நெடுஞ்சாலையில் மதுக்கடைகள் - சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
நெடுஞ்சாலை டாஸ்மாக் மட்டுமல்ல... பார் உள்ள ஸ்டார் ஹோட்டல், பப்புகளுக்கும் தடை உச்ச நீதிமன்றம் அதிரடி
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையில் மதுக்கடைகள் இருப்பதால், வாகன ஓட்டிகளை அது ஈர்க்கிறது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.
எனவே, நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மதுபானக் கடைகளை அகற்ற வேண்டும்' என்று வழக்கறிஞர் பாலு 2012-ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில், தமிழகத்தின் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் 500 மீட்டர் தூரத்துக்குள் அமைந்துள்ள கடைகளை அகற்றுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்குத் தடை கோரி தமிழக அரசு சார்பில், வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட், ''நாடு முழுவதும் உள்ள தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள கடைகளை அகற்ற வேண்டும். 2017 ஏப்ரல் 1-ம் தேதிக்குப் பிறகு, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் எந்த ஒரு மதுபான விற்பனை கடையோ, பாரோ இருக்கக் கூடாது. மேலும், 'மதுக்கடைக்குச் செல்லும் வழி' என்ற விளம்பரத்தைக்கூட நெடுஞ்சாலைகளில் வைக்கக் கூடாது'' என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்கத் தீர்ப்பை 2016 டிசம்பர் 15-ம் தேதி வெளியிட்டார்.
இதையடுத்து, 'தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தொலைவைத் தாண்டியே கடைகள் இருக்க வேண்டும் என்பதை 100 மீட்டராக மாற்றியமைக்க வேண்டும். காலக்கெடுவை நவம்பர் 28 வரை நீட்டிக்க வேண்டும். தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என்று தமிழக அரசு மனு செய்திருந்தது.
அதேபோல், 'இந்தத் தடையால் எங்களுக்குப் பல கோடி ரூபாய் வரி வருவாய் இழப்பு ஏற்படும். மேலும், நட்சத்திர விடுதிகள், பார் போன்ற இடங்களிலும் மது விற்பனை செய்யப்படுகிறது. இவையும் 500 மீட்டர் தூரம் என்ற அளவீட்டில் அடங்குமா ?' என்று சில தெளிவு கேட்டும்' பல மாநிலங்களும் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தன.
இந்த வழக்கை உச்சநீதிமன்ற இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வந்தது. கடந்த திங்கட்கிழமையில் இருந்து தீர்ப்புக்காக மாநில அரசுகள் காத்திருந்தன. ஆனால், அமர்வில் அடங்கிய நீதிபதி விடுப்பில் சென்றதால், தீர்ப்பு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. இந்தநிலையில், வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வினர், 'ஏப்ரல் 1-ம் தேதி முதல் நெடுஞ்சாலையில் உள்ள கடைகள் செயல்படக்கூடாது' என்று உறுதிபடத் தெரிவித்ததோடு, தீர்ப்பு தேதியையும் இன்றைய தினத்துக்கு (31-03-2017) ஒத்திவைத்தனர்.
இதையடுத்து, இன்று (31-03-2017) பிற்பகல் தீர்ப்பு வெளியாகியுள்ளது.
அதில், 'எல்லா வகையான மது விற்பனை நிலையங்கள், கடைகள், உணவங்களுக்கும் இந்தத் தீர்ப்பு பொருந்தும்' என்று உச்ச நீதிமன்றம் உறுதியாகக் கூறிவிட்டது. மேலும், 'மேற்கண்ட விற்பனைகளுக்கு இந்த உத்தரவு பொருந்தாது என்றால், எந்த நோக்கத்துக்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறதோ, அது நிறைவேறாமலே போய்விடும்' என்று தெரிவித்துள்ளது.
இருப்பினும் தீர்ப்பில் சில மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.
500 மீட்டர் என்பது பெரிய நகரங்களுக்குப் பொருந்தும். அதுவே, 20 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட சிறிய நகர்ப்புறமாக இருந்தால், அங்கு 220 மீட்டர் தூரத்துக்குக் கடைகள் இருக்கக் கூடாது என்ற விலக்கும் அளிக்கப்பட்டுள்ளது.
'சிக்கிம், மேகாலயா ஆகிய மாநிலங்களுக்கு 500 மீட்டர் விதி பொருந்தாது.
ஆனால், ஹிமாச்சலப் பிரதேசத்துக்கு 220 மீட்டர் தூரம் என்ற விதி பொருந்தும்' என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆந்திரபிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கு மட்டும் ஏற்கெனவே லைசென்ஸ் கொடுக்கப்பட்டுவிட்டதால், செப்டம்பர் 30-ம் தேதி வரை கடைகளை நடத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
'படிப்படியாக மது விலக்கு' என்ற அடிப்படையில் தற்போது 500 கடைகளை மூட முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.
நெடுஞ்சாலைப் பகுதியில் அமைந்துள்ள, விற்பனை குறைவாக உள்ள கடைகளாகப் பார்த்து மூடும் நடவடிக்கையை டாஸ்மாக் மேற்கொண்டு வருகிறது.
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவால், தமிழ்நாட்டில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் நாளை முதல் மூடப்படுகின்றன.
நன்றி : விகடன் செய்திகள் -31.03.2017
No comments:
Post a Comment