கட்சி சின்னங்கள் சர்ச்சை - தேர்தல் ஆணையம் முடிவு
கட்சிச் சின்னம் சர்ச்சைகளில் தேர்தல் ஆணையம் முடிவெடுப்பது எப்படி?- சில விவரங்கள்
பொதுவாக ஒரே கட்சியாக இருந்து பிறகு உடைந்து இரு அணிகள் பிரிந்து அந்தக் கட்சியின் அசல் தேர்தல் சின்னத்துக்கு இருதரப்பினரும் உரிமை கோரும்போது தேர்தல் ஆணையம்தான் எந்த அணிக்கு கட்சியின் அசல் சின்னம் என்பதை முடிவெடுக்கும்.
அது அந்த முடிவை எப்படி எடுக்கிறது என்பது குறித்த சில விவரங்கள் இதோ:
எந்த அதிகாரத்தின் கீழ் தேர்தல் ஆணையம் கட்சிச் சின்ன சர்ச்சைகளில் முடிவெடுக்கிறது?
1968-ம் ஆண்டு தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீடு மற்றும் வழங்கல் உத்தரவு என்பதன்படி தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளை அங்கீகரித்து சின்னங்களை ஒதுக்க வேண்டும். உத்தரவின் 15-ம் பத்தியின் கீழ் தகராறுகள் ஏற்படும் போது தேர்தல் ஆணையமே யாருக்கு கட்சியின் உண்மையான சின்னம் செல்ல வேண்டும் என்று முடிவெடுக்கும்.
பத்தி 15-ன் சட்ட தகுதி என்ன?
கட்சியினுள்ளோ, இரு கட்சிகளோ இணைவது மற்றும் பிரிவதன் அடிப்படையில் கட்சிச் சின்னம் பற்றிய முடிவை எடுக்க அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு மட்டுமே உள்ளது. 1971-ம் ஆண்டு சாதிக் அலி மற்றும் இன்னொருவருக்கு எதிரான இந்தியத் தேர்தல் ஆணைய வழக்கில் தேர்தல் ஆணையத்தின் முடிவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
ஒரு குழுவை அதிகாரபூர்வ கட்சியாக அங்கீகரிக்கும் முன் தேர்தல் ஆணையம் யாவற்றை பரிசீலிக்கும்?
அசல் சின்னத்துக்கு உரிமை கோரும் குழுவுக்கு கட்சியில் ஆதரவு எப்படி உள்ளது என்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்யும். அதாவது கட்சி எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் ஆதரவு மற்றும் கட்சி உறுப்பினர்கள், நிர்வாகக்குழு ஆதரவு என்று இருதரப்பு ஆதரவையும் தேர்தல் ஆணையம் கணக்கிலெடுத்துக் கொள்ளும்.
இந்த இருதரப்புகளிடையேயும் தங்களுக்குத்தான் அதிக ஆதரவு என்று கோரும் பிரிவை எப்படி தேர்தல் ஆணையம் நிறுவும்?
அதாவது குறிப்பிட்ட கட்சி இருபிரிவுகளாக உடைவதற்கு முன்பாக சேர்ந்திருந்த போது கட்சியின் விதிமுறைகளையும், நிர்வாகிகள் பட்டியலையும் தேர்தல் ஆணையம் ஆய்வு செய்யும். கட்சியின் உயர்மட்ட குழுக்களை தேர்தல் ஆணையம் அடையாளம் கண்டு இதில் எத்தனை நிர்வாகிகள், உறுப்பினர்கள் எதிர்கோஷ்டியினரை ஆதரிக்கின்றனர் என்பதை ஆய்வு செய்யும். ஆட்சியமைப்புப் பிரிவில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை அவர்களின் வாக்குமூலப் பதிவுகளுடன் அளிப்பது பரிசீலனைக்கு ஏற்று இவர்கள் எந்தப் பிரிவை ஆதரிக்கிறார்கள் என்பது முடிவு செய்யப்படும்.
உறுதியான கண்டுபிடிப்புக்குப் பிறகு தேர்தல் ஆணையம் என்ன உத்தரவு பிறப்பிக்கும்?
அதாவது ஒரு குறிப்பிட்டப்பிரிவுக்கு கட்சியின் அமைப்பாக்கப் பிரிவு மற்றும் எம்.எல்.ஏ.க்கள், எம்.பிகள் ஆகியோர் ஆதரவு பெரும்பான்மையாக இருக்கிறது என்று அந்தப் பிரிவுக்கே கட்சியின் பெயர் மற்றும் சின்னம் சொந்தம் என்று தேர்தல் ஆணையம் அறிவிக்கும். மற்றொரு பிரிவு தனிக் கட்சியாக பதிவு செய்ய அனுமதி வழங்கும்.
இரு தரப்பினருக்கும் உள்ள ஆதரவில் இழுபறி நிலை ஏற்பட்டால்...
இப்படிப்பட்ட நிலையில் கட்சியின் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கும். இருபிரிவினரும் புதிய பெயர்களில் அதாவது மூலக் கட்சியின் பெயரில் முன் ஒட்டு அல்லது பின் ஒட்டு சேர்த்து புதிதாக பதிவு செய்ய அனுமதி வழங்கும்.
தேர்தல் காலங்களில் கட்சிச் சின்னம் பற்றிய தகராறுகள் உடனடியாக தீர்க்கப்படுமா?
தேர்தல் ஆணையம் பல்வேறு ஆதாரங்களையும் பரிசீலிக்க காலம் எடுத்து கொள்ளும். உடனடியாக தேர்தல் என்றால் கட்சியின் சின்னத்தை முடக்கி இரு பிரிவினரையும் வெவ்வேறு பெயர்களில், தற்காலிக சின்னங்களில் போட்டியிட அனுமதிக்கும்.
சரி! இருதரப்பினரும் தங்களுக்கிடையேயுள்ள வேறுபாடுகளைக் களைந்து ஒன்று சேர்ந்து விட்டால்..
மறுபடியும் கட்சி இணைந்து ஒன்றாகிவிட்டால், மறுபடியும் தேர்தல் ஆணையத்தை அணுகி ஒருங்கிணைந்த கட்சி என்று அங்கீகரிக்கக் கோர வேண்டும். பிரிவினர்கள் ஒரு கட்சியாக இணைவதை அங்கீகரிக்கும் அதிகாரமும் தேர்தல் ஆணையத்திற்குத்தான் உள்ளது. அது கட்சியின் மூலப்பெயர் மற்றும் சின்னத்தை தொடர அனுமதிக்கலாம்.
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 15.03.2017
No comments:
Post a Comment