பி.எப்., பணம் எடுக்க எளிய விண்ணப்ப முறை
பி.எப்., கணக்கில் இருந்து பணம் எடுக்கும் முறை எளிமையாக்கப்பட்டு, ஒருங்கிணைந்த ஒரு பக்க விண்ணப்ப வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், பகுதி அளவு தொகையை எடுத்துக் கொள்வதற்கான வழிமுறையும் எளிமையாக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் சேமநல நிதியான, பி.எப்., ஓய்வு காலத்திற்கான சேமிப்பாக அமைகி¬றது. எனினும், பி.எப்., கணக்கு வைத்திருக்கும் ஒருவர், வேலையில் இருந்து விலகிய பிறகு, குறைந்த பட்சம் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு மேல் வேலை இல்லாமல் இருந்தால், தன் கணக்கில் உள்ள தொகையை விலக்கி கொள்ளலாம்.
அதே போல திருமணம், மருத்துவ அவசரத்தேவை, வீடு கட்டுவது போன்றவற்றுக்காக பகுதி அளவு தொகையை ஐந்தாண்டுகளுக்கு பின் விலக்கி கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.
ஒரு பக்க விண்ணப்பம்
இதற்கு முன், பி.எப்., தொகையை விலக்கி கொள்ள படிவம், 19 அல்லது பென்ஷன் நிதி திட்ட சான்றிதழ் பெற படிவம், 10சி அல்லது பகுதி அளவு தொகையை எடுக்க படிவம், 31 ஆகிய வற்றை சமர்பிக்க வேண்டும்.
இப்போது இவை அனைத்தும் ஒரே படிவமாக ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது. இந்த ஒரு பக்க படிவத்தை இனி பயன்படுத்தலாம்.
http://bit.ly/2ly17Ju
இரண்டு வகையில் இந்த படிவம் அறிமுகம் ஆகியுள்ளது. முதல் படிவம் ஆதார் அடிப்படையிலானது. தங்கள், பி.எப்., கணக்கிற்கான யூ.ஏ.என்., பெற்று அதை ஆதார் எண்ணுடனும், வங்கி கணக்குடனும் இணைத்துள்ளவர்கள் இந்த படிவத்தை பயன்படுத்தலாம்.
இப்படி கணக்கை இணைக்காதவர்கள் ஆதார் அல்லாத படிவத்தை பயன்படுத்தலாம். ஆதார் அடிப்படையிலான படிவத்தில், பெயர், முகவரி, மொபைல்போன் எண், ஆதார் எண், யூ.ஏ.என்., நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்த மற்றும் விலகிய தேதி ஆகியவற்றை மட்டும் குறிப்பிட்டால் போதுமானது.
பணியில் இருந்து விலகிய காரணத்தையும் குறிப்பிட வேண்டும். பகுதி அளவு விலக்கலுக்கு, பணம் தேவைப்படும் காரணத்தை குறிப்பிட்டு தொகையை தெரிவித்தால் போதுமானது. பணிபுரியும் நிறுவனத்தின் அத்தாட்சி தேவையில்லை.
ஆதார் அல்லாத படிவத்தில் பிறந்த தேதி, தந்தை பெயர், வங்கி கணக்கு எண் போன்ற கூடுதல் விபரங்களை தெரிவிக்க வேண்டும்.
யு.ஏ.என்., பெறாதவர்கள் பி.எப்., கணக்கு எண்ணை குறிப்பிட வேண்டும்.
ஆவணங்கள் வேண்டாம்
பழைய முறையில், திருமணம் போன்ற தேவைக்காக பகுதி அளவு பணம் எடுக்கும் போது, திருமண பத்திரிகை போன்றவற்றை இணைக்க வேண்டும்.
ஆனால், இப்போது இவை அவசியம் இல்லை. உறுப்பினர் மட்டும் கையெழுத்திட்டு தெரிவித்தால் போதுமானது. எனினும், மருத்துவ தேவை எனில் அதற்கான ஆதாரத்தை இணைக்க வேண்டும்.
பணம் எடுப்பது எளிதாகி இருந்தாலும், பி.எப்., சேமிப்பு, ஓய்வு காலத்திற்கானது என்பதையும், தவிர்க்க இயலாத சூழல் தவிர இடையே பணத்தை விலக்கி கொள்ளாமல் இருப்பதே உகந்தது என்றும் நிதி வல்லுனர்கள் வலியுறுத்துகின்றனர்.
நன்றி : தினமலர் (வர்த்தகமலர்) - 06.03.2017
No comments:
Post a Comment