கடனில் இருக்கும் வீட்டை விற்க முடியுமா?
ஆசை ஆசையாக வங்கியில் கடன் வாங்கி ஒரு வீட்டை வாங்குகிறோம். வாங்கிய கடனுக்கு முறையாக இ.எம்.ஐ.யும் கட்டி வருகிறோம். திடீரென வேலை நிமித்தமாக வேறு ஊருக்கு நிரந்தரமாகச் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது என்று வைத்துக் கொள்வோமே.
அந்த வீட்டை விற்று விடலாம் என்று நினைக்கிறோம். 20 ஆண்டுகளுக்கான இ.எம்.ஐ.யில் இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே இ.எம்.ஐ. கட்டியுள்ள நிலையில், வீட்டை விற்க முடியுமா?
வீட்டுக் கடன் என்பதே, வாங்கிய வீட்டை வங்கியில் அடமானம் வைத்து வாங்குவதுதான் இல்லையா? வீட்டை அடமானமாக வைத்துக் கொண்டுதான் வங்கிகள் கடனை அளிக்கின்றன. ஆனாலும் வங்கியில் அடமானம் வைத்துள்ள வீட்டையோ அல்லது ஃபிளாட்டையோ விற்க முடியும். அதை வாங்குபவருக்கும் எந்த வித சட்டப் பிரச்சினையும் நிச்சயம் இல்லை என்றே சொல்லலாம். இதற்காகச் சில வழிமுறைகள் உள்ளன. அதைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
வங்கியில் அடமானம் வைக்கப்பட்டுள்ள வீட்டை வேறு ஒருவர் வாங்கத் தயார் என்றால், சொந்தமாகக் கைவசம் வைத்துள்ள பணத்தில் அந்த வீட்டை வாங்குகிறாரா? அல்லது அவரும் வங்கிக் கடன் மூலமாகவே வாங்குகிறாரா என்பதைப் பார்க்க வேண்டும்.
மொத்தமாகப் பணத்தைக் கையில் வைத்துக் கொண்டு வாங்குவதாக வைத்துக் கொண்டால் என்னென்ன செய்ய வேண்டும்?
1. வீட்டை விற்பவர் அடமானம் வைத்துள்ள வங்கியை அணுகி முதலில் விஷயத்தை முழுமையாகத் தெரிவிக்க வேண்டும். கடன் பாக்கி, அசல் தொகை மற்றும் வட்டித் தொகை எவ்வளவு என்பதற்கு ஒரு கடிதத்தை வங்கியிடமிருந்து கேட்டுப் பெற வேண்டும்.
2. வங்கிக்கு ஏற்கெனவே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களின் பட்டியலையும் எழுத்துப்பூர்வமாக வங்கியில் வாங்கிக்கொள்ள வேண்டும்.
3. சம்பந்தப்பட்ட வங்கிக்கு, கடன் பாக்கியைச் செலுத்திவிட்டால், அடமானம் வீட்டுத் தொடர்பான அனைத்து ஒரிஜினல் ஆவணங்களையும் சம்பந்தப்பட்டவருக்குக் கொடுப்பதற்கு வங்கிக்கு ஆட்சேபணை இல்லை என்று சம்பந்தப்பட்ட வங்கி எழுதிக் கொடுக்க வேண்டும்.
4. வீட்டின் உரிமையாளர் வங்கியிடமிருந்து பெற்ற கடிதங்களையும் தன் வசமுள்ள விற்பனைப் பத்திரத்தின் நகலையும், அந்த வீடு தொடர்புடைய அனைத்துப் பத்திரங்களின் நகல்களையும் வீடு வாங்கப் போகும் நபரிடம் வழங்க வேண்டும்.
6. வீட்டை வாங்குபவர் ஆவணங்களையும் வங்கியின் கடிதங்களையும் தனது வழக்கறிஞரிடம் காட்டிய பிறகு சட்ட ரீதியான கருத்தைப் பெறலாம். திருப்தி ஏற்படும்பட்சத்தில் வீட்டின் சொந்தக்காரருக்கு முன்பணம் கொடுக்கலாம். பிறகு வீட்டை விற்பவருக்கும் வாங்குபவருக்கும் இடையேயான ஒப்பந்தத்தை எழுதி இரு தரப்பினரும் கையெழுத்திட்ட பிறகு சார்பதிவாளர் அலுவலகத்தில் முறைப்படி பதிவு செய்யலாம்.
7. ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள தேதிக்குள் முழுத் தொகையையும் பெற்றுக் கொண்டு, வங்கிக்குச் சேர வேண்டிய தொகையைக் கொடுத்துவிட வேண்டும். கணக்கு முடிந்ததற்கு அடையாளமாக, வங்கியிடம் இருந்து ஒரு சான்றிதழைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
8. வங்கியிடம் இருந்து வீட்டுக்குத் தொடர்புடைய ஆவணங்களைப் பெற்று அவற்றை வீட்டை வாங்குபவருக்குக் கொடுத்து, அவரிடம் இருந்து ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். அதேசமயம், வீட்டை விற்பவர் அதை வாங்குபவருக்குக் கிரயப் பத்திரம் எழுதிக் கொடுத்துச் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
அடமான வீட்டுக்கடன்
ஒருவேளை கையில் சொந்தமாகப் பணம் இல்லை. வங்கியில் கடன் பெற்றுத்தான் அந்த அடமான வீட்டை வாங்க வேண்டும். அப்படியென்றால் என்ன செய்ய வேண்டும்? ஏற்கெனவே சொன்ன நடைமுறைகளில் முதல் நான்கு நடைமுறைகளை வீட்டை விற்பவர் செய்ய வேண்டும். அதன் பிறகு வீட்டை வாங்குபவர் செய்ய வேண்டிய சில விஷயங்கள் உள்ளன.
1. தன்னிடம் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் வங்கியின் கடிதங்களையும் வீட்டை வாங்குபவர் கடன் வழங்கும் வங்கிக்குக் கொடுக்க வேண்டும். அத்துடன் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய முகவரிச் சான்றிதழ், சம்பளம் அல்லது வருமானச் சான்றிதழ் மற்றும் வங்கியின் பரிசீலனைக் கட்டணம் ஆகியவற்றையும் வங்கியிடம் வழங்க வேண்டும். கடன் விண்ணப்பப் படிவத்தையும் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.
2. வங்கி உரிய பரிசீலனைக்குப் பிறகு கடன் வழங்கக் கொள்கை அடிப்படையிலான ஒப்புதல் வழங்கும். ஏற்ககெனவே ஒரு வங்கி தேவையான அனைத்துப் பரிசீலனைகளையும் செய்த பிறகுதான் கடன் வழங்கி உள்ளது என்பதால், தேவையற்ற தாமதம் இதில் இருக்காது.
3. வீட்டுக் கடன் தொகையைச் சம்பந்தப்பட்ட வங்கி, வீடு அடமானம் வைக்கப்படுள்ள வங்கிக்கு நேரிடையாகக் கொடுக்கும்.
4. கடனுக்கான முழுத் தொகையையும் பெற்றுக்கொண்டதால் அடமானம் வைத்திருந்த வங்கி, சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் வீடு வாங்குவதற்குக் கடன் வழங்கும் வங்கிக்குக் கொடுத்துவிடும்.
5. அதன் பிறகு வீட்டுக் கடன் கொடுக்கும் வங்கி அசல், வட்டித் தொகை போக மீதத் தொகையை வீட்டை விற்பவருக்குக் கொடுத்துவிடும். இறுதியாக வீட்டை வாங்குபவர் சார்பதிவாளர் அலுவலகத்தில் விற்பனைப் பத்திரத்தை வழக்கம்போல் பதிவு செய்துகொள்ளலாம்.
இந்த இடத்தில் ஒன்றைக் கவனிப்பது மிகவும் நல்லது. அடமான வீட்டை வாங்குபவர் அதே வங்கியில் வீட்டுக் கடன் பெற்றுக்கொள்வது நல்லது. இதனால் இரு தரப்புக்கும் நேரமும் சிரமமும் நிச்சயம் குறையும்.
தி இந்து நாளிதழ் செய்திகள் - 21.03.2015
No comments:
Post a Comment