disalbe Right click

Saturday, April 1, 2017

மருத்துவ காப்பீடு - 12 யோசணைகள்


மருத்துவ காப்பீடு - 12 யோசணைகள்

மருத்துவக் காப்பீடு... மணியான தகவல்கள்!இன்றைய வாழ்க்கையின் இன்றியமையாத தேவையாகிவிட்ட மருத்துவக் காப்பீடு எடுப்பது தொடர்பான ஆலோசனைகளை, இந்த இதழுக்கான `ஒரு டஜன் யோசனை’களாக வழங்குகிறார், சென்னையில் உள்ள நிதி ஆலோசக நிறுவனமான `ஃபண்ட் இந்தியா லிமிடெட்’டின் தலைமை நிதி ஆலோசகர் ஸ்ரீதரன்.

பெண்களுக்கு: 
பொதுவாக பெண்கள் தங்களுடைய 18-ம் வயதில் ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்வது நல்லது. அந்த பாலிசி அவர்களின் மகப்பேறு காலத்தில் உதவும். ஆனால், மகப்பேறு காலத்துக்குக் கவரேஜ் இருப்பதை உறுதிசெய்து கொள்ளவும். பெண்கள் ஏற்கெனவே ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்திருந்தாலும், 35-ம் வயதில் ‘சிறப்பு கிரிட்டிக்கல் இல்னஸ் கவரேஜ்’ பாலிசி எடுத்துக்கொள்வது நல்லது. இதில், மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் போன்றவை இருப்பதாக உறுதி செய்யப்பட்டாலே, குறிப்பிட்ட தொகை வழங்கப்படும்.

குழந்தைகளுக்கு
குழந்தையின் தாய் மகப்பேறுகால கவரேஜ் எடுத்திருந்தால், குழந்தைக்கும் கவரேஜ் கிடைக்கும். அப்படி இல்லாத சூழலில் குழந்தை பிறந்து 90-ம் நாளில் பெற்றோர், குழந்தைக்குச் சேர்த்து ஒரு ‘ஃப்ளோட்டர் பாலிசி’ எடுத்துக்கொள்ளலாம். இது குழந்தையின் 18 வயது வரை உதவும்.

காத்திருப்புக் காலம்:ஒரு மருத்துவக் காப்பீடு எடுத்தவுடன் முதல் க்ளெய்ம் செய்ய 30 முதல் 90 நாட்கள்வரை காத்திருக்க வேண்டும். ஒருசில நோய்களுக்கு (உதாரணம்: சிறுநீரகம், குடல் இறக்கம்) மட்டும் காத்திருப்புக் காலம் மாறுபடும். பொதுவாக, பாலிசியின் காத்திருப்பு நாட்கள் குறைவாக உள்ள பாலிசியை எடுப்பது சிறந்தது.

தனிநபர் பாலிஸி: குறைவான தொகைக்கு பாலிசி எடுத்தால் இன்றைய காலகட்டத்தில் சர்வசாதாரணமாக வரும் இதயநோய், புற்றுநோய் போன்ற நோய்களுக்கு சிகிச்சை எடுத்துக்கொள்ளப் போதுமானதாக இருக்காது. எனவே, அலுவலகத்தில் வழங்கப்படும் குரூப் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை கணக்கில்கொள்ளாமல், ஒரு தனிநபர் ஹெல்த் பாலிசியை, வயதுக்குத் தகுந்த கவரேஜுடன் எடுக்கலாம். 

வயது... கவரேஜ் தொகை:30 வயதுக்குக் கீழ், திருமணம் ஆகாதவர் என்றால்... ரூபாய் 3 லட்சம் கவரேஜ் தொகை போதுமானது. 

30 ப்ளஸ் வயது, மனைவி, குழந்தைகள் இருக்கிறார்கள் என்றால்... ஒட்டுமொத்தக் குடும்பத்துக்கும் சேர்த்து ஹெல்த் பாலிசியின் கவரேஜ் தொகை குறைந்தபட்சம் 5 லட்சம் ரூபாய்க்கு இருக்க வேண்டும். 

40 ப்ளஸ் வயதுள்ளவர்கள் எவ்வளவு தொகைக்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுக்கிறார்கள் என்பதைவிட, என்ன மாதிரியான பாலிசிகளை எடுக்கிறார்கள் என்பது முக்கியம். இந்த வயதில் சாதாரண ஹெல்த் பாலிசிகளை எடுப்பதைவிட, குடும்பத்தில் தாய், தந்தைக்கு என்ன மாதிரியான நோய்கள் (கேன்சர், வாதம், சர்க்கரை) வந்திருக்கிறது, மரபுரீதியாக அது தனக்கும் வர வாய்ப்புகள் உள்ளதா என்பதை குடும்ப மருத்துவரிடம் கலந்தாலோசித்து, அதற்கான சிறப்பு பாலிசிகளை எடுக்க வேண்டும். 

வயதை மறைக்காதீர்கள்:பெரும்பாலும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மருத்துவப் பாலிசி எடுக்கும்போது, அந்நிறுவனத்தால் பாலிசிதாரருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படும். நோய் இருப்பது உறுதிசெய்யப்படும் பட்சத்தில், பாலிசி ரத்துசெய்யப்பட வாய்ப்புள்ளது. எனவே, நிறைய பாலிசிதாரர்கள் மருத்துவப் பரிசோதனையைத் தவிர்க்க வயதைக் குறைத்துக் குறிப்பிடுவார்கள். இதனால் ப்ரீமியம் கட்டும்போது பிரச்னை வராது. எனினும், க்ளெய்ம் செய்யும்போது நிச்சயமாகப் பிரச்னை வரும். மேலும், வயதை தவறாகக் குறிப்பிட்ட காரணத்துக்காகவே க்ளெய்மை நிராகரிக்க வாய்ப்பு உள்ளது. 

மூத்த குடிமக்கள் பாலிசி: 60 வயதைத் தாண்டிய முதியவர்களுக்கு மூத்த குடிமக்கள் (சீனியர் சிட்டிசன்) பாலிசிகள் எடுத்துக் கொள்வது நல்லது. பாலிசி எடுப்பவர் நிச்சயமாக 60 வயதுடையவராக இருக்க வேண்டும். மேலும் அவரின் வாழ்நாள் வயதுவரை புதுப்பித்துக்கொள்ளலாம். குடும்பத்தில் உள்ள மற்ற உறுப்பினர்களின் பெய ருடன் முதியவர்களைச் சேர்த்து ‘ஃப்ளோட்டர் பாலிஸி’ எடுப்பதைத் தவிர்த்து, பிரீமியம் கொஞ்சம் அதிகமாக இருந்தாலும், அவர்களின் பெயரில் பிரத்யேகமாக இந்த சீனியர் சிட்டிசன் பாலிசி எடுப்பதே சிறந்த பயனைத் தரும். 

நோயை மறைக்காதீர்கள்: ஏற்கெனவே நோய் இருந்தால் பாலிசி எடுப்பது பயனற்றது என பலரும் நினைக்கிறார்கள். மேலும் ஏற்கெனவே உள்ள நோய்களுக்கு கவரேஜ் கிடைக்காது என நினைத்து பாலிசி எடுக்கும்போது, அந்நோய் பற்றிய தகவல்களை மறைத்துவிடுகிறார்கள். இதனாலும் க்ளெய்மில் பிரச்னை வரலாம். ஏற்கெனவே உள்ள நோய்களுக்கும் தாராளமாக பாலிசி எடுக்கலாம். பெரும்பாலும் காத்திருப்புக் காலமும் பிரீமியமும்தான் கொஞ்சம் அதிகமாக இருக்கும். எனவே, நோயைக் குறிப்பிட்டே பாலிசி எடுத்துப் பயன்பெறலாம்.

சிகிச்சை பெறும் மருத்துவமனை:சிகிச்சை எடுக்க நேரிடும்போது, பாலிசி எடுத்துள்ள நிறுவனம் டை-அப் வைத்துள்ள ஏதேனும் ஒரு மருத்துவமனையில்தான் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். அவசரச்சூழலில் வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், அந்தத் தகவலை 24 மணி நேரத்துக்குள் அந்நிறுவனத்தின் `டிபிஏ’-வுக்கு (Third Party Administer) தெரிவிப்பது அவசியம். அதேபோல சிகிச்சை எடுத்துக்கொண்ட 15 நாட்களுக்குள் க்ளெய்ம் கேட்டு விண்ணப்பிக்க வேண்டும்.

க்ளெய்ம் முறைகள்:மருத்துவக் காப்பீட்டில் இரண்டு வகையில் க்ளெய்ம் பெற முடியும். ஒன்று, கேஷ்லெஸ். இதில் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுக்கும்போது பாலிஸி தாரர் பணம் செலுத்த வேண்டிய தேவை இருக்காது. நேரடியாக நிறுவனமே செலுத்திவிடும். இன்னொன்று, மெடிக்ளெய்ம். இதில் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்த, அந்தக் கட்டண ரசீதுகளை எல்லாம் சமர்ப்பித்து பிறகு பாலிசியில் க்ளெய்ம் செய்வது. இதில்தான் க்ளெய்ம் சார்ந்த பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதைத் தவிர்க்க அல்லது குறைக்க பாலிசியில் க்ளெய்ம் கேட்டு விண்ணப்பம் செய்யும்போது சில விஷயங்களைக் கவனிப்பது அவசியம்.

க்ளெய்முக்குத் தேவையான ஆவணங்கள்: மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்ததற்கான ஒரிஜினல் பில், மருத்துவமனையில் இருந்து வெளியேறும்போது மருத்துவமனையால் வழங்கப் படும் அறிக்கை, சிகிச்சைக்கு தொடர்புடைய ஆவணங்கள், மருந்து வாங்கியதற்கான ஆதாரம், அதற்குரிய மருத்துவர் அறிக்கை, மருத்துவச் சான்றிதழ் ஆகியவற்றை இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் படிவத்துடன் இணைத்து இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் க்ளெய்ம் கேட்டு விண்ணப்பிக்கலாம். 

முகவரி மாற்றம்:இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்த பிறகு முகவரியில் ஏதாவது மாற்றம் இருந்தால் அல்லது கொடுக்கப்பட்ட முகவரியில் தவறு ஏதேனும் இருந்தால், அதை உடனடியாக பாலிசி நிறுவனத்திடம் தெரியப்படுத்த வேண்டும். முகவரி மாற்றத்தை அப்டேட் செய்யவில்லை என்றால் க்ளெய்ம் கிடைக்க காலதாமதம் ஆகலாம்.

சு.சூர்யா கோமதி
அவள்விகடன் - 26.01.2016





No comments:

Post a Comment