disalbe Right click

Friday, March 31, 2017

வருமான வரியில் மாற்றம்: 10 அம்சங்கள்


வருமான வரியில் மாற்றம்: 10 அம்சங்கள்

புதுடில்லி: அரசு துறைகளில் பணியாற்றும் பல லட்சம் ஊழியர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் கோடிக்கணக்கான ஊழியர்களுக்கு, இன்று( ஏப்ரல்1 ) புது நிதியாண்டு பிறந்துள்ளது. மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் பட்ஜெட் தாக்கலின் போது வருமான வரி நடைமுறையில் சில மாற்றங்களை கொண்டு வந்தது. அந்த மாற்றங்கள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன. இதேபோல், பல மாற்றங்களுடன் நிதி மசோதாவும் லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்கள் குறித்த, 10 அம்சங்கள்:
1.ஆண்டு வருமானம், 2.5 லட்சம் ரூபாயில் இருந்து, ஐந்து லட்சம் ரூபாய்க்குள் இருப்பவர்களுக்கான வருமான வரி, 10 சதவீதத்தில் இருந்து, 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவில் வருபவர்களுக்கு இதன் மூலம், 12,500 ரூபாய் வரித் தொகையில் குறையும். இதேபோல், ஐந்து லட்சம் ரூபாயில் இருந்து, 50 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு, 12,900 ரூபாயும்; ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு, 14,806 ரூபாயும் வருமான வரி குறையும்.

புதிய வருமான வரி படிவம்
2. தொழில் மூலம் கிடைக்கும் வருமானத்தை தவிர்த்து, ஆண்டு வருமானம், ஐந்து லட்சம் ரூபாய் வரை உள்ளவர்கள், வருமான வரி கணக்கு செலுத்த, ஒரே ஒரு பக்கம் கொண்ட படிவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறையின் கீழ் முதல் முறையாக வருமான வரி கணக்கு தாக்கல் 
செய்யபவர்களை வருமான வரித்துறை ஆய்வு செய்யாது.

3. 2017 - 18 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை தாமதமாக, 2018 டிசம்பர் 31ம் தேதி தாக்கல் செய்தால், 5,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். அந்த தேதிக்கு பிறகு தாக்கல் செய்யப்பட்டால், அபராத தொகை உயரும். எனினும், ஐந்து லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்கள் தாமதமாக தாக்கல் செய்தால், 1,000 ரூபாய் வரை மட்டுமே அபராதம் விதிக்கப்படும்.

4. ராஜிவ்காந்தி பங்கு சந்தை சேமிப்பு திட்டத்தின் கீழ் முதலீடு செய்யபவர்கள், அந்த தொகையை வருமான வரி கணக்கில் காட்டி கழித்து கொள்ளலாம் என, 2012 - 13ல் அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. ஆனால், 2018 -19 நிதியாண்டுக்கு பிறகு இந்த சலுகை கிடைக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அசையா சொத்து முதலீடு
5. அசையா சொத்துக்களில் முதலீடு செய்பவர்கள், அவற்றுக்கு வரி செலுத்தாமல் மூன்று ஆண்டுகள் வரை வைத்து இருக்கலாம் என்ற நடைமுறை முன்பு இருந்தது. தற்போது, அது, இரண்டு ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு மேல், அசையா சொத்தில் முதலீடு செய்துள்ளவர்களுக்க, 20 சதவீதம் வரை வரி விதிக்கப்படும்.

6. நீண்டகால முதலீடுகள் மூலம் லாபம் பார்க்க நினைப்பவர்களுக்கும் புது சிக்கல் வந்துள்ளது. இதற்கான அடிப்படை ஆண்டு, 1981 ஏப்ரல், 1ம் தேதியில் இருந்து, 2001 ஏப்ரல், 1ம் தேதியாக மாற்றப்பட்டுள்ளது. 

7. தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையமான நகாய், ஆர்.இ.சி., ஆகியவற்றின் பத்திரங்களில் முதலீடு செய்யபவர்களுக்கு வரிவிலக்கு சலுகை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சலுகை மேலும் சில பத்திரங்களுக்கு விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

8. மாத வாடகையாக, 50,000 ரூபாய்க்கு மேல் வசூலிக்கும் தனி நபர்கள், 5 சதவீத டி.டி.எஸ்., பிடித்தம் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அதிக தொகையை வாடகையாக பெறுபவர்களில் ஏராளமானோர் வரி வரம்புக்குள் கொண்டு வரப்படுவார்கள். இது, வரும் ஜூன், 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

ஆதார் கட்டாயம்
9.ஜூலை, 1ம் தேதி முதல் பான் கார்டு கேட்டு விண்ணப்பிப்பவர்களும், வருமான வரி கணக்கு செலுத்துபவர்களும் ஆதார் எண்ணை தெரிவிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இத்துடன், ரொக்க பண பரிமாற்ற அளவு, இரண்டு லட்சம் ரூபாய் வரை என வரையறுக்கப்பட்டுள்ளது. கறுப்பு பண புழக்கத்தை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

10. தேசிய பென்ஷன் திட்டத்தின் கீழ் உள்ள தொகையில் ஒரு பகுதியை திரும்ப பெறுபவர்கள், அதற்காக எந்த வரியையும் செலுத்த வேண்டாம். அதாவது பென்ஷன் தொகையில், 25 சதவீதம் வரை அவசர தேவைக்காக, பணி ஓய்வு பெறுபவதற்கு முன்பே திரும்ப பெறலாம். அதே போல், பணி ஓய்வு பெறும் போது, பென்ஷன் தொகையில், வரி ஏதும் இல்லாமல், 40 சதவீதம் வரை திரும்ப பெறலாம்.

இத்துடன், கார், இருசக்கர வாகனம், மருத்துவ காப்பீடு ஆகியவற்றுக்கான பிரிமியம் தொகை, இன்று முதல் அதிகரிக்கிறது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் கணக்கு வைத்து இருப்பவர்கள், குறைந்தபட்ச தொகையை இருப்பு வைக்காமல் இருந்தால், அபராதம் செலுத்தும் திட்டமும், இன்று முதல் அமலுக்கு வருகிறது. 

நன்றி : தினமலர் நாளிதழ் -01.04.2017

மினிமம் பேலன்ஸ் இல்லையென்றால் இன்றுமுதல் அபராதம்


மினிமம் பேலன்ஸ் இல்லையென்றால் இன்றுமுதல் அபராதம்

உங்க எஸ்பிஐ வங்கிக்கணக்கில் பணம்  மினிமம் பேலன்ஸ் இருக்கா! இல்லாவிட்டால் இன்று முதல் அபராதம் 

எஸ்பிஐ வங்கிகணக்கில் மினிமம் பேலன்ஸ் இன்றுமுதல் வைத்துக்கொள்வது அவசியமாகிறது. இல்லையெனில் அபராதம் செலுத்த வேண்டும்.

டெல்லி: எஸ்பிஐ எனப்படும், பாரத ஸ்டேட் வங்கி இன்று முதல் முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன்படி வங்கிக் கணக்கில் மினிமம் பேலன்ஸ் வைத்திருக்காதவர்களிடம் இன்று முதல் அபராதம் வசூலிக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

எஸ்பிஐ எனப்படும், பாரத ஸ்டேட் வங்கி உடன், அதன் ஐந்து துணை வங்கிகள், இன்று முதல் இணைக்கப் படுகின்றன. இதனையடுத்து அந்த ஐந்து துணை வங்கி கிளைகள் எஸ்பிஐ வங்கி கிளைகளாக செயல்பட துவங்கும். 

1) ஸ்டேட் பேங்க் ஆப் பிகானிர் அண்டு ஜெய்ப்பூர், 2) ஸ்டேட் பேங்க் ஆப் ஹைதராபாத், 3) ஸ்டேட் பேங்க் ஆப் மைசூரு, 4) ஸ்டேட் பேங்க் ஆப் பாட்டியாலா,         5)  ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர் ஆகிய ஐந்து துணை வங்கியின் வாடிக்கையாளர்கள், எஸ்பிஐ வாடிக்கையாளர்களாக மாறுவர். பாரதிய மகிளா வங்கியும் எஸ்பிஐ உடன் இணைக்கப்படுகிறது. 

இந்த இணைப்பு ஒரு பக்கம் இருக்க எஸ்பிஐ வங்கி மினிமம் பேலன்ஸ் பற்றியும் அபராதம் எவ்வளவு விதிக்கப்படும் என்பது பற்றியும் மிக முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.

மினிமம் பேலன்ஸ் 

எஸ்பிஐ வங்கியில் மெட்ரோ நகரங்களில் உள்ள வங்கி கணக்குகளில் 5,000 ரூபாய் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருக்க வேண்டும். 50 சதவீதம் வரை குறைவாகக் குறைந்தபட்ச இருப்புத் தொகை இருந்தால் 50 ரூபாயும், 50 முதல் 75 சதவீதத்திற்கும் குறைவாகக் குறைந்தபட்ச இருப்புத் தொகை இருந்தால் 75 ரூபாயும், 75 சதவீதத்திற்கும் குறைவாக ஜீரோ பேலன்ஸ் இருந்தால் 100 ரூபாயும் அபராதமாகச் செலுத்த வேண்டும்.

அபராதம் எவ்வளவு 

புறநகர்ப் பகுதிகள் எஸ்பிஐ வங்கி கணக்குகளில் 3,000 ரூபாய் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருக்க வேண்டும். 50 சதவீதம் வரை குறைவாகக் குறைந்தபட்ச இருப்புத் தொகை இருந்தால் 40 ரூபாயும், 50 முதல் 75 சதவீதத்திற்கும் குறைவாகக் குறைந்தபட்ச இருப்புத் தொகை இருந்தால் 60 ரூபாயும், ஜீரோ பேலன்ஸ் இருந்தால் 80 ரூபாயும் அபராதமாகச் செலுத்த வேண்டும்.

நகரங்களில் வங்கிக்கணக்கு 

நகரப் பகுதிகளில் வங்கி கணக்கு வைத்துள்ளவர்கள் 2,000 ரூபாய் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருக்க வேண்டும். 50 சதவீதம் வரை குறைவாகக் குறைந்தபட்ச இருப்புத் தொகை இருந்தால் 25 ரூபாயும், 50 முதல் 75 சதவீதத்திற்கும் குறைவாகக் குறைந்தபட்ச இருப்புத் தொகை இருந்தால் 50 ரூபாயும், 75 சதவிகிதத்திற்கும் குறைவாக அதாவது ஜீரோ பேலன்ஸ் இருந்தால் 75 ரூபாயும் அபராதமாகச் செலுத்த வேண்டும்.

கிராம வங்கிக் கணக்கு 

கிராமப் பகுதிகளில் வங்கி கணக்கு வைத்துள்ளவர்கள் 1,000 ரூபாய் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருக்க வேண்டும். 50 சதவீதம் வரை குறைவாகக் குறைந்தபட்ச இருப்புத் தொகை இருந்தால் 20 ரூபாயும், 50 முதல் 75 சதவீதத்திற்கும் குறைவாகக் குறைந்தபட்ச இருப்புத் தொகை இருந்தால் 30 ரூபாயும், 75 சதவீதத்திற்கும் குறைவாக ஜீரோ பேலன்ஸ் இருப்புத் தொகை இருந்தால் 50 ரூபாயும் அபராதமாகச் செலுத்த வேண்டும். செக் புக் இல்லாத வங்கி கணக்குகளுக்கு 500 ரூபாய் குறைந்தபட்ச இருப்புத் தொகை இருந்தால் போதுமானது.

ஏடிஎம் கட்டண வசூல்

 எஸ்பிஐ ஏடிஎம் வாடிக்கையாளர்கள் முதல் 5 பரிவர்த்தனையை இலவசமாகப் பெற முடியும், இதுவே அதனை மீறும் போது 10 ரூபாய் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். இதுவே பிற வங்கி ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்கும் போது மூன்று முறை இலவசமாகவும் அதற்கு அதிகமான முறை பணம் எடுக்கும் போது 20 ரூபாய் கட்டணமாகவும் வசூலிக்கப்படும்.

இணையதள பண பரிவர்த்தனை 

1,000 ரூபாய்க்கும் குறைவாக 20 முறை இலவசமாகவும், 1,000 ரூபாய் முதல் 25,000 ரூபாய் வரை பரிவர்த்தனை செய்யும் போது 40 முறை இலவசமாகவும், அதற்கு அதிகமான தொகைக்குப் பணப் பரிவர்த்தனை செய்யும் போது முழுவதும் இலவசமாகவும் இணையதள வங்கி சேவை மூலம் பரிமாற்றம் செய்யலாம். இங்குக் கொடுக்கப்பட்ட வரம்பை மீறும் போது ஒரு பரிவர்த்தனைக்கு 5 ரூபாய்க் கட்டணமாக வசூலிக்கப்படும்.

நன்றி : ஒன்இந்தியா  » தமிழ்  » செய்திகள்  » 01.04.2017

ஸ்மார்ட் கார்டு பெற என்ன செய்ய வேண்டும்?


ஸ்மார்ட் கார்டு பெற என்ன செய்ய வேண்டும்?

மதுரை, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மூலம், மதுரை மாவட்டத்தில் ரேஷன் கார்டுக்கு பதிலாக, ஏப்.,1 முதல் 'ஸ்மார்ட் கார்டு' வழங்கப்பட உள்ளது.

'ஸ்மார்ட் கார்டு'கள் வினியோகம் குறித்த விபரம், ரேஷன் கார்டுதாரர்களின் அலைபேசி எண்ணிற்கு ஒருமுறை கடவுச்சொல் ஓ.டி.பி.,(ஒன் டைம் பாஸ்வேர்டு) எண் பதிவு செய்து குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.,) அனுப்பப்படும். 

அது வரப்பெற்ற கார்டுதாரர்கள் தற்போதைய ரேஷன் கார்டு, ஆதார் அட்டை அசல் நகல் மற்றும் எஸ்.எம்.எஸ்., வரப்பெற்ற அலைபேசியுடன் சிறப்பு முகாமிற்கு செல்ல வேண்டும். 

ஒப்புதல் பட்டியலில் கையொப்பமிட்டு, புதிய 'ஸ்மார்ட் ரேஷன் கார்டை பெறலாம். இதற்கு கட்டணமில்லை.

இதுவரை அலைபேசி எண்ணை பதிவு செய்யாதவர்கள், உடனடியாக ரேஷன் கடைகளில் பதிவு செய்ய வேண்டும்.

'ஸ்மார்ட் ரேஷன் கார்டு' குறித்த எஸ்.எம்.எஸ்., வராமல் இருந்தால் அச்சப்பட தேவையில்லை. 

அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் 'ஸ்மார்ட் கார்டு' வழங்கப்படும் என கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்தார்.

நன்றி : தினமலர் நாளிதழ் - 31.03.2017

நெடுஞ்சாலையில் மதுக்கடைகள் - சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு


நெடுஞ்சாலையில் மதுக்கடைகள் - சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

நெடுஞ்சாலை டாஸ்மாக் மட்டுமல்ல... பார் உள்ள ஸ்டார் ஹோட்டல், பப்புகளுக்கும் தடை உச்ச நீதிமன்றம் அதிரடி 

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையில் மதுக்கடைகள் இருப்பதால், வாகன ஓட்டிகளை அது ஈர்க்கிறது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. 

எனவே, நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மதுபானக் கடைகளை அகற்ற வேண்டும்' என்று வழக்கறிஞர் பாலு 2012-ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். 

இந்த வழக்கில், தமிழகத்தின் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் 500 மீட்டர் தூரத்துக்குள் அமைந்துள்ள கடைகளை அகற்றுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த உத்தரவுக்குத் தடை கோரி தமிழக அரசு சார்பில், வழக்குத் தொடரப்பட்டது. 

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட், ''நாடு முழுவதும் உள்ள தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள கடைகளை அகற்ற வேண்டும். 2017 ஏப்ரல் 1-ம் தேதிக்குப் பிறகு, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் எந்த ஒரு மதுபான விற்பனை கடையோ, பாரோ இருக்கக் கூடாது. மேலும், 'மதுக்கடைக்குச் செல்லும் வழி' என்ற விளம்பரத்தைக்கூட நெடுஞ்சாலைகளில் வைக்கக் கூடாது'' என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்கத் தீர்ப்பை 2016 டிசம்பர் 15-ம் தேதி வெளியிட்டார். 

இதையடுத்து, 'தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தொலைவைத் தாண்டியே கடைகள் இருக்க வேண்டும் என்பதை 100 மீட்டராக மாற்றியமைக்க வேண்டும். காலக்கெடுவை நவம்பர் 28 வரை நீட்டிக்க வேண்டும். தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என்று தமிழக அரசு மனு செய்திருந்தது. 

அதேபோல், 'இந்தத் தடையால் எங்களுக்குப் பல கோடி ரூபாய் வரி வருவாய் இழப்பு ஏற்படும். மேலும், நட்சத்திர விடுதிகள், பார் போன்ற இடங்களிலும் மது விற்பனை செய்யப்படுகிறது. இவையும் 500 மீட்டர் தூரம் என்ற அளவீட்டில் அடங்குமா ?' என்று சில தெளிவு கேட்டும்' பல மாநிலங்களும் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தன. 

இந்த வழக்கை உச்சநீதிமன்ற இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வந்தது. கடந்த திங்கட்கிழமையில் இருந்து தீர்ப்புக்காக மாநில அரசுகள் காத்திருந்தன. ஆனால், அமர்வில் அடங்கிய நீதிபதி விடுப்பில் சென்றதால், தீர்ப்பு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. இந்தநிலையில், வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வினர், 'ஏப்ரல் 1-ம் தேதி முதல் நெடுஞ்சாலையில் உள்ள கடைகள் செயல்படக்கூடாது' என்று உறுதிபடத் தெரிவித்ததோடு, தீர்ப்பு தேதியையும் இன்றைய தினத்துக்கு (31-03-2017) ஒத்திவைத்தனர். 

இதையடுத்து, இன்று  (31-03-2017)  பிற்பகல் தீர்ப்பு வெளியாகியுள்ளது. 

அதில், 'எல்லா வகையான மது விற்பனை நிலையங்கள், கடைகள், உணவங்களுக்கும் இந்தத் தீர்ப்பு பொருந்தும்' என்று உச்ச நீதிமன்றம் உறுதியாகக் கூறிவிட்டது. மேலும், 'மேற்கண்ட விற்பனைகளுக்கு இந்த உத்தரவு பொருந்தாது என்றால், எந்த நோக்கத்துக்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறதோ, அது நிறைவேறாமலே போய்விடும்' என்று தெரிவித்துள்ளது. 

இருப்பினும் தீர்ப்பில் சில மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. 

500 மீட்டர் என்பது பெரிய நகரங்களுக்குப் பொருந்தும். அதுவே, 20 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட சிறிய நகர்ப்புறமாக இருந்தால், அங்கு 220 மீட்டர் தூரத்துக்குக் கடைகள் இருக்கக் கூடாது என்ற விலக்கும் அளிக்கப்பட்டுள்ளது. 

'சிக்கிம், மேகாலயா ஆகிய மாநிலங்களுக்கு 500 மீட்டர் விதி பொருந்தாது. 

ஆனால், ஹிமாச்சலப் பிரதேசத்துக்கு 220 மீட்டர் தூரம் என்ற விதி பொருந்தும்' என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

ஆந்திரபிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கு மட்டும் ஏற்கெனவே லைசென்ஸ் கொடுக்கப்பட்டுவிட்டதால், செப்டம்பர் 30-ம் தேதி வரை கடைகளை நடத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 'படிப்படியாக மது விலக்கு' என்ற அடிப்படையில் தற்போது 500 கடைகளை மூட முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார். 

நெடுஞ்சாலைப் பகுதியில் அமைந்துள்ள, விற்பனை குறைவாக உள்ள கடைகளாகப் பார்த்து மூடும் நடவடிக்கையை டாஸ்மாக் மேற்கொண்டு வருகிறது.

 உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவால், தமிழ்நாட்டில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் நாளை முதல் மூடப்படுகின்றன. 

நன்றி : விகடன் செய்திகள் -31.03.2017

Thursday, March 30, 2017

வழக்கறிஞராக பணியாற்ற என்ன செய்ய வேண்டும்?

Image may contain: 1 person, text

வழக்கறிஞராக பணியாற்ற என்ன செய்ய வேண்டும்?

இந்திய பார் கவுன்சில் தேர்வு! 
கோவை அரசு சட்டக் கல்லுாரியில் நேற்று நடந்த, அனைத்து இந்திய பார் கவுன்சில் தேர்வை, 458 பேர் எழுதினர்.

நாடு முழுவதும், 2010ம் ஆண்டு முதல், அனைத்து  இந்திய பார் கவுன்சில் தேர்வு நடத்தப்படுகிறது. இவ்வாண்டுக்கான வழக்கறிஞர் தகுதிகான் பார் கவுன்சில் தேர்வு, கோவை உட்பட, 48 மையங்களில் நடந்தது.

கோவை அரசு சட்டக் கல்லுாரியில், தமிழ் வழித்தேர்வை, 229 பேர், ஆங்கில வழித்தேர்வை, 229 பேர் என, மொத்தம் 458 பேர் எழுதினர்.

கோவை அரசு சட்டக்கல்லுாரி முதல்வரும், தேர்வு ஒருங்கிணைப்பாளருமான கோபாலகிருஷ்ணன் கூறுகையில், ”சட்டப்படிப்பு முடித்து (பி.எல்.,) பார் கவுன்சிலில் பதிவு செய்த, மூன்றாண்டு களுக்குள் அனைத்து இந்திய பார் கவுன்சில் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, வழக்கறிஞராக வாதாட முடியும்.

”தேர்வில், 100 ’அப்ஜெக்டிவ்’ வகை வினாக்கள் கேட்கப்பட்டன. இரண்டரை மாதங்களுக்குள் தேர்வு முடிவுகள் வெளியாகலாம்,” என்றார்.

நன்றி : தினமலர் (கல்விமலர்) - 27.03.2017

Wednesday, March 29, 2017

காவலர்கள் அடையாள அட்டையில் ஆதார் எண் இணைப்பு


காவலர்கள் அடையாள அட்டையில் ஆதார் எண் இணைப்பு

 காவல்துறை தலைமையகம் உத்தரவு
அனைத்துக் காவலர்களும் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக காவல்துறை தலைமையகம் உத்தரவிட்டுள்ளது. 

தமிழக காவல்துறையில் பணியில் சேரும் காவலர்களுக்கு அடையாள அட்டை காவல்துறை தலைமையகத்தில் இருந்து வழங்கப்படுவதில்லை.

மாறாக காவலர்களுக்கு சீருடை, லத்தி, ஷூ உள்ளிட்டவைகளை வழங்கும் தனியார் நிறுவனம் தான் அடையாள அட்டையையும் வழங்கி வருகிறது. 

இதனால் எளிதாக போலியாக அடையாள அட்டை தயார் செய்யும் வாய்ப்புகள் இருந்து வருகிறது. 

இதனால் தமிழகத்தின் பல பகுதிகளில் காவலர்கள் போல வேடமிட்டு பணம்பறிப்பு, மிரட்டல் உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடும் செயல்கள் நடைபெறுகின்றன.

இதனைத் தடுக்கவும், அடையாள அட்டையின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தவும் அனைத்து காவலர்களும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக காவல்துறை தலைமையகம் உத்தரவிட்டுள்ளது.

போலியாக அடையாள அட்டை தயார் செய்து காவலர்கள் போல் உலவுபவர்களைக் கண்டுபிடிக்கும் நோக்கத்தில் ஆதார் எண் இணைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நன்றி : விகடன் செய்திகள் - 20.03.2017

Tuesday, March 28, 2017

காவல்துறை ஒரு புகாரை எப்படி கையாள வேண்டும்?


காவல்துறை ஒரு புகாரை எப்படி கையாள வேண்டும்?

போலீசில் யார் புகார் கொடுத்தாலும், குற்றம் நடந்ததற்கான முகாந்திரம் இருக்கும்பட்சத்தில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என பல வழக்குகளில் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

1. புகார் அடிப்படையில் குற்றம் புலனாகும் பட்சத்தில் கண்டிப்பாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும். ஆரம்பகட்ட விசாரணை தேவையில்லை.

2. குற்றம் நடந்திருப்பதற்கான முகாந்திரம் இல்லையெனில் விசாரிக்க வேண்டும். சம்பவம் நடந்துள்ளதா? இல்லையா? என கண்டறிய வேண்டும். முகாந்திரம் இருந்தால் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.

3. புகாரில் உண்மையில்லை என விசாரணையை முடிப்பதாக இருந்தால், மனுதாரருக்கு ஒருவாரத்தில் அறிக்கை அளிக்க வேண்டும். மேல் நடவடிக்கை கைவிடப்பட்டதற்கான காரணங்களை தெரிவிக்க வேண்டும்.

4. முகாந்திரம் இருக்கும்பட்சத்தில் வழக்குப் பதிவு செய்வது போலீசாரின் கடமை. கடமை தவறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

5. முதற்கட்ட விசாரணையில் புகார் உண்மையா? இல்லையா? என பார்க்கக்கூடாது. முகாந்திரம் இருக்கிறதா? என பார்க்க வேண்டும்.

6. குடும்பத் தகராறு, வணிக ரீதியான குற்றங்கள், மருத்துவ சிகிச்சையில் கவனக்குறைவு, ஊழல், காலதாமதமாக வரும் புகார்களின் மீது முதற்கட்ட விசாரணை தேவை.

 7. முதற்கட்ட விசாரணையை ஏழு நாட்களில் முடிக்க வேண்டும். காலதாமதம் ஏற்படின் காவல்நிலைய டைரியில் பதிவு செய்ய வேண்டும். தினசரி வரும் அனைத்து புகார்களையும் டைரியில் பதிவு செய்ய வேண்டும். 

(கோர்ட் டைரக்‌ஷன் கேட்டு பலபேர்கள் மதுரை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டதன் பேரில் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி சி.டி.செல்வம் அவர்கள் காவல்துறை டி.ஜி.பி. அவர்களுக்கு மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.)

நன்றி : தினமலர் நாளிதழ் செய்தி - 27.03.2015

வழக்குப்பதிவு செய்யாத காவலர் மீது நடவடிக்கை!



வழக்குப்பதிவு செய்யாத காவலர் மீது நடவடிக்கை!
மதுரை: புகார்கள் குறித்து வழக்குப் பதிவு செய்யாத போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என டி.ஜி.பி.,க்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

மதுரை திருமுருகன் உட்பட 69 பேர் தங்கள் புகார்கள் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடக் கோரி ஐகோர்ட் கிளையில் மனு செய்தனர். 

நீதிபதி சி.டி.செல்வம் உத்தரவு: 

போலீசில் யார் புகார் கொடுத்தாலும், குற்றம் நடந்ததற்கான முகாந்திரம் இருக்கும்பட்சத்தில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என பல வழக்குகளில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு அடிப்படையில் இக்கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 

புகார் வந்தால் பதிவு செய்யாமல் போலீசார் தவிர்ப்பது கவலையளிக்கிறது. போலீசார் விருப்பம் போல் செயல்படுகின்றனர். தேசிய ஆய்வில் புகார்களில் பெரும்பாலானவற்றிற்கு வழக்கு பதிவு செய்வதில்லை என தெரியவந்துள்ளது. 

ஒரு புகார் பதிவு செய்யப்படாதபோது காலதாமதத்தால் புகாரர்தாரர் பாதிக்கப்படுகிறார். இது கோர்ட் விசாரணையை பாதிக்கும். சில நேரங்களில் போலீசார் உண்மைகளை திரித்து வழக்குப் பதிவு செய்கின்றனர். 

இந்தியாவில் 2012 ல் 60 லட்சம் வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இதிலிருந்து 60 லட்சம் வழக்குகள் பதிவு செய்யவில்லை என தெரிகிறது. இக்கோர்ட் கீழ்கண்ட வழிகாட்டுதல்களை டி.ஜி.பி.,க்கு பரிந்துரைக்கிறது.
  •  புகார் அடிப்படையில் குற்றம் புலனாகும் பட்சத்தில் கண்டிப்பாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும். ஆரம்பகட்ட விசாரணை தேவையில்லை.
  • குற்றம் நடந்திருப்பதற்கான முகாந்திரம் இல்லையெனில் விசாரிக்க வேண்டும். சம்பவம் நடந்துள்ளதா? இல்லையா? என கண்டறிய வேண்டும். முகாந்திரம் இருந்தால் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
  • புகாரில் உண்மையில்லை என விசாரணையை முடிப்பதாக இருந்தால், மனுதாரருக்கு ஒருவாரத்தில் அறிக்கை அளிக்க வேண்டும். மேல் நடவடிக்கை கைவிடப்பட்டதற்கான காரணங்களை தெரிவிக்க வேண்டும்.
  • முகாந்திரம் இருக்கும்பட்சத்தில் வழக்குப் பதிவு செய்வது போலீசாரின் கடமை. கடமை தவறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • முதற்கட்ட விசாரணையில் புகார் உண்மையா? இல்லையா? என பார்க்கக்கூடாது. முகாந்திரம் இருக்கிறதா? என பார்க்க வேண்டும்.
  • குடும்பத் தகராறு, வணிக ரீதியான குற்றங்கள், மருத்துவ சிகிச்சையில் கவனக்குறைவு, ஊழல், காலதாமதமாக வரும் புகார்களின் மீது முதற்கட்ட விசாரணை தேவை.
  •  முதற்கட்ட விசாரணையை ஏழு நாட்களில் முடிக்க வேண்டும். காலதாமதம் ஏற்படின் காவல்நிலைய டைரியில் பதிவு செய்ய வேண்டும். தினசரி வரும் அனைத்து புகார்களையும் டைரியில் பதிவு செய்ய வேண்டும். 
டி.ஜி.பி., எங்கள் கவலையில் பங்குபெற இக்கோர்ட் விரும்புகிறது. கண்காணிப்பு குழு அமைத்து, தவறு செய்யும் அதிகாரிகள் மீது நிர்வாக ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்குகள் பைசல் செய்யப்படுகின்றன என்றார்.

தினமலர் நாளிதழ் செய்தி - 27.03.2015

Sunday, March 26, 2017

விசாரணைக்கு 20 மாதம்; தீர்ப்புக்கு 22 மாதம்

Image may contain: text
விசாரணைக்கு 20 மாதம்; தீர்ப்புக்கு 22 மாதம் 
தேர்தல் வழக்கில் தான் இந்த கூத்து
பொதுவாக, எந்த வழக்கானாலும், உடனடியாக விசாரணை நடந்து, தீர்ப்பு வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, அனைவருக்கும் உண்டு. ஆனால், தீர்ப்பு வழங்க, 22 மாதங்கள் எடுத்து கொண்ட தேர்தல் வழக்கு பற்றி யாருக்கு தெரியும்.
அது நடந்தது, வேறு எந்த நீதிமன்றத்திலும் அல்ல; சென்னை உயர் நீதிமன்றத்தில் தான்.
இந்த வழக்கில் விசாரணை நடந்தது, 20 மாதங்கள்; தீர்ப்புக்காக, தேதி தள்ளி வைக்கப்பட்டு, 22 மாதங்களுக்கு பின், உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த சுவாரஸ்யமான வழக்கின் விவரம் இதோ:
கடந்த, 1996 சட்டசபை தேர்தலில், தி.மு.க., உடன், மூப்பனார் தலைமையிலான தமிழ் மாநில காங்., அணி சேர்ந்தது. இந்த அணி, மகத்தான வெற்றி பெற்றது.
அப்போது, திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி தொகுதியில், த.மா.கா., சார்பில் போட்டியிட்டவர் வேல்துரை. இவரை எதிர்த்து போட்டியிட்டவர், முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன். தேர்தலில், வேல்துரை வெற்றி பெற்றார்.
அவரின் வெற்றியை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், பி.எச்.பாண்டியன் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு விசாரணை, உயர் நீதிமன்றத்தில், 20 மாதங்களாக நடந்தது.
நீதிபதி ஜெயசிம்ம பாபு, வழக்கை விசாரித்தார். 1996 ஜூன் 24ம் தேதி, தேர்தல் வழக்கு தொடரப்பட்டது. 1998 பிப்., 24ம் தேதி, விசாரணை முடிந்தது; தீர்ப்பு தேதி தள்ளி வைக்கப்பட்டது.இந்த வழக்கில், 1999 டிச., 29ம் தேதி, தீர்ப்பு வழங்கப்பட்டது.
பி.எச்.பாண்டியன் தொடர்ந்த வழக்கு, தள்ளுபடி செய்யப்பட்டது. அதாவது, 22 மாதங்களுக்கு பின், இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. தேர்தல் வழக்கில், விசாரணை முடிந்து தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்ட நிலையில், இவ்வளவு மாதங்கள் கழித்து தீர்ப்பு வழங்கப்பட்டது,
இந்த வழக்கில் தான்.தீர்ப்பு வழங்கியதற்கு, 22 மாதங்களானது மட்டுமல்லாமல், தீர்ப்பின் நகல் வழங்குவதற்கும், 11 மாதங்கள் எடுத்து கொள்ளப்பட்டது தான், முக்கியமான விஷயம்.
உயர் நீதிமன்றத்தில், தேர்தல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், பி.எச்.பாண்டியன் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த, நீதிபதிகள் லகோத்தி, அசோக் பன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்', 2001 செப்டம்பரில் தீர்ப்பளித்தது.பி.எச்.பாண்டியன் தரப்பில், மூத்த வழக்கறிஞர் சிவசுப்ரமணியம் ஆஜராகி, ''22 மாதங்களுக்கு பின், உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது; தீர்ப்பு எழுதும் போது, நாங்கள் எழுப்பிய வாதங்கள் பரிசீலிக்கப்படாமல் இருக்கலாம்,''என்றார்.
'இந்த ஒரு காரணத்திற்காகவே, உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து விட்டு, புதிதாக விசாரிக்கும்படி திருப்பி அனுப்பலாம்' என, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
அதற்கு, மூத்த வழக்கறிஞர், ''மீண்டும் உயர் நீதிமன்றத்துக்கு அனுப்புவதால், எந்த பலனுமில்லை; அடுத்த தேர்தலும் நடந்து முடிந்து விட்டது,'' என்றார்.
இந்த வழக்கில் எழுப்பப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்கு, போதிய ஆதாரமில்லை' என கூறிய உச்ச நீதிமன்றம், சில அறிவுரைகளை உயர் நீதிமன்றத்துக்கு வழங்கியது. அதில் கூறியிருப்பதாவது:விசாரணை முடிந்து, தீர்ப்பு தேதியை தள்ளி வைத்து, 22 மாதங்களுக்கு பின், உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தேர்தல் வழக்கில், இவ்வளவு நீண்ட கால தாமதம் செய்தது முறையற்றது. 22 மாதங்களாக தீர்ப்பு வழங்காமல் இருந்ததை, நியாயப்படுத்த முடியாது. இத்தகைய தாமதம், விமர்சனத்துக்கு வழிவகுக்கும்; அதற்கு இடம் கொடுக்கக் கூடாது.தீர்ப்பின் நகலை அளிக்கவும், 11 மாதங்களாகி உள்ளது.
உயர் நீதிமன்றத்தில், தேர்தல் வழக்கை, சாதாரணமாக அணுகுவது ஏன் என்பதை, எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. தீர்ப்பின் நகல், கால தாமதமாக வழங்குவது, ஆட்சேபனைக்குரியது. இந்த விஷயத்தை, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கவனிக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.
- நமது நிருபர் -
தினமலர் நாளிதழ் - 26.03.2016

Saturday, March 25, 2017

தேர்தல் களம் - டெபாசிட் என்றால் என்ன ?

Image may contain: text

தேர்தல் களம் - டெபாசிட் என்றால் என்ன ?
தேர்தலில் எத்தனை பேர் போட்டியிட்டாலும் ஒருவருக்கு மட்டுமே வெற்றி. மற்றவர்களுக்கு தோல்வி கட்டாயம். ஆனாலும் அந்த தோல்வி கவுரவமாக இருக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புவார்கள்.
அந்த கவுரவத்தின் அடையாளமாக சொல்வது டெபாசிட்டை தக்க வைத்துக் கொள்வது. அதுவும் எல்லோருக்கும் வாய்க்காது அதிகபட்சமாக 6 பேருக்குதான் அந்த வாய்ப்பு கிடைக்கும்.
அதற்கு மேல் போட்டியிட்டவர்களுக்கு கட்டாயம் டெபாசிட் காலி.
என்ன இந்த டெபாசிட் காலி?
தேர்தலில் போட்டியிடும் எல்லா வேட்பாளர்களும் வேட்பு மனுவுடன் வைப்புத் தொகையும்(டெபாசிட்) செலுத்துவார்கள். தேர்தலில் வெற்றி பெறுபவர்களுக்கு இந்த வைப்புத் தொகை திருப்பித் தரப்படும்.
தோற்பவர்களுக்கும் இந்த வைப்புத் தொகை திருப்பித்தரப்படும்.
அப்படி வைப்புத் தொகையை திருப்பி பெற வேண்டும் என்றால் ஒரு வேட்பாளர் அந்த தொகுதியில் பதிவான செல்லத்தக்க வாக்குகளில் 6ல் ஒரு பங்கு வாக்குகளை பெற்றிருக்க வேண்டும்.
அதாவது ஒரு தொகுதியில் 6000 வாக்குகள் பதிவாகி இருந்தால் 1000 அல்லது அதற்கு மேலான எண்ணிக்கையில் வாக்குகள் பெறும் ஒவ்வொருவருக்கும் வைப்புத் தொகை திருப்பித் தரப்படும்.
அப்படியில்லாமல் 1000க்கும் குறைவான வாக்குகள் பெறுபவர்களுக்கு வைப்புத் தொகையை திருப்பித்தர மாட்டார்கள். அப்படி வைப்புத் தொகையாக செலுத்திய பணத்தை திருப்பி பெற முடியாத தோல்வியைத்தான் 'டெபாசிட் காலி' என்கின்றனர்.
பெரும்பாலும் முக்கிய அரசியல் கட்சிகளுக்கு டெபாசிட் காலி சங்கடம் அதிகம் ஏற்படுவதில்லை. சிறுகட்சிகள், சுயேட்சைகள்தான் இந்த நஷ்டத்தில் சிக்குவார்கள்.
சில நேரங்களில் அரிதாக பெரிய கட்சிகளும், முக்கிய பிரமுகர்களும் கூட இந்த 'டெபாசிட் காலி' அலையில் அடித்து செல்வதுண்டு.
நாடாளு(பாராளு)மன்ற தேர்தலுக்கு அதில் போட்டியிடுபவர் ரூ.25,000/- டெபாசிட் பணம் கட்ட வேண்டும். சட்டமன்ற தேர்தலுக்கு அதில் போட்டியிடுபவர் ரூ.10,000/- டெபாசிட் பணம் கட்ட வேண்டும். SC/ST பிரிவைச் சேர்ந்தவர்கள் மேற்கண்ட தொகையில் பாதியை கட்டினால் போதுமானது.
(2011ம் ஆண்டு கணக்கின்படி) உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் செலுத்த வேண்டிய வைப்புத்தொகை, தேர்தல் செலவின உச்சவரம்பு விவரங்கள்:
ஊராட்சி வார்டு உறுப்பினர் பொதுப் பிரிவினருக்கு ரூ. 200,
எஸ்.சி., எஸ்.டி.யினருக்கு ரூ. 100.
செலவின உச்சவரம்பு ரூ. 3,750.
ஊராட்சித் தலைவர்பொதுப் பிரிவினருக்கு ரூ. 600, எஸ்.சி., எஸ்.டி.யினருக்கு ரூ. 300.
செலவின உச்சவரம்பு ரூ. 15,000.
ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்பொதுப் பிரிவினருக்கு ரூ. 600,
எஸ்.சி., எஸ்.டி.யினருக்கு ரூ. 300.
செலவின உச்சவரம்பு ரூ. 37,500.
மாவட்ட ஊராட்சி உறுப்பினர்பொதுப் பிரிவினருக்கு ரூ. 1000,
எஸ்.சி., எஸ்.டி.யினருக்கு ரூ. 500.
செலவின உச்சவரம்பு ரூ. 75,000.
பேரூராட்சி, மூன்றாம் நிலை நகராட்சி ஆகியவற்றின் உறுப்பினர் பொதுப் பிரிவினருக்கு ரூ. 500,
எஸ்.சி. எஸ்.டியினருக்கு ரூ. 250,
செலவின உச்சவரம்பு ரூ. 11,250.
பேரூராட்சி, மூன்றாம் நிலை நகராட்சி ஆகியவற்றின் தலைவர் பொதுப் பிரிவினருக்கு ரூ. 1,000,
எஸ்.சி. எஸ்.டியினருக்கு ரூ. 500,
செலவின உச்சவரம்பு ரூ. 56,250.
நகராட்சி உறுப்பினர்பொதுப் பிரிவினருக்கு ரூ. 1,000,
எஸ்.சி. எஸ்.டியினருக்கு ரூ. 500.
செலவின உச்சவரம்பு
முதல் நிலை, இரண்டாம் நிலை ரூ. 22,500,
சிறப்பு நிலை, தேர்வு நிலை 56,250.
நகராட்சித் தலைவர்பொதுப் பிரிவினருக்கு ரூ. 2,000,
எஸ்.சி. எஸ்.டியினருக்கு ரூ. 1,000,
செலவின உச்சவரம்பு
முதல் நிலை, இரண்டாம் நிலை ரூ. 1,12,500,
தேர்வு நிலை, சிறப்பு நிலை ரூ. 2,25,000.
செலவு செய்வது எப்படி?தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களுக்கு அனுமதிக்கப்படும் தேர்தல் செலவினங்களை தேசியமயமாக்கப்பட்ட ஏதாவது ஒரு வங்கியில் தனி கணக்கு துவங்கி பராமரிக்க வேண்டும்.
செலவு கணக்கு 1951-ம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 8ஏ 11(ஏ) (2) மற்றும் 10ஏ ஆகிய பிரிவின் படி,
பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் முடிவு வெளியான 30 நாட்களுக்குள் தங்கள் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். 
அதன்படி தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யாத வேட்பாளர்கள், 3 ஆண்டுகளுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட தேர்தல் கமிஷன் தடை விதிக்க முடியும்.

Friday, March 24, 2017

மறக்காமல் பேசுவோம்........ மாதவிடாய்!

Image may contain: 1 person, text and closeup

மறக்காமல் பேசுவோம்........ மாதவிடாய்!

நோயை வெல்வதற்கான முதல் படி, அதைப் பற்றிய விழிப்பு உணர்வை வளர்த்துக்கொள்வதுதான்.
அந்த வகையில் தொடர்ந்து நோய்களைப் பற்றிய வெளிச்சம் தந்துவரும் ‘நோய்நாடி’ தொடரில்… பெண்களுக்கு மாதவிடாய் தொடர்பாக நேரும் பிரச்னைகள், அதற்கான தீர்வுகள் பற்றிப் பேசுகிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் சிறப்பு மருத்துவர் பிரபா.
‘‘நாளுக்கு நாள் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்து வாழ்க்கை முறை ஹைடெக்காக மாறி வந்தாலும், இந்த நூற்றாண்டிலும் மாதவிடாய் என்பதை உடல் ஆரோக்கியம் என்ற தளத்தில் பேச யாரும் முன்வருவதில்லை. இன்னும் அதை ரகசியமாகவே மூடிமறைக்கிறார்கள். அது பற்றிய விழிப்பு உணர்வு அவசியம் தேவை.
மாதவிடாய் என்பது…சினைப்பையில் உருவாகும் கருமுட்டைகள், ஹார்மோன் சுழற்சிக்கு உட்பட்டு, முழு வளர்ச்சியடைந்து, உடைந்து, பின்னர் வரக்கூடிய ஹார்மோன் மாற்றத்தின் முடிவில், கர்ப்பப்பையில் உதிரப்போக்கு ஏற்படுவதை மாதவிடாய் என்கிறோம். சினைப்பையின் செயல்பாட்டை மூளையின் உதவியோடு நாளமில்லாச் சுரப்பிகள் கவனித்துக் கொள்ளும்.
பொதுவாக, 9 – 15 வயதுக்குள் பெண் பிள்ளைகள் பூப்பெய்துவார்கள் (முதல் தடவை மாதவிலக்கு ஏற்படுவது). இந்த வயதுக்குக் குறைவான/அதிகமான வயதில் பெண் பிள்ளைகள் பூப்பெய்துவது அப்நார்மல். அந்தச் சிறுமிகளை மருத்துவரிடம் அழைத்துச்சென்று, பூப்பெய்துதல் பிரச்னைக்கான காரணத்தை பரிசோதனை மூலம் கண்டறிந்து, சரிசெய்ய வேண்டியது மிகவும் அவசியம்.
தவறினால், அந்தச் சிறுமி பெரியவளாகி வளரும்போது குழந்தை பிறப்பில் சிக்கல் ஏற்படுவதில் தொடங்கி கேன்சர் உள்ளிட்ட பிரச்னைகள் வரை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
பூப்படையும் முன்…பெண் பிள்ளைகள் பூப்படைவதற்கு 3, 4 வருடங்களுக்கு முன்பிருந்தே, உயரம் அதிகரிப்பது, எடை கூடுவது, மார்பகம் வளர்ச்சியடைவது என அதற்கான மாற்றங்கள் அவர்கள் உடலில் வெளிப்பட ஆரம்பிக்கும். அப் போதிருந்தே அவள் அம்மா, அந்தச் சிறுமியை மாதவிடாய் நாட்களுக்குத் தயார்படுத்த வேண்டும்.
`மாதவிடாய் ஏன் ஏற்படுகிறது, எப்படி ஏற்படும்’ என்பதை பூப்பெய்வதற்கு முன்கூட்டியேவும், முதல் மாதவிலக்கு நிகழ்ந்த பின்னர் மாதவிடாய் நாட்களில் ஏற்படும் வலியும், சோர்வும் இயல்பானவையே என்பதையும், அந்நாட்களில் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார நடவடிக்கைகள், நாப்கின் பயன்பாடு, எடுத்துக்கொள்ள வேண்டிய சத்துணவின் அவசியம் என… மாதவிடாயை அந்தச் சிறுமி இயல்பானதொரு உடல் மாற்றமாக கடப்பதற்கான விழிப்பு உணர்வை அளிக்க வேண்டும்.
பாலியல் சம்பந்தமான கேள்விகளை அவர்கள் எழுப்பினால், அவற்றைத் தவிர்க்காமல், ‘அதெல்லாம் பேசக்கூடாது’ என்று அவர்களை அடக்காமல், உரிய பதிலை எளிமையாக அவர்களுக்கு அளிக்க வேண்டும். பள்ளிக்கு முன்பாக, வாழ்க்கைக் கல்வியின் அடிப்படை குழந்தைகளுக்குத் தரப்பட வேண்டிய இடம், வீடுதான்.
சிறுமிகளுக்கு சுழற்சி மாறலாம்..!
சில சிறுமிகளுக்கு பூப்படைந்த முதல் மூன்று வருடங்கள்வரை, மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை என மாதவிடாய் சுழற்சி சீரற்று இருக்கலாம். அது இயல்பானதே. காரணம், பருவமடையும்போது அந்தச் சிறுமியின் நாளமில்லாச் சுரப்பிகளின் வளர்ச்சி முழுமையடையாமல் இருக்கலாம்.
மூன்று வருடங்களுக்குள் வளர்ச்சி முழுமையடைந்து, நாளமில்லாச் சுரப்பிகள் சரியாக வேலைசெய்யத் தொடங்கிவிடும், மாதவிலக்கு சுழற்சியும் சீராகிவிடும். ஆனால், பூப்படைந்த மூன்று வருடங்களுக்குப் பிறகும் சுழற்சி சீராகவில்லை எனில், மருத்துவ ஆலோசனை அவசியம்.
மாதவிடாய் சுழற்சி… எது சரி, எது பிழை?
21 – 35 நாட்களுக்குள் சுழற்சி முறையில் உதிரப்போக்கு ஏற்படலாம். ஆரம்ப கட்டங்களில் ஒவ்வொரு முறையும் 2 – 8 நாட்கள்வரை உதிரப்போக்கு இருக்கலாம். ஒரு சுழற்சியில் 15 முதல் 80 மில்லி அளவுக்கு உதிரப்போக்கு வெளிப்படலாம். இவையெல்லாம் நார்மல்.
மாதவிடாய், இயல்பைவிட அதிகளவில் வித்தியாசப்பட்டால், அது இரண்டு மாதங்களுக்குப் பின்னும் இதேபோன்ற சுழற்சியாகவே நீடித்தால், உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
ஹார்மோன் ஏற்ற இறக்கம் முதல், சினைப்பையில் நீர்க்கட்டி, அதிக அல்லது குறைந்த எடை, இனப்பெருக்க உறுப்புகளில் பிரச்னை, இன்சுலின் குறைபாடு, மன அழுத்தம், மனச்சோர்வு, ரத்தம் உறைவதில் சிக்கல் ஏற்படுத்தும் பிளீடிங் டிஸார்டர் (bleeding disorder) வரை இதற்கான காரணங்கள் எதுவாகவும் இருக்கலாம்.
அதைக் கண்டறிந்து, உரிய சிகிச்சை எடுக்க வேண்டியது அவசியம். தவறினால், பின்னாளில் அது குழந்தை பிறப்பில் சிக்கல் ஏற்பட வாய்ப்பை ஏற்படுத்திவிடலாம்.
அந்த மூன்று நாட்களில்…
மாதவிடாய் நாட்களின் வலியும், உதிரப்போக்கும் இயற்கை யானது என்பதால், அச்சம் தேவையில்லை. சிலரால் சாப்பிட முடியாது, சிலருக்கு பசிக்காது. இருந்தாலும், சத்துணவு அவசியம். ஜூஸ் எடுத்துக்கொள்வது நல்லது.
இந்நாட்களில் ஓய்வு அவசியம் என்றாலும், ஒரேயடியாக முடங்கி இருக்கத் தேவையில்லை. மாறாக, உடலுக்கு அதிக வேலை கொடுக்காமல் சிறு சிறு வேலைகளை செய்யலாம். சுகாதாரமாக இருப்பதுடன், அரிப்பு, துர்நாற்றம் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
கெமிக்கல்கள் கொட்டி தயாரிக்கப்படும் நாப்கின்கள் தவிர்த்து, காட்டன் பேடுகள், காட்டன் உள்ளாடைகள் பயன்படுத்துவது பரிந்துரைக்கத்தக்கது. மிக முக்கியமாக, ஒரு பெண் தன் மாதாந்தர சுழற்சி தேதி, அப்போது ஏற்படும் உடல் மாற்றங்களைத் தொடர்ந்து கண்காணித்து, அதில் மாற்றங்களை உணர்ந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
நடுத்தர வயது முதல் மெனோபாஸ்வரை..!
மாதவிடாய் காரணிகளைப் பொறுத்தவரை, 15 – 25 வயதுக்குள் படிப்புச்சுமை, வேலை அழுத்தம், திருமணம் என ஒரு பெண்ணின் வாழ்க்கையில் முக்கியமான காலகட்டம் என்பதால், அதனால் அவர்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் மாதவிடாய் சுழற்சியிலும் பிரதிபலிக்கலாம்.
இந்த வயதுகளில் மாதவிடாய் பிரச்னை ஏற்பட்டால், மருத்துவரைச் சந்தித்து நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும்.
ஒரு பெண்ணுக்கு முதல் குழந்தை 21 – 26 வயதுக்குள் பிறக்க வேண்டும். அதுதான் ஆரோக்கியமானது.
ஒருவேளை தள்ளிப்போடுவதாக இருந்தால், மருத்துவ ஆலோசனை அவசியம். இன்றைய சூழலில் 28, 30 வயதில் திருமணம் செய்துகொள்ளும் பெண்கள், அதன் பின்னரும் சில பல காரணங்களுக்காக 3, 4 ஆண்டுகளுக்கு கருத்தரிப்பதைத் தள்ளிப் போடுகிறார்கள்.
இப்படி அளவுக்கு அதிகமாகக் காலம் தாழ்த்துவதால், பின்னர் குழந்தை பெற்றுக்கொள்வதில் சிக்கல் ஏற்படும். எனவே, அதுபோன்ற முடிவில் இருக்கும் பெண்களுக்கும் மருத்துவ ஆலோசனை கட்டாயம் தேவை.
அதேபோல, நிரந்தரமாக குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என்று நினைப்ப வர்கள் அதற்கான மருத்துவ ஆலோசனைகள், வழிமுறைகளை மருத்துவரிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
30 – 40 வயதில் அதிகமான உதிரப்போக்கு இருந்தால், அதற்கு கர்ப்பப்பை கட்டி உள்ளிட்டவை காரணங்களாக இருக்கலாம். மாதவிடாய் இல்லாத சமயத்தில் உதிரப்போக்கு, உடலுறவுக்குப் பின் உதிரப்போக்கு போன்றவை ஏற்பட்டால், அது உள் உறுப்பு பிரச்னையின் அறிகுறியென உணர்ந்து, உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
40 – 45 வயதை மெனோபாஸுக்கு முந்தைய நிலை எனலாம். இந்தச் சமயத்தில் பெண்களுக்கு கட்டுக்கடங்காத உதிரப்போக்குடன் அதிக சோர்வு, இடுப்பு வலி, மூட்டு வலி, சர்க்கரை, உடல் பருமன், ரத்த அழுத்தம், இதயப் பிரச்னை போன்றவை வர வாய்ப்புள்ளது. இதனால் அதிக மன அழுத்தம் உண்டாகும்.
45 வயதுக்கு மேல் ஓராண்டு காலம் தொடர்ந்து உதிரப்போக்கு ஏற்படவில்லை என்றால், அது முழுமையான மெனோபாஸ் ஆகும். அதற்குப்பிறகு 52 வயது வரை திடீரென உதிரப்போக்கு ஏற்பட்டால் அதை புற்றுநோய்க்கான அறிகுறி என எடுத்துக்கொண்டு உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
மொத்தத்தில், ஏன், எதனால், எப்படி என மாதவிடாயின் நிகழ்வுகளை ஒவ்வொரு பெண்ணும் அறிவியல் ரீதியாக அறிந்து வைத்துக்கொள்ள வேண்டியதும், அதில் மாற்றங்கள் ஏற்படும்போது தாமதிக்காமல் மருத்துவரை அணுகவேண்டியதும் மிக முக்கியம்’’ என்று வழிகாட்டினார், டாக்டர் பிரபா.
சத்தான உணவு… மிக முக்கியம்!
பெண்களின் மாதவிலக்கு உதிரம், கழிவு அல்ல. ஒவ்வொரு மாதமும் அது அவர்களின் உடல் உருவாக்கி வெளியேற்றும் குருதி. ஒவ்வொரு சுழற்சிக்கும் அவர்கள் தங்களின் உடலில் 80 மில்லி வரை உதிரம் இழக்கிறார்கள் எனில், அதை ஈடுகட்டும் அளவுக்கு அவர்கள் சத்தான உணவு எடுத்துக்கொள்ள வேண்டியது எவ்வளவு முக்கியம்?!
குறிப்பாக கீரை, பச்சைக் காய்கறிகள், பேரீச்சை என இரும்புச்சத்து நிறைந்த உணவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இரும்புச் சத்தை உடல் கிரகிக்க வைட்டமின்-சி அவசியம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆண்களுக்கு சில வார்த்தைகள்…
ஒரு வீட்டுப் பெண்ணின் நலம், அந்தக் குடும்பத்துக்கான ஆதாரம். கணவர், குழந்தைகள் என ஒரு பெண், தன் வீட்டினரின் ஆரோக்கியத்துக்கான விஷயங்களைப் பார்த்துப் பார்த்துச் செய்கிறாள்.
பதிலுக்கு, அவர்கள் அவளின் ஆரோக்கியத்துக்கு பங்களிப்பதில்லை என்பதைவிடக் கொடுமையானது, அவள் ஆரோக்கியம் குன்றியிருக்கும்போதுகூட கண்டும் காணாமல் இருப்பது!
மாதவிலக்கு, பிரசவம், கருச்சிதைவு, மெனோபாஸ் என்று எந்த நிலை உதிரப்போக்கால் பெண் உழன்றுகொண்டிருந்தாலும், ‘இதெல்லாம் இயல்பானதுதான்’ என்று கரிசனமற்று இருப்பதுதான் பல வீடுகளின் இயல்பு.
மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் அவளுக்கு ஏற்படும் ‘மூடு ஸ்விங்ஸ்’ (mood swings), அவள் மனதை படாதபாடுபடுத்தும். பிரசவ உதிரப்போக்கு அவளுக்கு ஏற்படுத்தும் ரத்தச்சோகை, கவனிக்காமல் விட்டால் உயிரிழப்புவரை ஏற்படுத்தும். மெனோபாஸ் கட்டத்தில் ஏற்படும் மிக அதிகமான உதிரப்போக்கு, வாழ்க்கையையே வெறுக்கும் புள்ளியில் அவளை நிறுத்தும்.
உதிரப்போக்கு நாட்களில் அவள் படும் துயரங்களைப் புரிந்துகொள்ளுங்கள். அவள் சுமைகள் குறைத்து, அந்நாட்களில் பலமிழந்து இருக்கும் அவள் வேலைகளைப் பகிர்ந்து, ஓய்வு கொடுங்கள்.
நன்றி : அவள் விகடன் 05.04.2016

Thursday, March 23, 2017

கடனில் இருக்கும் வீட்டை விற்க முடியுமா?

Image may contain: house and outdoor

கடனில் இருக்கும் வீட்டை விற்க முடியுமா?
ஆசை ஆசையாக வங்கியில் கடன் வாங்கி ஒரு வீட்டை வாங்குகிறோம். வாங்கிய கடனுக்கு முறையாக இ.எம்.ஐ.யும் கட்டி வருகிறோம். திடீரென வேலை நிமித்தமாக வேறு ஊருக்கு நிரந்தரமாகச் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது என்று வைத்துக் கொள்வோமே.
அந்த வீட்டை விற்று விடலாம் என்று நினைக்கிறோம். 20 ஆண்டுகளுக்கான இ.எம்.ஐ.யில் இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே இ.எம்.ஐ. கட்டியுள்ள நிலையில், வீட்டை விற்க முடியுமா?
வீட்டுக் கடன் என்பதே, வாங்கிய வீட்டை வங்கியில் அடமானம் வைத்து வாங்குவதுதான் இல்லையா? வீட்டை அடமானமாக வைத்துக் கொண்டுதான் வங்கிகள் கடனை அளிக்கின்றன. ஆனாலும் வங்கியில் அடமானம் வைத்துள்ள வீட்டையோ அல்லது ஃபிளாட்டையோ விற்க முடியும். அதை வாங்குபவருக்கும் எந்த வித சட்டப் பிரச்சினையும் நிச்சயம் இல்லை என்றே சொல்லலாம். இதற்காகச் சில வழிமுறைகள் உள்ளன. அதைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
வங்கியில் அடமானம் வைக்கப்பட்டுள்ள வீட்டை வேறு ஒருவர் வாங்கத் தயார் என்றால், சொந்தமாகக் கைவசம் வைத்துள்ள பணத்தில் அந்த வீட்டை வாங்குகிறாரா? அல்லது அவரும் வங்கிக் கடன் மூலமாகவே வாங்குகிறாரா என்பதைப் பார்க்க வேண்டும். 
மொத்தமாகப் பணத்தைக் கையில் வைத்துக் கொண்டு வாங்குவதாக வைத்துக் கொண்டால் என்னென்ன செய்ய வேண்டும்?
1. வீட்டை விற்பவர் அடமானம் வைத்துள்ள வங்கியை அணுகி முதலில் விஷயத்தை முழுமையாகத் தெரிவிக்க வேண்டும். கடன் பாக்கி, அசல் தொகை மற்றும் வட்டித் தொகை எவ்வளவு என்பதற்கு ஒரு கடிதத்தை வங்கியிடமிருந்து கேட்டுப் பெற வேண்டும்.
2. வங்கிக்கு ஏற்கெனவே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களின் பட்டியலையும் எழுத்துப்பூர்வமாக வங்கியில் வாங்கிக்கொள்ள வேண்டும்.
3. சம்பந்தப்பட்ட வங்கிக்கு, கடன் பாக்கியைச் செலுத்திவிட்டால், அடமானம் வீட்டுத் தொடர்பான அனைத்து ஒரிஜினல் ஆவணங்களையும் சம்பந்தப்பட்டவருக்குக் கொடுப்பதற்கு வங்கிக்கு ஆட்சேபணை இல்லை என்று சம்பந்தப்பட்ட வங்கி எழுதிக் கொடுக்க வேண்டும்.
4. வீட்டின் உரிமையாளர் வங்கியிடமிருந்து பெற்ற கடிதங்களையும் தன் வசமுள்ள விற்பனைப் பத்திரத்தின் நகலையும், அந்த வீடு தொடர்புடைய அனைத்துப் பத்திரங்களின் நகல்களையும் வீடு வாங்கப் போகும் நபரிடம் வழங்க வேண்டும்.
6. வீட்டை வாங்குபவர் ஆவணங்களையும் வங்கியின் கடிதங்களையும் தனது வழக்கறிஞரிடம் காட்டிய பிறகு சட்ட ரீதியான கருத்தைப் பெறலாம். திருப்தி ஏற்படும்பட்சத்தில் வீட்டின் சொந்தக்காரருக்கு முன்பணம் கொடுக்கலாம். பிறகு வீட்டை விற்பவருக்கும் வாங்குபவருக்கும் இடையேயான ஒப்பந்தத்தை எழுதி இரு தரப்பினரும் கையெழுத்திட்ட பிறகு சார்பதிவாளர் அலுவலகத்தில் முறைப்படி பதிவு செய்யலாம்.
7. ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள தேதிக்குள் முழுத் தொகையையும் பெற்றுக் கொண்டு, வங்கிக்குச் சேர வேண்டிய தொகையைக் கொடுத்துவிட வேண்டும். கணக்கு முடிந்ததற்கு அடையாளமாக, வங்கியிடம் இருந்து ஒரு சான்றிதழைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
8. வங்கியிடம் இருந்து வீட்டுக்குத் தொடர்புடைய ஆவணங்களைப் பெற்று அவற்றை வீட்டை வாங்குபவருக்குக் கொடுத்து, அவரிடம் இருந்து ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். அதேசமயம், வீட்டை விற்பவர் அதை வாங்குபவருக்குக் கிரயப் பத்திரம் எழுதிக் கொடுத்துச் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
அடமான வீட்டுக்கடன்
ஒருவேளை கையில் சொந்தமாகப் பணம் இல்லை. வங்கியில் கடன் பெற்றுத்தான் அந்த அடமான வீட்டை வாங்க வேண்டும். அப்படியென்றால் என்ன செய்ய வேண்டும்? ஏற்கெனவே சொன்ன நடைமுறைகளில் முதல் நான்கு நடைமுறைகளை வீட்டை விற்பவர் செய்ய வேண்டும். அதன் பிறகு வீட்டை வாங்குபவர் செய்ய வேண்டிய சில விஷயங்கள் உள்ளன.
1. தன்னிடம் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் வங்கியின் கடிதங்களையும் வீட்டை வாங்குபவர் கடன் வழங்கும் வங்கிக்குக் கொடுக்க வேண்டும். அத்துடன் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய முகவரிச் சான்றிதழ், சம்பளம் அல்லது வருமானச் சான்றிதழ் மற்றும் வங்கியின் பரிசீலனைக் கட்டணம் ஆகியவற்றையும் வங்கியிடம் வழங்க வேண்டும். கடன் விண்ணப்பப் படிவத்தையும் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.
2. வங்கி உரிய பரிசீலனைக்குப் பிறகு கடன் வழங்கக் கொள்கை அடிப்படையிலான ஒப்புதல் வழங்கும். ஏற்ககெனவே ஒரு வங்கி தேவையான அனைத்துப் பரிசீலனைகளையும் செய்த பிறகுதான் கடன் வழங்கி உள்ளது என்பதால், தேவையற்ற தாமதம் இதில் இருக்காது.
3. வீட்டுக் கடன் தொகையைச் சம்பந்தப்பட்ட வங்கி, வீடு அடமானம் வைக்கப்படுள்ள வங்கிக்கு நேரிடையாகக் கொடுக்கும்.
4. கடனுக்கான முழுத் தொகையையும் பெற்றுக்கொண்டதால் அடமானம் வைத்திருந்த வங்கி, சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் வீடு வாங்குவதற்குக் கடன் வழங்கும் வங்கிக்குக் கொடுத்துவிடும்.
5. அதன் பிறகு வீட்டுக் கடன் கொடுக்கும் வங்கி அசல், வட்டித் தொகை போக மீதத் தொகையை வீட்டை விற்பவருக்குக் கொடுத்துவிடும். இறுதியாக வீட்டை வாங்குபவர் சார்பதிவாளர் அலுவலகத்தில் விற்பனைப் பத்திரத்தை வழக்கம்போல் பதிவு செய்துகொள்ளலாம்.
இந்த இடத்தில் ஒன்றைக் கவனிப்பது மிகவும் நல்லது. அடமான வீட்டை வாங்குபவர் அதே வங்கியில் வீட்டுக் கடன் பெற்றுக்கொள்வது நல்லது. இதனால் இரு தரப்புக்கும் நேரமும் சிரமமும் நிச்சயம் குறையும்.
தி இந்து நாளிதழ் செய்திகள் - 21.03.2015

நீதிமன்ற அவமதிப்பு - வங்கி அதிகாரிகளுக்கு சிறை!


நீதிமன்ற அவமதிப்பு - வங்கி அதிகாரிகளுக்கு சிறை!
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு : வங்கி அதிகாரிகளுக்கு 7 நாள் சிறை

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உயர் அதிகாரிகளுக்கு, ஒரு வார சிறை தண்டனை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணியாற்றி, ஓய்வு பெற்றவர் சென்ன கிருஷ்ணன்; வங்கியில் நடந்த ஊழியர் தேர்வில் மோசடி நடந்ததாக, சென்னகிருஷ்ணன் உட்பட சில ஊழியர்களுக்கு, குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டது.

 ஒரே குற்றச்சாட்டு தொடர்பாக, கிரிமினல் வழக்கும், துறை ரீதியான விசாரணையும் நடந்தது. கிரிமினல் வழக்கு விசாரணை முடியும் வரை, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தடை கோரி, சென்னகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவை, உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, நேரில் ஆஜராகும்படி, சென்ன கிருஷ்ணனுக்கு, ஒழுங்கு நடவடிக்கை அதிகாரிகள், 'நோட்டீஸ்' அனுப்பினர். அந்த நோட்டீசுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது. 

தடையை நீக்க கோரி, ஒழுங்கு நடவடிக்கை அதிகாரி மனு தாக்கல் செய்தார். விசாரணை முடிந்து, உத்தரவு தள்ளிவைக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில், நேரில் ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பி, சென்னகிருஷ்ணனை பணி நீக்கம் செய்து, ஒழுங்கு நடவடிக்கை அதிகாரி உத்தரவிட்டார். 

அந்த உத்தரவில், நீதிமன்ற தடை நீக்கப்பட்டு விட்டதாக குறிப்பிட்டார்.இதையடுத்து, ஒழுங்கு நடவடிக்கை அதிகாரிகள் கணபதி சுப்ரமணியன், என்.சுப்ரமணியன் ஆகியோருக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு மனுவை, சென்னகிருஷ்ணன் தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த, நீதிபதி முரளிதரன் பிறப்பித்த உத்தரவு:

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல், அவசர கதியில் பணி நீக்க உத்தரவை, ஒழுங்கு நடவடிக்கை அதிகாரிகள் பிறப்பித்துள்ளனர். 

நீதிமன்ற உத்தரவை, வேண்டுமென்றே அதிகாரிகள் மீறியுள்ளனர். எனவே, அதிகாரிகள் இருவருக்கும், ஒரு வார சாதாரண சிறை தண்டனை, தலா, 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. 

சிறை தண்டனை அனுபவிப்பதை, உயர் நீதிமன்ற பதிவுத்துறை உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.

நன்றி : தினமலர் நாளிதழ் -23.03.2017

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உயர் அதிகாரிகளுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 

- தினமலர் நாளிதழ் -26.03.2017

ஜி.டி.நாயுடு - 10

ஜி.டி.நாயுடு 10
அறிவியல் மேதை, கண்டுபிடிப்பாளர்‘இந்தியாவின் எடிசன்’ என்று போற்றப்பட்ட சிறந்த அறிவியல் மேதையும், மகத்தான கண்டுபிடிப்பாளருமான ஜி.டி.நாயுடு (G.D.Naidu) பிறந்த தினம் இன்று (மார்ச் 23). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
# கோயம்புத்தூர் மாவட்டம் கலங்கல் கிராமத்தில் (1893) பிறந்தார். பயின்றது தொடக்கக் கல்வி மட்டுமே. ஏராளமான நூல்களை வாங்கிப் படித்து அறிவை வளர்த்துக்கொண்டார். வியாபாரத் திறனும் பெற்றிருந்தார்.
# ஒருமுறை காலி மருந்துப் புட்டி ஒன்றைப் பார்த்தார். அது அமெரிக்காவில் தயாராகும் வலி நிவாரணி என்பதை தெரிந்துகொண்டார். அதை அமெரிக்காவில் இருந்து வரவழைத்து, இங்கு அமோகமாக விற்றார். அந்த ஆண்டில் மட்டும் ரூ.800 லாபம் சம்பாதித்தார். அப்போது அவருக்கு வயது 18.
ஹோட்டலில் சர்வராக வேலைபார்த்து, பணம் சேமித்தார். அதில், ஒரு ஆங்கிலேய அதிகாரியின் பைக்கை வாங்கி, அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்தார். அதை மீண்டும் பொருத்தி பக்கவாட்டில் இன்னொருவர் அமர சைட்பாக்ஸ் ஒன்றையும் வடிவமைத்து இணைத்தார்.
# # திருப்பூரில் பருத்தி ஆலை தொடங்கினார். பெரும் தொழிலதிபராக உயர்ந்தார். தொழிலை விரிவுபடுத்த பம்பாய் சென்றவருக்கு எதிர்பாராதவிதமாக நஷ்டம் ஏற்பட்டது. வெறுங்கையுடன் வீடு திரும்பினார். ஆனாலும், தோல்வியால் துவளவில்லை. போக்குவரத்து தொழில் செய்த ஸ்டேன்ஸ் என்பவரிடம் ஒரு பேருந்தை கடனாகப் பெற்று பொள்ளாச்சி பழநி இடையே பஸ் சர்வீஸ் நடத்தினார்.
# ‘யுனைடெட் மோட்டார் சர்வீஸ்’ நிறுவனத்தை தொடங்கினார். பேருந்து புறப்படும் நேரத்தைக் காட்டும் கருவி, பயணச்சீட்டு வழங்கும் கருவி, இன்ஜின் அதிர்வைக் கண்டறியும் கருவி, பழச்சாறு பிழியும் கருவி, வெட்டுக் காயம் இல்லாமல் முகச்சவரம் செய்துகொள்ள பிளேடு என தொடர்ந்து பல பொருட்களை உருவாக்கினார்.
# ஜெர்மனியில் நடந்த பொருட்காட்சியில் இவரது சவரக்கத்தி, பிளேடுக்கு முதல் மற்றும் 3-வது பரிசுகள் கிடைத்தன. இவற்றை தயாரிக்கும் உரிமையை பல நாடுகள் கேட்டும் மறுத்தார். இந்தியாவிலேயே தயாரிக்க அரசிடம் நிதி கோரினார். காழ்ப்புணர்ச்சி கொண்ட பிரிட்டிஷ் அரசு மறுத்தது. மனம் உடைந்த இவர் ஒரு அமெரிக்க நிறுவனத்துக்கு இலவசமாகவே அந்த உரிமையை கொடுத்துவிட்டார்.
# தனது கண்டுபிடிப்புகள் நாட்டு மக்களுக்கு பயன்பட வேண்டும் என்பதாலேயே, அவற்றை பதிவு செய்யாமல் வைத்திருந்தார். இவர் மேல் திணிக்கப்பட்ட அதிகபட்ச வரி காரணமாக, இவரது பல கண்டுபிடிப்புகள் நாட்டுக்குப் பயன்படாமல் போய்விட்டன.
# விவசாயத் துறையிலும் பல சாதனைகள் புரிந்தார். இவரது தாவர ஆராய்ச்சி முடிவுகள் உலகையே பிரமிக்க வைத்தன. இவரது அதிசய பருத்திச் செடிக்கு ‘நாயுடு காட்டன்’ என பெயரிட்டு ஜெர்மன் கவுரவித்தது.
# பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகள், பல தொழிற்சாலைகளைத் தொடங்கினார். தமிழக தொழிற்கல்வி நிறுவனங்களின் தந்தை எனப் போற்றப்பட்டார். நீரிழிவு, ஆஸ்துமா உள்ளிட்ட பல நோய்களுக்கு மருந்து தயாரித்தார்.
# சாதாரண கிராமத்தில் பிறந்து தனது திறமையால் பல அரிய சாதனைகளைப் படைத்த ஜி.டி.நாயுடு 81-வது வயதில் (1974) மறைந்தார். கோவை அவிநாசி சாலையில் இவரது கண்டுபிடிப்புகளுடன் கூடிய கண்காட்சி, அருங்காட்சியகம் அவரது அறிவாற்றலை இன்றும் பறைசாற்றுகிறது
தி இந்து தமிழ் நாளிதழ் - 23.03.2016

கண் நலம் காப்போம்!


கண் நலம் காப்போம்!
கண்கள், நம் உடலின் ஜன்னல்கள். நாம் இந்த உலகைக் காணவும், இயற்கையின் அழகை, அற்புதத்தை அனுபவமாக்கிக்கொள்ளவும் உதவும் கண்களை, பஞ்சபூதங்களில் நெருப்புக்கு இணையாகச் சொல்கிறது சித்த மருத்துவம். இன்றைய நவீன யுகத்தில், நீண்டநேரம் கணிப்பொறி மற்றும் டி.வியைப் பார்ப்பது, விளக்கை அணைத்துவிட்டு நள்ளிரவு வரை மொபைல் பார்ப்பது என்று கண்களைப் பாதிப்புக்கு உள்ளாக்குகிறோம். மறுபுறம் ஆரோக்கியமற்ற உணவுகள் நம் ஒட்டுமொத்த ஆரோகியத்தையும் பாதிக்கும்போது, கண்களும் பாதிப்பு அடைகின்றன. இயற்கையான முறையில் கண்களைப் பாதுகாப்பதற்கான தீர்வுகள் சித்த மருத்துவத்தில் எப்படி எனக் காண்போம்.
கண்ணும் சித்தாவும்… 

நமது உடலில் வாதம், கபம், பித்தம் மூன்றும் சரியான அளவில் இருக்க வேண்டும். பித்தம் சிறிது அதிகரித்தாலும் கண்பார்வையைப் பாதிக்கும். உதாரணமாக, பித்தம் அதிகரிப்பதால் காமாலை வருகிறது. இதனால், பார்வை பாதிப்படைகிறது. நாம் அன்றாடம் பருகும் காபி, தேநீரில் உள்ள காஃபின் ரசாயனம் முதல் சமைக்கப் பயன்படுத்தும் புளி வரை பல உணவுகளில் பித்தம் உள்ளது. சிலருக்கு, சைனஸ் பிரச்னையால் முன் நெற்றியிலும் கண்களுக்குக் கீழேயும் நீர் கோத்து, பார்வைக் கோளாறு ஏற்படவும் வாய்ப்பு உண்டு. நெடுங்கால மலச்சிக்கலால் ஏற்படும் உடல் அழுத்தத்தால் சிலருக்குப் பார்வைக் கோளாறு ஏற்படலாம். அதீத உடல் சூட்டினால் கண் சிவப்பாகுதல், ஒவ்வாமை ஏற்படும்.
பார்வைத்திறனை மேம்படுத்தும் உணவுகள்

கேரட், வெள்ளரி, பப்பாளி போன்ற வைட்டமின் ஏ நிறைந்த காய்கறி, பழங்களைச் சேர்த்துக்கொள்ளலாம்.
இளநீர், நுங்கு, நீர்க் காய்கறிகள் போன்றவை கண்களுக்கு குளிர்ச்சி தரும்.
வைட்டமின் ஏ அதிகமாக உள்ள பொன்னாங்கண்ணிக் கீரை, பசலைக்கீரை, முருங்கைக் கீரை, அகத்திக்கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது கண்ணுக்கு மிகவும் நல்லது.
கண்ணில் ஏற்படும் புரை மற்றும் இதர கண் நோய்களுக்கு பொன்னாங்கண்ணி மிகச்சிறந்த மருந்து.
கண்ணைக் காக்கும் திரிபலா
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காயின் கலவையே திரிபலா சூரணம். இந்தச் சூரணம் ‘கர்ப்ப மாத்திரை’ என்ற பெயரில் சித்த மருந்துக் கடைகளில் மாத்திரை வடிவிலும் கிடைக்கிறது. அலோபதி சிகிச்சை எடுத்துக்கொள்பவர்களும், சர்க்கரை நோய் உள்ளவர்களும்கூட இந்த மாத்திரைகளைச் சாப்பிடலாம். திரிபலா சூரணத்தை, தினமும் தேன் அல்லது நெய்யில் குழைத்துக் காலையில் சாப்பிட்டுவருவதால் கண் நரம்புகள் வலுவடைகின்றன. குழந்தைகளுக்கு ஏற்படும் கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை குறைபாடுகள் நீங்கும். குழந்தைகளுக்கு, நன்கு காய்ச்சிய நெய்யில் திரிபலா சூரணத்தைக் குழைத்துக் கொடுப்பது நல்லது. இதனால், தசைகளுக்குள் மருந்து சுலபமாக ஊடுருவிச்செல்கிறது.
எண்ணெய்க் குளியல்தட்பவெப்பம் மற்றும் காலநிலை மாறும்போது மெட்ராஸ் ஐ போன்ற காற்று மூலம் பரவும் நோய்தொற்றுகள் ஏற்படுகின்றன. கோடை காலத்தில் கண்ணில் உள்ள நீர் வற்றிப்போகிறது. ஆடிமாதக் காற்றில் பல கிருமிகள் கண்களைப் பாதிக்கின்றன. குளிர்காலங்களில் சைனஸ் பிரச்னை ஏற்பட்டு, அடுக்குத்தும்மல், கண்களைச் சுற்றி நீர்கோத்தலால் கண்கள் கன்ஜங்ட்டிவிடிஸ் (Conjunctivitis) பாதிப்புக்கு உள்ளாகின்றன. சனிக்கிழமை நல்லெண்ணைக் குளியல் இதற்கு நல்ல தீர்வு. கடுக்காய்த்தூள், நெல்லிக்காய், மிளகு, வேப்பங்கொட்டை, கஸ்தூரி மஞ்சளை நன்கு பொடியாக அரைத்து, பாலில் கலந்தால் கிடைப்பதுதான் பஞ்சகல்பம். இதை, வாரம் ஒருமுறை தலையில் தேய்த்து, ஊறவைத்துக் குளித்தால், கண்கள் புத்துணர்ச்சி பெறும்.
சித்தா சிகிச்சைகள்
மரமஞ்சள், நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் கலவையை ‘இளநீர்க்குழம்பு’ என்பார்கள். இது, கண்புரையைத் தடுக்கிறது. `அதிமதுரம்’ என்ற பசைபோன்ற சித்த மருந்தை வெயில் காலங்களில் கண்ணுக்கு மையிட்டுக்கொள்வதைப்போல கீழ் இமைகளின் அடியில் பூசிக்கொள்வதன் மூலம், கண் சூட்டைத் தணிக்கலாம். இந்த முறைகளை சித்தமருத்துவரின் பரிந்துரையின் பேரில்தான் செய்ய வேண்டும்.
கண்களுக்கான பயிற்சிகள்
தினமும் காலை எழுந்தவுடன் ஆறு முதல் எட்டு மணிக்குள் சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது. இளம் சூரியக் கதிர்களை ஐந்து நிமிடங்கள் தொடர்ந்து பார்ப்பதன் மூலம், கண் நரம்புகள் புத்துணர்ச்சி பெறுகின்றன.
அலுவலகக் கணினி முன் நெடுநேரம் அமர்ந்து வேலைசெய்பவர்கள், அரை மணி நேரத்துக்கு ஒருமுறை கண்களை 10 முறை தொடர்ந்து சிமிட்டுதல் நல்லது.
இரு கைகளையும் நன்றாகத் தேய்த்துச் சூடுகிளப்பி, கண்களில் ஒற்றி எடுத்தால், கண் நரம்புகள் புத்துணர்ச்சி பெறும். ரத்த ஓட்டம் அதிகமாகும்.
அவ்வப்போது தொலைவில் உள்ளவற்றைப் பார்ப்பதன் மூலம், கண்களில் ஏற்படும் அழுத்தம் குறையும்.
அவ்வப்போது இடம், வலம், மேல், கீழ் எனக் கருவிழியை உருட்டிப் பார்ப்பது நல்லது.
வீட்டிலேயே செய்யக்கூடிய வழிமுறைகள்திரிபலா சூரணத்தை சுத்தமான நீரில் கலந்துகொள்ள வேண்டும். இந்த நீரை பஞ்சில் நனைத்து, கண்களுக்கு ஒத்தடம் கொடுக்கலாம் அல்லது பேக் போல் கண்களைச் சுற்றித் தடவலாம்.
இதே நீரை வடிகட்டி, தினமும் இரண்டு சொட்டுகள் கண்ணில் விடுவதன் மூலம், கண் சோர்வு நீங்கும்.
வெயில் காலத்தில் கண்ணில் ஏற்படும் எரிச்சல், பாக்டீரியா தொற்று, அரிப்பு , நீர்வற்றுதல், கண் தசை வீக்கத்தைத் தவிர்க்க இது ஓர் எளிய வழி.
தோல் சீவிய சோற்றுக் கற்றாழையின் சதைப்பகுதியை வைத்து கண்களுக்கு ஒத்தடம் கொடுக்கலாம்.
நந்தியாவட்டைப் பூக்களின் இலைகளைக் கண்களை மூடி, அதன் மேல்பரப்பில் வைத்து, அதன் மேல் துணியால் கட்டிக்கொண்டு அரை மணி நேரம் ஓய்வெடுக்கலாம்.
கண் குளிர்ச்சிக்காக வெள்ளரிக்காயை நறுக்கி, காலை, மாலை இருவேளையும் கண்களில் வைக்கலாம்.
நன்றி : டாக்டர் விகடன் - 01.04.2016

Wednesday, March 22, 2017

உள்ளாட்சி: ஐந்து ஆண்டுகள்...


உள்ளாட்சி: ஐந்து ஆண்டுகள்...

ஏழரை லட்சம் வேலைகள்...

ரூ.25 ஆயிரம் கோடிகள்...

எங்கே போனது மக்கள் பணம்?

ஒரு சுற்றுலா செல்வோமா? இன்பச் சுற்றுலா.

ஆனால், கற்பனைச் சுற்றுலா.

விளையாட்டு அல்ல, சொல்லப்போனால் மன நல மருத்துவத்தில் கையாளப்படும் உளவியல் சிகிச்சைகளில் முக்கிய மான ஒன்று இது.

வரலாறு காணாத வறட்சியை காணப்போகும் தமிழகத் துக்கு இத்தகைய அவசர சிகிச்சை மிக, மிக அவசியம். சிகிச்சையை தொடங்குவோம். கண்களை மூடிக் கொள்ளுங்கள். தமிழகத்தை கழுகுப் பார்வையில் பாருங்கள்.

சென்னை எவ்வளவு அழகாக இருக்கிறது, செம்பரம்பாக்கம் ஏரி யும் மணிமங்கலம் ஏரியும் நிரம்பி வழிகின்றன. கூவத்திலும் பக்கிங் ஹாம் கால்வாயிலும் படகுகள் ஓடு கின்றன. பச்சைப் பசுமையாக காட்சியளிக்கிறது காஞ்சிபுரம். எங்கு பார்த்தாலும் ஏரிகள். சூரிய ஒளி பட்டு நீல நிற வைரங்களாக அவை கண்களை கூச வைக்கின்றன.

வேலூரில் கரை புரண்டு ஓடுகிறது பாலாறு. நொய்யலின் கழுத்தில் வைர மாலையைத் தொங்க விட்டதுபோல இருபுறமும் வரிசையாக இருக்கும் குளங்களில் தண்ணீர் தளும்புகிறது. சிறுவாணியும் பவானியும் மோயாறும் பளிங்குபோல தெளிந்து ஓடுகின்றன.

டெல்டாவை பார்க்கும்போதே குளிர் கிறது. எங்கும் பச்சை தரித்திருக்கிறது பூமி. வளைந்து நெளிந்து ஓடுகிறாள் காவிரி. வீதிதோறும் ஓடும் கால் வாய்களில் சிறுவர்கள் குதித்து விளையாடுகிறார்கள். விவசாயிகள் கலகலப்பாக வேலை செய்கிறார்கள். மதுரையிலும் ராமநாதபுரத்திலும் வைகை யும் அவற்றின் குழந்தைகளான குளங்களும் கண்கொள்ளாக் காட்சி களாய் விரிகின்றன. தவழ்ந்து வரும் தாமிரபரணியையும் நிரம்பிக் கிடக்கும் பாண்டியர் அணைக்கட்டுகளையும் காண கண்கோடி வேண்டும்.

சுற்றுலாவை முடித்துக்கொள்வோமா?

நிஜத்துக்கு வருவோம்.

இப்போது நீங்கள் பார்த்தது எதுவும் கற்பனை இல்லை.

முழுக்க முழுக்க உண்மை.

முகத்தில் அறையும் உண்மை.

அத்தனையும் சத்தியம்.

நான் சொல்ல வில்லை. அரசாங்கம் சொல்கிறது. அரசாங்கத்தின் ஆவணங்கள் சொல் கின்றன. ஆவணங்களின் புள்ளி விபரங்கள் சொல்கின்றன.

அந்த ஆவணங்களில் தமிழகம் ஒளிர்கிறது, மிளிர்கிறது, மிடுக்கு நடை போடு கிறது. அந்த ஆவணங்களில் எழுதப் பட்டுள்ள கணக்கின்படி பார்த்தால் மேற்கண்ட வர்ணனை கூட குறைவு தான்.

இன்னும் சொல்லப்போனால் தமிழகம் இந்தியாவின் முதன்மை மாநிலமாக மட்டுமல்ல, ஆசியாவின் முதன்மை மாநிலமாகவும் திகழக்கூடும்.

குறிப்பாக நீர் நிலைகளை மேம் படுத்தவும் வறட்சியை போக்கவும் மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தில் செய்யப்பட்ட வேலைகளை மட்டும் எடுத்துக் கொள்வோம். ஒவ் வொரு வட்டாரத்துக்கும் இரண்டு பொறியாளர்கள், மூன்று பணி மேற்பார்வையாளர்கள், மூன்று கணினி இயக்குநர்கள், தலா ஒரு துணை வட்டார வளர்ச்சி அலுவலர், அவர்களுக்கு தலா ஒரு உதவியாளர் என 1901 பேர் பணிபுரிகிறார்கள்.

இவர்களைக் கண்காணிக்கவும், திட் டங்களைத் தீட்டவும், வேலை வாங்க வும் நூற்றுக்கணக்கான உயர திகாரிகள், ஐ.ஏ.எஸ்-கள், மாவட்டந் தோறும் ஆட்சியர்கள் இருக்கி றார்கள். இவர்களுக்கு மேல் சட்டப் பேரவை உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மாண்புமிகு அமைச் சர்கள், முதலமைச்சர்.

இப்படியான மாபெரும் அதி காரமும் பணபலமும் பொருந்திய தமிழக அரசு இயந்திரம் கடந்த 2012-13 நிதியாண்டு தொடங்கி, 2016-17 நிதியாண்டின் இந்த மாதம் வரை தமிழகத்தின் நீர் நிலைகளில் மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தின் கீழ் மட்டும் செய்துள்ள பணிகளைப் பார்ப்போமா?

மாநிலம் முழுவதும்

வெள்ளக் கட்டுப்பாடு திட்டத்தில் 4,064 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதில் ரூ.85 கோடி மனித உழைப்பு ஊதிய மாக வழங்கப்பட்டிருக்கிறது.

கருவி களின் செயல்பாட்டுக்கு ஒன்றரைக் கோடி ரூபாய் செலவிடப்பட்டி ருக்கிறது.

தண்ணீர் பாதுகாப்பு மற்றும் மழைநீர் சேமிப்பு திட்டத்தில் 92,856 பணிகள் நடந்திருக்கின்றன.

இதற்காக ரூ.2,673 கோடி ஊதியமாக வழங்கப் பட்டிருக்கிறது. கருவிகளின் செயல் பாட்டுக்கு ரூ.48 கோடி செலவிடப் பட்டிருக்கிறது.

பாரம்பரிய நீர் நிலைகள் புனரமைப்புத் திட்டத்தில் 3,13,710 பணிகள் நிறைவேற்றப்பட்டி ருக்கின்றன.

ரூ.11,096 கோடி ஊதிய மாக வழங்கப்பட்டிருக்கிறது.

கருவிகளின் செயல்பாட்டுக்கு ரூ.188 கோடி செலவிடப்பட்டிருக்கிறது.

வறட்சி பாதுகாப்பு திட்டத்தில் 36,536 பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

ரூ.326 கோடி ஊதியமாக வழங்கியிருக்கிறார்கள்.

ரூ.14 கோடி கருவி களின் செயல்பாட்டுக்கு செலவிடப் பட்டிருக்கிறது.

கால்வாய்கள் புனரமைத்தல் திட்டத்தில் 72,745 பணிகள் செய்திருக்கி றார்கள்.

ரூ.1,875 கோடி ஊதியமாக வழங்கி இருக்கிறார்கள்.

ரூ.32 கோடி கருவிகளின் செயல்பாட்டுக்கு செலவிடப்பட்டிருக்கிறது.

பட்டியல் மற்றும் பழங்குடி இனத்தினரின் பாசன ஆதாரங்களை மேம்படுத்து வதற்காக 2,57,062 பணிகளைச் செய்திருக்கிறார்கள்.

ஊதியமாக ரூ.325 கோடி வழங்கியிருக்கிறார்கள்.

கருவிகளின் செயல்பாட்டுக்கு ரூ.77 கோடி செலவிடப்பட்டிருக்கிறது.

மொத்தமாக கடந்த ஐந்து ஆண்டு களில் வறட்சியை தடுப்பது, நீர் நிலைகள் மற்றும் விவசாயி களின் மேம்பாட்டுக்காக மட்டும் 7,76,973 பணிகள் நிறைவேற்றப் பட்டிருக்கின்றன.

ரூ.23,552 கோடி செலவிடப்பட்டிருக்கிறது.

இதில் ரூ.18,788 கோடி ஊதியமாக வழங்கப் பட்டிருக்கிறது.

நூறு நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தில் மட்டுமே இத்தனை பணிகள்.

சுமார் கால் லட்சம் கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டிருக்கிறது.

இதுமட்டுமா?

பொதுப்பணித் துறை,

வேளாண்மைத் துறை,

வேளாண்மைப் பொறியியல் துறை,

நீர் வள ஆதாரப் பிரிவு,

அணைப் பாதுகாப்புப் பிரிவு,

வடிவமைப்பு, ஆராய்ச்சிகள் மற்றும்

கட்டுமான ஆதரவுப் பிரிவு,

திட்ட உருவாக்கப் பிரிவு,

நிலத்தடி நீர்ப் பிரிவு,

நீர் வள மையம்

என துறை வாரியாக, பிரிவுகள் வாரியாக ஏராளமான திட்டங்களைச் செயல் படுத்தியிருக்கிறார்கள். மேற்கண்ட புள்ளிவிபர தொகையுடன் சேர்த்தால் தோராயமாக ஐந்து ஆண்டுகளில் அரை லட்சம் கோடி ரூபாயாவது நீர் நிலை ஆதாரங்களை மேம்படுத்த செலவழித்திருக்கக் கூடும்.

அரசு ஆவணங்கள் சொல்வது உண்மையெனில்

எங்கே போயின தூர் வாரிய குளங்கள்?

எங்கே போயின தூர் வாரிய ஏரிகள்?

எங்கே போயின தூர் வாரிய கண்மாய்கள்?

எங்கே போயின கால்வாய்கள்?

சேகரித்த தண்ணீர் எல்லாம் எங்கே போனது?

மக்களின் உழைப்பெல்லாம் என்ன ஆனது?

ஆவணங்களில் கணக்கு காட்டியது போல அரசாங்கம் செய்திருந்தால் தமிழக விவசாயி செத்து நாற்றமெடுக்கும் எலியை வாயில் கடித்துக்கொண்டு ஏன் போராட வேண்டும்?

மானங்கெட வெறும் கோவணத்தைக் கட்டிக் கொண்டு தலைநகரில் ஏன் தலையில் அடித்துக்கொள்ள வேண்டும்? யோசித் துப் பாருங்கள், நல்ல மன நிலையில் இருந்தால் அவர்கள் இவ்வாறு எல்லாம் செய்வார்களா? விவசாயிகளின் பணத்தைச் சாப்பிடுவது அசிங்கம் இல்லையா? அது பெற்ற தாயை விற்பதற்கு சமம் இல்லையா?

- தொடரும்... | எண்ணங்களைப் பகிர: sanjeevikumar.tl@thehindutamil.co.in

டி.எல்.சஞ்சீவிகுமார்

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 22.03.2017