதும் நிற்கும் வரை வலிப்பு வந்தவர்களை அந்த இடத்தைவிட்டு மாற்ற முயற்சிக்க கூடாது.’’
வலிப்பு நோயைத் தடுக்க செய்ய வேண்டியது என்னென்ன?
‘‘வலிப்பு ஏற்படும் சூழ்நிலைகளை அறிந்து, அதை தவிர்க்க வேண்டும். மருத்துவர் பரிந்துரை செய்யும் மருந்துகளை சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும். வலிப்புக்கு கொடுக்கப்படும் மருந்துகளால் சிலருக்கு தலைசுற்றல், மயக்கம், குமட்டல், தூங்கிக்கொண்டே இருத்தல், நிலையாக நிற்க இயலாமை, கை, கால் நடுக்கம், மாறுபட்ட செயல்பாடுகள், வயிற்று எரிச்சல், தோல் தடிப்புகள், எடை கூடுதல், வாய் உலர்ந்துபோதல், கண்பார்வை கோளாறுகள் போன்ற பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இப்படி அந்த மருந்தினால் ஏற்படும் பக்க விளைவுகளை உடனடியாக மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
வலிப்பு சிலருக்கு தூங்கும் போதும், விழித்திருக்கும் போதும் ஏற்படுகிறது. தூக்கமின்மையும் சிலருக்கு வலிப்பு ஏற்பட காரணமாகிறது. இதனால் சரியான நேரத்துக்கு தூங்கி எழுவது அவசியம். பகல் தூக்கத்தைத் தவிர்க்க வேண்டும். தூங்கும் இடம் காற்றோட்டமாக, வெளிச்சமின்றி, மிதமான தட்பவெப்ப நிலையில் இருப்பது அவசியம். பாட்டில் குளிர்பானங்கள், துரித உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது.
இயற்கையான உணவு வகைகளை சாப்பிடுவதோடு, சமச்சீரான உணவு முறையை பின்பற்ற வேண்டும்.உணவில் காய்கறிகள், பழங்களை அதிக அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
வலிப்பு நோய் உள்ளவர்கள் திருமணம் செய்வது, குழந்தைகள் பெற்றுக் கொள்வது, படிப்பது மற்றும் பிறரைப் போன்று வேலைகள் செய்வதை மருத்துவரின் ஆலோசனையுடன், சில கட்டுப்பாடுகளோடு செய்யலாம். வலிப்பு நோய் இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி நடந்து கொண்டால் மற்றவர்களைப் போன்று, எல்லோருடனும் இணைந்து முழுமையான வாழ்க்கையை வாழ முடியும்!’’
- க.கதிரவன்
நன்றி : தினகரன் நாளிதழ் - 03.02.2017
No comments:
Post a Comment