ஆள் மாறாட்டம், பெண் கைது!
ஜாமீனுக்காக ஆள்மாறாட்டம் செய்ததால் விபரீதம் ரூ.500க்கு ஆசைப்பட்டு சிறைக்கு சென்ற பெண்: ஐகோர்ட்டில் பரபரப்பு
சென்னை : சென்னை கண்ணகி நகரை சேர்ந்த சூர்யா. இவர் போதை மருந்து மற்றும் மயக்க மருந்துகளை சட்டத்திற்கு விரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்துள்ளார்.
இதையடுத்து கடந்த 2016ம் ஆண்டு கண்ணகி நகர் போலீசார் சூர்யாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் சூர்யாவின் ஜாமீன் வழக்கு நேற்று முன்தினம் உயர் நீதிமன்றத்தில் உள்ள முதன்மை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சூர்யா தரப்பில் ரூ.1 லட்சம் ஜாமீனில் விடுவிக்க கோரி சத்தியபாமா என்ற பெண் உரிமை கோரினார்.
அதற்கான ஆவணங்களையும் அவர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். நீதிபதி ஆவணங்களை சரிபார்த்த போது சத்தியபாமா அளித்த வாக்காளர் அடையாள அட்டையில் வேறு ஒரு பெண்ணின் புகைப்படம் இருந்தை பார்த்து சந்தேகம் அடைந்து, சத்தியபாமாவிடம் இது உங்கள் புகைப்படமா என்று கேட்டார். அதற்கு அந்த படம் என்னுடைய படம் தான் என்று கூறியுள்ளார்.
ஆனால், சந்தேகம் தீராததால் நீதிபதி இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன்படி நீதிமன்ற பெஞ்ச் கிளர்க் பஞ்சவர்ணம் (42) உயர் நீதிமன்ற காவல் நிலையத்தில் சத்தியபாமா மீது புகார் அளித்தார்.
அதன்படி வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்திய போது சத்தியபாமா என்ற பெயரில் சைதாப்பேட்டை வெங்கடாபுரத்தை சேர்ந்த விஜயலட்சுமி என்று தெரியவந்தது.
இவர் ரூ.500க்கு ஆசைப்பட்டு சத்தியபாமா என்ற பெயரில், ஜாமீனுக்காக ஆள்மாறட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து விஜயலட்சுமியை போலீசார் கைது செய்தனர். ஜாமீனுக்காக நீதிமன்றத்தில் ஆள்மாறட்டம் செய்த சம்பவம் உயர் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நன்றி : தினகரன் நாளிதழ் - 16.03.2017
No comments:
Post a Comment