disalbe Right click

Monday, March 20, 2017

ரத்தசோகையை ஏற்படுத்தும் உதிரப்போக்கு


ரத்தசோகையை ஏற்படுத்தும் உதிரப்போக்கு
வயதிற்கேற்ப மாதவிடாய் பிரச்னை மாறுபடும். பெண்களின் பருவத்தை பதின்பருவம், நடுத்தர வயது, மாதவிடாய் நிற்கும் பருவம் என பிரிக்கலாம்.
பூப்பெய்தியவுடன் ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் வரும் என எதிர்பார்க்க முடியாது.

இரண்டு மாதங்கள் முதல் ஓராண்டு கழித்துகூட வரலாம்.
கருப்பை மற்றும் சினைப்பை சரியாக முதிர்ச்சி அடையாமல் இருப்பதே இதற்கு காரணம்.
பதின்பருவ பெண்கள் சிலருக்கு அதிக உதிரப்போக்கு ஏற்பட்டு ரத்தசோகையில் முடியலாம்.
ஹார்மோன் மாற்றங்களினால் அதிகமான உதிரப்போக்கு ஏற்பட வாய்ப்புண்டு. இதை மாத்திரைகளால் சரிசெய்ய முடியும். பதின்பருவ பெண்கள் சினைப்பை நீர்கட்டி நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
உடற்பயிற்சி, சரிவிகித உணவின் மூலம் உடல்பருமனை குறைத்து இந்நோயை ஓரளவு கட்டுப்படுத்தலாம். மிகவும் அரிதாக ரத்தம் உறைதலில் குறைபாடுள்ள பெண்களுக்கு அதிக உதிரப்போக்கு ஏற்படலாம்.
நடுத்தர வயது பிரச்னை நடுத்தர வயதுகளில் 22 முதல் 35 நாட்களுக்கு ஒருமுறை மாதவிடாய் வருவதும், 4 - 5 நாட்கள் வரை உதிரப்போக்கு இருப்பதும் இயல்பானது.
சில பெண்கள் எவ்வளவு அதிகமாக உதிரம் வெளியேறினாலும், நான்கு நாட்கள் தானே என நினைக்கின்றனர்.
இரண்டு நாட்களுக்கு மிக அதிகமாக உதிரப்போக்கு என்றாலும், அது பிரச்னைக்குரியது. மாதவிடாய் சம்பந்தமாக எந்த சந்தேகத்தையும் நாமாக அனுமானிக்காமல் மகளிர் மருத்துவரை அணுகுவதே நல்லது.
சிலபெண்களுக்கு மாதவிடாய் பிரச்னையாக உள்ளது என்பதே அவர்களது ஹீமோகுளோபின் அளவு மிகவும் குறைவாக இருப்பதை வைத்து தான் கண்டுபிடிக்க முடியும்.
சுழற்சி காலம் 20 நாட்களுக்குள் இருந்தாலோ, 35 நாட்களுக்கு மேல் வந்தாலோ, ஐந்து நாட்களுக்கு மேல் தொடர்ந்து உதிரப்போக்கு ஏற்பட்டாலோ மருத்துவரை அணுக வேண்டும்.
காரணங்கள் என்ன?
மாதவிடாய் தள்ளி போவதற்காக அடிக்கடி உட்கொள்ளும் ஹார்மோன் மாத்திரைகள்; காப்பர் டி எனப்படும் கருத்தடை சாதனம்; கர்ப்பப்பையின் உட்புறசுவரில் ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும் விளைவுகள்; கர்ப்பப்பை வாய்ப்பகுதியில் ஏற்படும் புண், கட்டிகள்; கருப்பையில் ஏற்படும் கட்டிகள் ஆகியவையே மாதவிடாய் பிரச்னைக்கான காரணங்கள்.
கர்ப்பப்பையின் வாய் பகுதியில் நாள்பட்ட புண் இருந்தாலோ 'பாலிப்' எனப்படும் சிறுகட்டிகள் இருந்தாலோ உதிரப்போக்கு ஏற்பட வாய்ப்புண்டு.
மாதவிடாய் நிற்கும் நேரத்தில், அதிக உதிரப்போக்கு ஏற்படுவது இயல்பானதல்ல.
சுழற்சிநாட்கள் மாறலாம். அதிக உதிரப்போக்கால் ரத்தசோகை ஏற்படும். இதனால் உடல் வலுவிழந்து மூச்சுதிணறல், படபடப்பு, நெஞ்சுவலி, தலைசுற்றல் ஏற்பட வாய்ப்புள்ளது.
ரத்தசோகைக்கு பல காரணங்கள் இருந்தாலும் மாதவிடாய் கோளாறே முக்கிய காரணம்.
பதின்பருவத்தினரோ, பெரியவர்களோ மாதவிடாய் பிரச்னையாக இருக்கிறது எனில், மகளிர் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவதே நல்லது. ஹார்மோன் மாத்திரைகள் மருத்துவர் கண்காணிப்பின் கீழ் உட்கொள்ள வேண்டும்.
-டாக்டர் சுஜாதா சங்குமணி, மதுரை, 94422 72876
நன்றி : தினமலர் நாளிதழ் - 20.03.2016

No comments:

Post a Comment