ஒருவர் தனக்கு சொந்தமான ஒரு சொத்தினை, மற்றவருக்கு விற்கும் போது அதற்குண்டான தொகையை பெற்றுக் கொண்டு, இன்று முதல் இச்சொத்தினை நீங்கள் தானாதி விக்கிரம பாத்தியமாய் ஆண்டு அனுபவித்து கொள்ள வேண்டியது, இனி இச்சொத்தில் எனக்கோ, என் வாரிசுகளுக்கோ எவ்வித உரிமையும் இல்லை என்று எழுதி கொடுக்கிறார்.
That means from that day the purchaser can enjoy the property absolutely. Neither the vendor nor his heirs have any rights over the property.
செட்டில்மெண்ட்டும் கிரயம் போல் தான். ஆனால் செட்டில்மெண்ட்டில் பிரதிபலனாக பணமோ, பொருளோ எதுவும் பெறக்கூடாது. அப்படி பெற்றால் அது செட்டில்மெண்ட் ஆகாது. கிரையம் ஆகிவிடும். செட்டில்மெண்ட்டில் எழுதி கொடுப்பவர் சொத்து கொடுக்கப்படுபவருக்கு இஷ்டம் போல் அனுபவிக்கும் முழு உரிமையும் கொடுத்து, ஆவணத்தை பதிவும் செய்து கொடுத்து, சொத்தின் அனுபோகத்தையும் அவரிடம் கொடுத்த பிறகு, எழுதி கொடுத்தவருக்கு அதில் என்ன உரிமை இருக்கிறது?.
ஏற்கனவே அவருடைய சொத்தாக இருந்தபோதிலும், அவர் அதனை மற்றவருக்கு கொடுத்த பிறகு, அதன் மீது அவருக்கு எந்த உரிமையும் இல்லாத நிலையில் அந்த செட்டில்மெண்ட் ஆவணத்தை ரத்து செய்யவும், அவருக்கு அதிகாரம் இல்லை.
ரத்து செய்ய முடியாது!
ஒருசில சந்தர்ப்பங்களில் எழுதிக் கொடுத்த செட்டில்மெண்ட்டை அதனை எழுதிக் கொடுத்தவர் ரத்து செய்யலாம். செட்டில்மெண்ட் எழுதும்போதே, இதனை ரத்து செய்ய எனக்கு அதிகாரம் இல்லை என்று எழுதப்பட்டிருந்தால், எழுதி கொடுத்தவர் அதனை ரத்து செய்ய முடியாது. ஏனென்றால் அந்த சொத்தினை அவர் எழுதிக் கொடுத்தவருக்கு இஷ்டம் போல் அனுபவிக்கும் உரிமையுடன் எழுதிக் கொடுத்து, அதனை ரத்து செய்ய தனக்கு அதிகாரம் இல்லை என்றும் குறிப்பிட்டிருப்பதால், அதனை பெற்றவர் அச்சொத்தினை வேறு யாருக்காவது கிரையமோ அல்லது வேறு வகையிலோ உரிமை மாற்றம் செய்திருக்கக்கூடும்.
சில நேரங்களில் ரத்து செய்ய முடியும்!
அதற்கு மாறாக செட்டில்மெண்ட் எழுதும்போதே, அதில் ஏதேனும் நிபந்தனைகள் விதித்தோ அல்லது இதனை ரத்து செய்ய எனக்கு அதிகாரம் உண்டு என்றோ எழுதியிருந்தால், எழுதப்பட்டவருக்கு Absolute Right எனப்படும் இஷ்டம் போல் அனுபவிக்கும் முழு உரிமை கொடுக்கப்படவில்லை என்று பொருள். எனவே அதனை அவர் விற்கவோ அல்லது வேறு பராதீனம் செய்யவோ முடியாது.
அதில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளை எழுதி வாங்கியவர் கடைபிடிக்காவிட்டாலோ அல்லது எழுதிக் கொடுத்தவர் மனம் மாறி அதனை ரத்து செய்ய நினைத்தாலோ ரத்து செய்யலாம்.
தான செட்டில்மெண்ட் எழுதி கொடுத்ததன் மூலம் யாருக்கு செட்டில்மெண்ட் எழுதிக் கொடுக்கப்பட்டதோ அவர் அச்சொத்தின் உரிமையாளர் ஆகிவிடுகிறார். எனவே அதன்பிறகு அந்த செட்டில்மெண்ட் ஆவணத்தை எழுதி கொடுத்தவருக்கு அந்த சொத்தின் மீதுள்ள உரிமை போய்விடுகிறது. எனவே அதன்பிறகு செட்டில்மெண்ட் பெற்றவர் ஒப்புக் கொள்ளாமல் எழுதிக் கொடுத்தவர் மட்டும் அதனை ரத்து செய்ய இயலாது.
செட்டில்மெண்ட் மூலம் ஒருவர் தன்னுடைய சொத்தின் முழு உரிமையையும் வேரொருவருக்கு எழுதிக் கொடுத்த பிறகு அதனை அவர் மூன்றாம் நபருக்கு விற்றிருந்தால், அதன்பிறகு செட்டில்மெண்ட் எழுதிக் கொடுத்தவர் ரத்து செய்தால் கிரையம் பெற்றுவரும் பாதிக்கப்படுவார்.
ரத்து செய்யும் வழிகள்
செட்டில்மெண்ட் மூலம் சொத்தை பெற்றவர், அதனை வேறு யாருக்கும் கிரையம் அல்லது செட்டில்மெண்ட் மூலம் மாற்றாமல் இருந்து அவரும் அதனை ரத்து செய்ய ஒப்புக் கொண்டால், செட்டில்மெண்ட் எழுதிக் கொடுத்தவர் நினைத்தால் எளிதில் ரத்து செய்யலாம்.
எழுதி வாங்கி கொண்டவர் ஒப்புக்கொள்ளாவிட்டாலோ அல்லது அதனை வேறு யாருக்காவது பராதீனம் செய்திருந்தாலோ எளிதாக ரத்து செய்ய இயலாது.
ரத்து செய்யவே முடியாது என்று சொல்ல முடியாது. செட்டில்மெண்ட் எழுதியதைப் போல் எழுதிக் கொடுத்தவர் நினைத்தவுடன் எளிதாக ரத்து செய்ய இயலாது.
ஆனால் அதனை ரத்து செய்ய நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது மட்டுமே வழி.
அதேபோல் ரத்து செய்ய அதிகாரம் இல்லை என்று எழுதி பதிவு செய்யப்பட்ட செட்டில்மெண்ட் கூட, எழுதிக் கொடுத்தவரை ஏமாற்றியோ, அச்சுறுத்தியோ, கட்டாயப்படுத்தியோ எழுதி வாங்கப்பட்டிருந்தால் நீதிமன்றத்தின் மூலம் அதனை ரத்து செய்யலாம்.
நன்றி : நண்பரும் வழக்கறிஞருமான Dhanesh Balamurugan
No comments:
Post a Comment