disalbe Right click

Wednesday, April 19, 2017

தானாகவே வழக்கு தாக்கல் செய்வோர் கவனத்திற்கு - 2

தானாகவே வழக்கு தாக்கல் செய்வோர் கவனத்திற்கு - 2


நீதிமன்றத்தில் தனது வழக்கில் தாமே வாதாட வேண்டும் என்று எண்ணுவோரின் கவனத்திற்கு....

துணிவே துணை
உங்களை வரவேற்க யாரும் அங்கு கண்டிப்பாக இருக்க மாட்டார்கள். குற்றம் கண்டு பிடிக்கவும், மட்டம் தட்டவும், வந்த வழியே திருப்பி அனுப்பவும், மாற்று வழி கூறவும் பலர் இருப்பார்கள்.

இவர்களை எல்லாம் தாண்டிதான் நீங்கள் வழக்கை தாக்கல் செய்து வாதாடி வெற்றி பெற வேண்டும். உங்களுக்கு மன தைரியம் என்பது அதிகமாக இருக்க வேண்டும்.

முதன் முதலாகப் போகப் போகிறீர்களா?
நீதிமன்றத்திற்கு வழக்கு தாக்கல் செய்யும் பொழுதுதான் முதன் முதலாக போகப் போகிறீர்களா? அது மிகவும் தவறான செயலாகும். இரண்டு கண்ணையும் கட்டி காட்டில் விட்டது போல இருக்கும். யாரை பார்க்க வேண்டும்? என்ன செய்ய வேண்டும்? என்று மனக்குழப்பம் உண்டாகும்.

அதனால், வழக்கு தாக்கல் செய்வதற்கு முன், நீங்கள் வழக்கு தாக்கல் செய்யப்போகின்ற நீதிமன்றத்திற்கு சில நாட்கள் சென்று அங்கு நடக்கும் செயல்களை நேரில் உற்று கவனியுங்கள். உங்களது மனதில் இருக்கின்ற பெரும்பாலான சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும். மனதில் இருக்கின்ற தயக்கத்தையும் அகற்றும். உங்களுக்கு மிகுந்த தைரியத்தை அது கொடுக்கும்.

இந்திய தண்டணைச் சட்டம்
இந்தப் புத்தகம் தமிழில் கிடைக்கிறது. இதனை சுருக்கமாக ஆங்கிலத்தில் I.P.C. என்பார்கள். அல்லது இ.பி.கோ (இந்தியன் பீனல் கோடு) என்பார்கள். இதனை வாங்கி படியுங்கள். எந்த குற்றத்திற்கு எந்த செக்‌ஷன் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இது மிகவும் முக்கியம். யார் எந்தக் குற்றம் செய்தாலும் இந்தச் சட்டத்தின் அடிப்படையில்தான் தண்டணை வழங்கப்படும்.

குற்ற விசாரணை முறைச் சட்டம்
இதனை சுருக்கமாக ஆங்கிலத்தில் Cr.P.C. என்பார்கள். இந்த புத்தகமும் தமிழில் கிடைக்கின்றது. இந்த சட்டத்தின் அடிப்படையில்தான் நீதிமன்றமும், காவல்துறையும் இயங்குகின்றது. இதனையும் வாங்கி படியுங்கள். உங்களது சந்தேகங்கள் பெருமளவு தீரும். தானாகவே தைரியம் வரும்.

இந்திய சாட்சியச் சட்டம்
இந்த புத்தகமும் தமிழில் கிடைக்கிறது. ஒரு வழக்கை நடத்துவதற்கு சாட்சியும், ஆவணங்களுமே பெரிதும் துணை புரிகின்றது. ஆகவே, இந்த புத்தகத்தையும் வாங்கி கண்டிப்பாக படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.

பழைய வழக்குகள்
உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்கள் வழக்கு நடத்தியிருப்பார்கள். அதன் நகல்களைக் கேட்டு வாங்கி அதில் எப்படி வார்த்தைகள், வாக்கியங்கள் கையாளப் பட்டிருக்கி்ன்றது? என்பதை கவனித்துப் படியுங்கள். அதற்குப் பின்னர் உங்கள் வழக்குகளை எப்படி எழுத வேண்டும் என்பது பற்றி சிந்தியுங்கள். ஒரு வெள்ளைத் தாளில் எழுதிப் பாருங்கள்.

கை காட்டி மரம்
நாங்கள் அனைவருமே ஒரு கை காட்டி மரத்தைப் போலத்தான். உங்களுக்கு வழி காட்டுவோமே தவிர வழக்காடுவதற்கு கூடவர இயலாது. எங்களுக்கு கிடைக்கின்ற ஓய்வு நேரத்தை உங்களுக்காக எந்தவித பிரதிபலனின்றி பயன்படுத்தி வருகிறோம். அதனை புரிந்து கொண்டு எங்களுக்கு ஒத்துழைப்பு தாருங்கள்.

நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்!
நீங்கள் எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு அடியும் வெற்றியை நோக்கித்தான்! என்பதை மனதார நம்புங்கள். நான் கண்டிப்பாக வெற்றி பெறுவேன்! என்று அடிக்கடி வாய்விட்டுச் சொல்லுங்கள்.

வாழ்த்துக்கள், வெற்றி நிச்சயம்!
தொடரும்

அன்புடன் செல்வம் பழனிச்சாமி


No comments:

Post a Comment