disalbe Right click

Wednesday, April 19, 2017

தானாகவே வழக்கு தாக்கல் செய்வோர் கவனத்திற்கு - 1

தானாகவே வழக்கு தாக்கல் செய்வோர் கவனத்திற்கு - 1

நாமாகவே வழக்கு தாக்கல் செய்ய வேண்டும், நீதிமன்றத்தில் வழக்கறிஞரின் உதவி இல்லாமல் நாமே வாதாட வேண்டும்! என்ற உங்களது தைரியத்திற்கு முதலில் எனது பாராட்டுக்கள். நம்மைவிட நமது வழக்கைப் பற்றி யாருக்கு நன்றாகத் தெரியும்? இப்படிச் செய்வதனால், எந்த ஒரு வழக்கும் சீக்கிரம் ஒரு முடிவுக்கு வரும். வாய்தாக்கள் வாங்க வேண்டியதில்லை. வழக்குகளும் நீதிமன்றத்தில் தேங்க வேண்டியதில்லை. நமது நோக்கத்தை  வேறு எவரும் சிதைக்க முடியாது.  

இது போன்று நான் முயற்சி செய்யும் போது சில தவறுகள் செய்திருந்தேன். நீதிபதியால் தவறுகள் குறிப்பிடப்பட்டு எனது மனு என்னிடமே திருப்பி அளிக்கப்பட்டது. தவறுகளை திருத்தி மீண்டும், மீண்டும் நீதிமன்றத்தில் நாம் சமர்ப்பிக்கலாம் என்று, வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தாலும், நமது நேரம் அதனால் வீணாவதை யாராலும் தடுக்கமுடியாது. மேலும், நமது வழக்கின் போக்கு, திசை மாறவும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, தவறு எதுவும் இல்லாமல் தாக்கல் செய்ய வேண்டும். 

நேரடியாக தன்னிடம் வருபவர்களை (சில வழக்குகள் தவிர) நீதிமன்றம் விரும்புவதில்லை. துறை ரீதியாக கீழிருந்து மேல் வரைக்கும் புகார் அளிக்கப்பட்டுள்ளதா? என்பதை முதலில் அது கவனத்தில் எடுத்துக் கொள்கிறது.  அவ்வாறு புகார் அளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் நீங்கள் தாராளமாக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யலாம்.  

காவல்துறை சம்பந்தப்பட்ட புகாராக இருந்தால், முதலில் நீங்கள் வசிக்கும் பகுதிக்குரிய காவல்நிலையத்தில் கண்டிப்பாக புகார் அளிக்க வேண்டும். நேரடியாக எஸ்.பி. (மாவட்ட காவல் கண்காணிப்பாளர்) அலுவலகத்திற்கு சென்று புகார் அளிக்காதீர்கள். புகார் அளிப்பதோடு மட்டுமல்லாமல் அதற்குரிய “புகார் மனு ஏற்புச் சான்றிதழ்” கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள். ஒரு வேளை காவல்நிலையத்தில் அதனை தர மறுத்தால், ஒப்புதல் அட்டை இணைத்த பதிவுத்தபாலில் உங்கள் புகாரை அவர்களுக்கு அனுப்பி அதற்குரிய  ஆதாரத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். 

நீதிமன்றத்தில் இது மிகவும் முக்கியமானதாகும். இது இல்லை என்றால் தங்கள் மனு திருப்பி அளிக்கப்படும்.  

உள்ளூர் காவல்நிலையத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அதன்பிறகு நீங்கள் எஸ்.பி. (மாவட்ட காவல் கண்காணிப்பாளர்) அலுவலகத்திற்கு சென்று புகார் அளிக்கலாம். அல்லது ஒப்புதல் அட்டை இணைத்த பதிவுத்தபாலில் உங்கள் புகாரை அவர்களுக்கு அனுப்பி வைக்கலாம்.  

அவரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றாலோ அல்லது எடுத்த நடவடிக்கை உரியதாக இல்லை என்றாலோ நீங்கள்  காவல் துறை துணைத்தலைவர் (DIG) அலுவலகத்திற்கு சென்று புகார் அளிக்கலாம். அல்லது ஒப்புதல் அட்டை இணைத்த பதிவுத்தபாலில் உங்கள் புகாரை அவர்களுக்கு அனுப்பி வைக்கலாம். 

மேற்கண்டவாறு செய்தும் நடவடிக்கை இல்லை என்றாலோ அல்லது எடுத்த நடவடிக்கை உரியதாக இல்லை என்றாலோ நீங்கள் அதற்குரிய ஆதாரங்களுடன் நீதிமன்றத்தை அணுகலாம். ஆதாரங்கள் மிகமிக அவசியம்.

நாம் அதிகமாக அணுகுகின்ற துறை என்பதால் மேலே காவல்துறையைப் பற்றி குறிப்பிட்டுள்ளேன்.  மற்ற துறைகளுக்கும் இந்த நடைமுறையையே பின்பற்றி அந்தந்த துறை அதிகாரி மற்றும் மேலதிகாரிகளை அணுகுங்கள்.  

தொடரும்.
அன்புடன் செல்வம் பழனிச்சாமி

No comments:

Post a Comment