ரூ.20 கோடி நிலத்தை போலி ஆவணம் மூலம் அபகரித்து மோசடி
பிரபல பில்டர் காசா கிராண்டி உரிமையாளர் அனிருதன் கைது
சென்னை : சென்னை செம்மஞ்சேரியை சேர்ந்தவர் குலசேகர். ரியல் எஸ்டேட் அதிபரான இவருக்கு பெருங்குடி திருவள்ளூர் சாலையில் ரூ.20 கோடி மதிப்புள்ள 1.5 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டி விற்பனை செய்ய குலசேகர் முடிவு செய்தார். அதன்படி பிரபல கட்டுமான நிறுவனமான “காசா கிராண்டி” நிறுவனத்தை அனுகியுள்ளார். இந்நிறுவனத்தின் உரிமை யாளர்கள் அருண்குமார், அனிருதன் (38).
அதில் அனிருதன்என்பவரை குலசேகர் அணுகியுள்ளார். அதன்பின் காலி இடத்தில் 26 கட்டிடங்கள் கட்டி இருவரும் ஆளுக்கு 13 வீடுகள் விற்பனை செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்து அதற்கான ஒப்பந்தம் போட்டுள்ளனர். பின்னர், அனிருதன், நிலத்தில் கட்டுமானம் கட்டுவதற்கான அனுமதியை பெற பெருங்குடி டவுன் பஞ்சாயத்தில் தனது பெயரில் அனுமதி ெபற்று கட்டிடம் கட்டியுள்ளார். ஒப்பந்தப்படி குலசேகருக்கு 13 கட்டிடங்கள் வழங்க வேண்டும். ஆனால் அவருக்கு எந்த கட்டிடமும் கொடுக்கப்பட வில்லை. இதுகுறித்து குலசேகர் காசா கிராண்டி உரிமையாளர் அனிருதனிடம் கேட்டுள்ளார். அப்போது இந்த பிராஜெக்ட்டில் எனக்கு ரூ.3.5 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. நீ தான் எனக்கு பணம் தர வேண்டும். அதுமட்டும் இல்லாமல் இடம் எனது பெயரில் நான் பெருங்குடி டவுன் பஞ்சாயத்தில் அனுமதி பெற்று கட்டி உள்ளேன். இதனால் உனக்கு பணம் கொடுக்க முடியாது என்று கூறியதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த குலசேகர் பல முறை அனிருதனிடம் எனக்கு ஒப்பந்தப்படி கட்டிடம் தர வேண்டாம். என்னுடையே நிலத்திற்கான பணம் ரூ.20 கோடியை மட்டும் தந்தால் போதும் என்று கேட்டுள்ளார். அதற்கு எனக்கே நீ ரூ.3.5 கோடி பணம் கொடுக்க வேண்டும். இதில் நீ ரூ.20 கோடி கேட்கிறாயா? என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து குலசேகர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்படி மத்திய குற்றப்பிரிவில் உள்ள நில அபகரிப்பு பிரிவினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது குலசேகரின் ரூ.20 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணம் மூலம் அபகரித்து மோசடி செய்தது தெரியவந்தது.
இதையடுத்து காசா கிராண்டி கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் அனிருதன் மீது மோசடி(465), ஏமாற்றுவதற்காகவே மோசடியில் ஈடுபடுதல்(468), போலியான ஆவணங்களை உண்மையானது ேபால் உபயோகித்தல்(471), ஏமாற்றுதல்(420) ஆகிய 4 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் நேற்று அதிகாலை கொட்டிவாக்கத்தில் உள்ள வீட்டில் அனிருதனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அதைதொடர்ந்து எழும்பூரில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்துக்கு அழைத்து வந்து நேற்று மாலை வரை விசாரணை நடத்தினர். பின்னர் மாலையில் அவரை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிபதி உத்தரவுப்படி வரும் 18ம் தேதி வரை புழல் சிறையில் அடைத்தனர்.
முன்னாள் அமைச்சரின் பினாமி
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காசா கிராண்டி நிறுவனம் பல இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி வருகிறது. ஆரம்பத்தில் இந்த நிறுவனத்துக்கு குறைவான முதலீடே செய்யப்பட்டிருந்தது. பின்னர் கடந்த சில ஆண்டுகளில் இந்த நிறுவனம் அசுர வளர்ச்சி பெற்றது. அதற்கு காரணம், முன்னாள் அதிமுக அமைச்சரின் பணம் வெளிநாட்டில் இருந்து, இந்த நிறுவனத்தில் கறுப்பு பணமாக முதலீடு செய்யப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் ஏற்கனவே பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.
இந்த நிறுவனத்தின் மீது ஏற்கனவே பல குற்றச்சாட்டுகள் எழுந்தபோதும், அப்போது ஓ.பன்னீர்செல்வத்துக்கு அடுத்த இடத்தில் இருந்த அமைச்சரிடம் இருந்து பரிந்துரை வந்ததால், போலீசார் எந்த புகாரையும் விசாரிக்காமல் இருந்து வந்தனர். தற்போதுதான் அந்த அரசியல் பிரமுகர், கட்சியில் இருந்து வெளியேறி, ஓ.பன்னீர்செல்வம் அணியில் முக்கிய தலைவராக உள்ளார். அதைத் தொடர்ந்து அனிருதனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
நன்றி : தினகரன் நாளிதழ் - 06.04.2017
No comments:
Post a Comment