வங்கிக் கணக்கில் ரூ.5000/- இருப்பு இருக்க வேண்டும்!
வங்கி சேமிப்புக் கணக்கு வைத்திருப்போர் ரூ.5 ஆயிரம் இருப்புத்தொகை வைத்திருக்காவிட்டால் அபராதம்!
புதுதில்லி: வங்கி சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத்தொகையாக 5 ஆயிரம் ரூபாய் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. தவறினால் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உயர்மதிப்புடைய ரூ. 500 மற்றும் ரூ. 1,000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ஆம் தேதி அறிவித்தது. இதற்கு மாற்று ஏற்பாடாக, ரூ. 2,000 நோட்டும், பிரத்யேக அம்சங்களைக் கொண்ட புதிய ரூ. 500 நோட்டும் அறிமுகப்படுத்தப்படும் என அரசு அதிரடியாக அறிவித்தது. இதைத்தொடர்ந்து பல விதமான அதிரடி அறிவிப்புகள் தினம் தினம் வெளியிடப்பட்டு வந்தது.
நாட்டில் ரொக்கப் பணப் பரிமாற்றத்தை குறைத்து டிஜிட்டல் பரிமாற்றத்தை கொண்டு வர மத்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் தனியார் வங்கிகள் 4 முறைக்கு மேல் ரொக்கப் பணப் பரிமாற்றத்துக்கு ரூ.150 கட்டணம் விதிக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்தது.
இதைத்தொடர்ந்து அதிரடியாக நேற்று எஸ்ஐடி குழு அளித்த பரிந்துரைப்படி, ரூ.3 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக பரிமாற்றம் செய்ய தடை விதித்து பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக தனிநபர் ஒருவர் கையில், அதிகபட்சமாக ரூ.15 லட்சத்துக்கு மேல் வைத்திருக்க தடை விதிக்கும் பரிந்துரையை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியானது. இது தொடர்பாக அடுத்த வாரம் தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நிதி மசோதாவாக தாக்கல் செய்து ஒப்புதல் பெறப்படலாம் என நிதி அமைச்சக வட்டராங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், வங்கி சேமிப்புக் கணக்கிலும் பொதுமக்களுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் விதத்தில் பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி புதிய அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.
அதன்படி, பெருநகரங்களில் வசிப்பவர்கள் குறைந்தபட்ச தொகையாக 5 ஆயிரம் ரூபாய் சேமிப்புக் கணக்காக கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என அறிவித்துள்ளது. நகர்ப்புறங்களில் இருப்பவர்கள் 3 ஆயிரம் ரூபாயும், புறநகர் பகுதிகளில் இருப்பவர்கள் 2 ஆயிரம் ரூபாயும், கிராமப்புறங்களில் இருப்பவர்கள் ஆயிரம் ரூபாயும் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
மேலும், குறைந்தபட்ச வைப்பு தொகைக்கும் கீழ் வைத்திருப்பவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட உள்ளதாகவும், இந்த புதிய முறை ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
இந்த அபராத தொகை, குறைந்த பட்ச இருப்பு தொகையை விட எவ்வளவு தொகை குறைவாக உள்ளதோ, அதன் அடிப்படையில் வசூலிக்கப்படும் என்றும், உதாரணமாக, 50 முதல் 75 சதவீதம் வரை குறைவாக இருந்தால் அவர்களிடம் 75 ரூபாயுடன் சேவை வரியும் சேர்த்து வசூலிக்கப்படும் என்றும், 50 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தால் 50 ரூபாயுடன் சேவை வரியும் சேர்த்து வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏடிஎம். இயந்திரளில் 3 முறைக்கு மேல் பணம் எடுத்தால் 50 முதல் 150 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும் என தனியார் வங்கிகள் கூறி வரும் நிலையில், ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுக்க மாதத்திற்கு 10 முறை வரை கட்டணம் இல்லாமல் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கலாம் என எஸ்பிஐ அறிவித்துள்ளது. இந்த நடைமுறை ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.
நன்றி : தினமணி நாளிதழ் - 04.03.2017
No comments:
Post a Comment