disalbe Right click

Sunday, March 12, 2017

கைமாற்றுக் கடன் (BRIDGE LOAN) வேண்டுமா?


கைமாற்றுக் கடன் (BRIDGE LOAN) வேண்டுமா?

புதியனவற்றிற்கும் அதிக வசதிக்கும் ஏங்குவது மனித இயல்பு. புதிது புதிதாய் அதிக சவுகரியங்களுடன் இன்றைய காலகட்டத்தில் வீடுகள் விற்பனைக்கு வந்துகொண்டே இருக்கின்னறன. 
நீங்கள் வசிக்கும் வீட்டை அல்லது உங்களது அடுக்குமனையை விற்றுப் புதிய வீடு வாங்க விரும்புகிறீர்கள் என வைத்துக் கொள்வோம். நீங்கள் வீட்டை விற்பதும், புதியதாக வீட்டை வாங்குவதும் ஒரே நேரத்தில் நிகழாது என்று உறுதிபடத் தெரிந்தால், உங்களுக்கு ஆபத் பாந்தவனானாக வந்து உதவுவது கைமாற்றுக் கடன் (Bridge Loan).

பிரிட்ஜ் லோன்

பிரிட்ஜ் லோன் என்பது புது வீடு வாங்கும்போது ஏற்படும் நிதிப் பற்றாக்குறையைத் தவிர்க்க உதவும். அதாவது புதிய வீடு ஒன்று கிடைத்து, வாங்க முடிவெடுத்து விட்டீர்கள். ஆனால் பழைய வீடு விற்பனையாகாத நிலையில் புதிய வீட்டை வாங்க உங்களுக்கு உதவக் கூடியதுதான் இந்த வகைக் கடன். 

புரியும்படிச் சொன்னால் கைமாற்றுக் கடன் என்று சொல்லலாம். இது குறுகிய காலக் கடன். இன்றைய தேதியில் பலரும் தங்களது பழைய வீடு அல்லது சொத்தை விற்று தங்களது கனவு இல்லத்தை தேர்வு செய்ய விரும்புகிறார்கள். அவர்களுக்கு நிதியளிக்கும் வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் கடனைத் திருப்பி அளிக்க ஒரு வருடம் கால அவகாசம் அளிக்கின்றன.

பெரும்பான்மையான வங்கிகளும் நிதி நிறுவனங்களும் பிரிட்ஜ் லோனை விரைவில் ஒப்புதல் வழங்கி அளித்துவிடுகின்றன. 

அவற்றின் வட்டி விகிதம் அதிகம் என்றாலும் அடையும் பயன்களின் சாதக அம்சங்களைக் கணக்கில் கொள்ள வேண்டும். 

பிரிட்ஜ் லோன்களின் பலாபலன்களைக் கருத்தில் கொண்டு அதற்குச் சந்தை மதிப்பு அதிகரித்து வருகிறது. என்றாலும் பல்வேறு வங்கிகளில் அளிக்கப்படும் பலன்களை ஒப்பிட்டுப் பார்த்து விதிமுறைகளை ஒன்றிற்கு இரண்டு முறை வாசித்துத் தெளிவாகப் புரிந்துகொள்ளுதல் நலம்.

பழைய வீட்டை விற்றுக் கடனை அடைப்பதற்கான அவகாசம் அதிகபட்சம் இரண்டு வருடங்கள். 

கொடுக்கப்பட்ட கால வரம்பிற்குள் உங்களால் பழைய வீட்டையோ அல்லது சொத்தையோ விற்க முடியாவிடில், வங்கிகள் அதனை அடமானக் கடனாக மாற்றிவிடுகின்றன.

 வங்கி அந்தச் சொத்தை அடமானமாக வைத்துக்கொண்டு பிரிட்ஜ் லோனை அதிக வட்டியுடன் கூடிய சாதாரண வீட்டுக் கடனாக மாற்றிவிடும்.

விற்கப்படும் சொத்துக்கு நிகரான சந்தை மதிப்பிலுள்ள பணம் அல்லது புதிய வீட்டின் விலையின் 80 சதவிகிதம் கடனாகப் பெற இயலும். 

உங்கள் சொத்துக்கள், கடன் வரலாறு மற்றும் கடன் பொறுப்புகள் யாவற்றையும் ஆராய்ந்த பிறகே பிரிட்ஜ் லோன் வழங்கப்படும். வீட்டுக் கடன் வழங்கப்படும் போது சரிபார்க் கப்படும் வருமானச் சான்று, வங்கிக் கணக்கு ஸ்டேட்மென்ட், கடன் வரலாறு போன்றவை அனைத்தும் இதிலும் உறுதி செய்யப்படும்.

 இரு சொத்துக்களின் லீகல் டாக்குமெண்ட்களும் சரிபார்க்கப்பட்டு ஏதேனும் மாறுதல் இருக்கின்றதா என வங்கிகள் ஆராயும். 

உங்களுடைய தற்போதைய சொத்தின் லீகல் டாக்குமெண்ட் கடன் தீரும் வரை வங்கியில் அடமானமாக வைக்கப்படும். 

உங்கள் வீட்டை வாங்கும் நபர் வங்கிக்கே நேரடியாக காசோலை வரைந்தும் கடனை திருப்பி செலுத்தலாம்.

கடனைத் திருப்பிச் செலுத்துவது என்பது வீட்டை விற்கும் வரை மாதாந்திர தவணைகளாக அல்லது கடன் தொகைக்கான வட்டி அளவாக இருக்கும். 

நீங்கள் சொத்தை விற்ற பின் முழுத் தொகையையும் அந்த இரண்டு வருடங்களுக்கு இழுக்காமல் உடனேயும் கட்டலாம். இது போன்ற குறுகிய காலக் கடன்கள் சாதாரண வீட்டுக் கடனை விட அதிக வட்டி கோரலாம்.

 அதே போல் செலவுத் தொகை மற்றும் கட்டணங்களும் அதிகம் இருக்கலாம். பலன்களைக் கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும்.

முருகேஸ்வரி ரவி

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 11.03.2017 

No comments:

Post a Comment