சிவில் வழக்கை எந்தக் கோர்ட்டில் போட வேண்டும்?
சிவில் வழக்குகளை எந்த கோர்ட்டில் போட வேண்டும் என்பதில் சட்டம் தெளிவாக்கி உள்ளது. இது சிவில் நடைமுறைச் சட்டம் 1908 என்ற சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது.
எல்லாச் சிவில் வழக்குகளுக்கும் இதுதான் பைபிள். ஒரு சிவில் வழக்கை யார், எப்படி, யார்மீது, எப்போது, எந்த கோர்ட்டில் போடவேண்டும் என்று இதில் தெளிவு
படுத்தப்பட்டுள்ளது.
ஒரு வழக்கு “சிவில் வழக்குதான்” என்பதை எப்படி முடிவுக்கு வரமுடியும்? அந்த வழக்கில் சிவில் உரிமை இருந்தால் அது சிவில் வழக்கு. சிவில் உரிமை என்பது மனிதனின் எல்லா சிவில் உரிமைகளும் இதில் அடங்கும்.
வேறு தனிச் சட்டங்கள் அந்த சிவில் உரிமைக்கு ஏற்பட்டுத்தாதவரை, எல்லா சிவில் உரிமை வழக்குகளையும் சிவில் கோர்ட்டிலேயே தாக்கல் செய்யலாம்.
பொதுவாகச் சொன்னால், கடன் கொடுத்த பணத்தை திரும்ப வசூல் செய்வது, அசையாச் சொத்தில் ஏற்படும் எல்லா உரிமைகளும், சிவில் உரிமைகளே!
கிரிமினல் குற்றங்களைத் தவிர மற்ற எல்லா உரிமைகளும் சிவில் உரிமை என்று பொதுவாக எடுத்துக் கொள்ளலாம்.
ஒரு கோயிலில் சாமி கும்பிடுவது, அந்த சாமியை நம்புவது, அந்த சாமியைப் பற்றி பிரசங்கம் செய்வது என்பது அவனின் சிவில் உரிமைதான் என்று சென்னை ஐகோர்ட் 1982ல் ஒரு வழக்கில் இந்த தீர்ப்பை வழங்கியது (AIR 1982 Mad 170).
அதேபோலவே சுப்ரீம் கோர்ட்டும் 1995ல் ஒரு வழக்கில் அப்படியே தீர்ப்பு கூறி உள்ளது (AIR 1995 SC 2001). சாமி கும்பிடுவது ஒருவனின் தனிப்பட்ட சிவில் உரிமை. எனவே அதில் மற்றவர் தலையிட முடியாது.
ஆனாலும், எப்படிச் சாமி கும்பிடவேண்டும் என்றும் கோயிலில் பூஜை முறைகள் எப்படி இருக்க வேண்டும் என நினைப்பது அல்லது கேட்பது அவனது சிவில் உரிமை இல்லை என்று ஒரு விளக்கமான தீர்ப்பை 1994ல் சென்னை ஐகோர்ட் வழங்கி உள்ளது (AIR 1994 Mad 27).
அசையாச் சொத்துக்களின் மீது வழக்குப் போடுவது என்பது ஒருவரின் சிவில் உரிமை சார்ந்ததே!
ஆனாலும், வேறு ஒரு சட்டப்படி அந்த பிரச்சனைக்கு தீர்வு இருந்தால், அதைச் சிவில் வழக்காக, சிவில் கோர்ட்டில் தாக்கல் செய்ய முடியாது. உதாரணமாக, பொது உபயோகத்துக்காக நில எடுப்பு செய்யும் அரசாங்க வேலைகளில், அதற்கென தனியே நில எடுப்புச் சட்டம் இருப்பதால், அதில் பாதிக்கப்பட்டவர், அதை சிவில் வழக்காகக் கருதி, சிவில் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்ய முடியாது.
இந்தியாவில் சிவில் கோர்ட்டுகள் பல அடுக்கு முறைகளில் உள்ளன. தாலுகா அளவில் மாவட்ட முன்சீப் கோர்ட்டுகளும், சப்-கோர்ட்டுகளும், மாவட்ட அளவில் மாவட்டக் கோர்ட்டுகளும், மாநில அளவில் ஐகோர்ட்டுகளும், தேசிய அளவில் சுப்ரீம் கோர்ட்டும் உள்ளன.
சிவில் நடைமுறைச் சட்டம் 1908ல் பிரிவு 16-ம், பிரிவு 20-ம், எங்கு ஒரு சிவில் வழக்கைப் போட வேண்டும் என சொல்கிறது.
பிரிவு 16
பிரிவு 16, அசையாச் சொத்துக்களைப் பற்றியவழக்குகளைச் சொல்கிறது.
அதன்படி, அசையாச் சொத்தில் ஒருவருக்கு உள்ள உரிமையை நிலைநாட்டவும், அடுத்தவர் தொந்தரவு செய்தால் அதைத் தடுக்கவும், பாகப்பிரிவினை வழக்குகளும், அசையாச் சொத்தின் கிரயம், அடமானம் தொடர்பான வழக்குகளையும், அந்த அசையாச் சொத்து எந்த இடத்தில் இருக்கிறதோ அந்த எல்லைக்குள் உள்ள கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் எனச் சொல்கிறது.
பிரிவு 20
பிரிவு 20, அசையாச் சொத்து அல்லாத பிற வழக்குகளை (அதாவது பணம் கொடுக்கல் வாங்கல், போன்ற பணப்பிரச்சனை கொண்ட வழக்குகளை) எதிர்பார்ட்டி எந்த இடத்தில் வசிக்கிறாரோ அல்லது எந்த இடத்தில் வியாபாரம் செய்து வருகிறாரோ, அந்த எல்லைக்குள் இருக்கும் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று சொல்கிறது.
மேலும், இந்த பணம் கொடுக்கல் வாங்கல் செய்யும்போது, அல்லது ஒரு உடன்படிக்கை கையெழுத்து ஆகும்போது, அவை எந்த இடத்தில் நிகழ்ந்ததோ, அல்லது பல இடங்களில் நிகழ்ந்திருந்தால், அப்படி நடந்த ஏதாவது ஒரு இடத்தின் எல்லைக்குள் உள்ள கோர்ட்டில் அந்த வழக்கை தாக்கல் செய்யலாம் என்ற சலுகையும் உள்ளது.
எந்த எல்லைக்குள் உள்ள கோர்ட்டில் வழக்குப் போடலாம் என்று முடிவான பிறகு, வேறு ஒரு விஷயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அந்தச் சிவில் வழக்கு எவ்வளவு தொகை சம்மந்தப்பட்ட வழக்கு என்று கணக்கிட்டுக் கொள்ள வேண்டும்.
அந்த தொகைக்கு ஏற்ப அந்த வழக்கை மாவட்ட முன்சீப் கோர்ட், சப்-கோர்ட், மாவட்ட கோர்ட், ஐகோர்ட் என எங்கு அந்த வழக்கை தாக்கல் செய்யலாம் என முடிவு செய்ய வேண்டும். அதைpecuniary jurisdiction பெக்யூனரி வரையறை என்பர்.
சென்னை போன்ற நகரங்களில், ரூ.5,000/-க்கு குறைவான வழக்காக இருந்தால், அதை சென்னை ஸ்மால் காஸஸ் கோர்ட் என்னும் சிறு வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.
சென்னை தவிர வேறு பகுதிகளாக இருந்தால், ரூ.1 லட்சம் வரையிலான தொகை கொண்ட வழக்குகளை மாவட்ட முன்சீப் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்.
ரூ.5 லட்சம் வரையிலான தொகை கொண்ட வழக்காக இருந்தால், சப்-கோர்ட் என்னும் சப்ஆர்டினேட் கோர்ட்டில் (Sub-Ordinate Court or Sub-Court) தாக்கல் செய்ய வேண்டும்.
ரூ.5 லட்சத்துக்கு மேற்பட்ட வழக்காக இருந்தால் மாவட்ட அளவில் உள்ள மாவட்ட கோர்ட்டில் (District Court) தாக்கல் செய்ய வேண்டும்.
சென்னை பெருநகரில் வேறு மாதிரி பிரிவுகள் உள்ளன.
அதன்படி, ரூ.10 லட்சம் வரை சென்னை உதவி சிட்டி சிவில் கோர்ட்டில் (Asst. City Civil Court) தாக்கல் செய்ய வேண்டும்.
ரூ.25 லட்சம் வரை சென்னை மாவட்ட சிட்டி சிவில் கோர்ட்டில் (Principal District Court and Addl. District Court) தாக்கல் செய்யலாம்.
மேலும் இன்னொரு சலுகையாக, சென்னை எல்லைக்குள் உள்ள வழக்குகளில் ரூ.25 லட்சத்துக்கு மேல் தொகை உள்ள வழக்குகளை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யலாம்.
சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யும் சிவில் வழக்குகளுக்கு நீதிமன்றக் கட்டணம் வெகுகுறைவு. அதாவது 1% கட்டணமே.
ஆனால் மற்ற எல்லாக் கோர்ட்டுகளிலும் தாக்கல் செய்யும் சிவில் வழக்குகளுக்கு 7.5% நீதிமன்றக் கட்டணம். (இந்த 7.5% கட்டணம் அதிகம் என்று தமிழக அரசு மீது தொடர்ந்த வழக்கு இன்னும் முடிவுக்கு வராமல் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது).
இப்படியாக சிவில் வழக்குகளை அந்தந்த மட்டத்தில் உள்ள சிவில் கோர்ட்டில் தாக்கல் செய்யலாம்.
நன்றி : திரு Advocate Balakrishnan (17.11.2016)
https://gblawfirm.blogspot.in -ல் இருந்து
No comments:
Post a Comment