disalbe Right click

Tuesday, April 11, 2017

மோட்டார் வாகன சட்ட திருத்தம் - 2016


மோட்டார் வாகன  சட்ட திருத்தம் - 2016

புதுடெல்லி: மக்களவையில் மோட்டார் வாகன  சட்ட திருத்த மசோதா மக்களவையில் (10.04.2017) நிறைவேறியது. மக்களவையில், ‘2016 மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா’ மீதான விவாதம் நடந்தது. 

அப்போது மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி பதிலளிக்கையில், ``இந்த மசோதா நிறைவேறிய பிறகு போக்குவரத்து துறையில் பெரிய அளவில் சீர்திருத்தங்கள் நடைபெறும். 100 சதவீத மின்னணு நிர்வாகத்தை இந்த மசோதா உறுதி செய்யும். 

மேலும், மின்னணு நிர்வாகம் செயல்பாட்டுக்கு வந்தால், போலி ஓட்டுனர் உரிமங்களை தயாரிக்க முடியாது. மேலும், வாகன திருட்டும் நடைபெறாது'' என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

புதிய மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவின்படி, 
  1. சாலை விதிகளை மீறினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும். 
  2. அதேபோல், உரிமம் இன்றி ஓட்டினால் ரூ.5000 அபராதமும், அதிவேகமாக கார் ஓட்டினால் ரூ.2000மும்,
  3. மதுகுடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ.10,000மும் அபராதம் விதிக்கப்படும். 
  4. ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டினால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும். 
  5. சாலை விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு காப்பீட்டு நிறுவனம் சார்பில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் தரப்படும். 
கடந்த 1989ம் ஆண்டு இந்திய மோட்டார் வாகன சட்டம் மேம்படுத்தப்பட்டது. அதன்பின்னர் 28 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போதுதான் அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 முன்னதாக, விபத்தில் உயிர் இழப்பு ஏற்பட்டால் வழங்கப்படும் இழப்பீடு தொகையை உயர்த்தவேண்டும் என்ற இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் சங்கர் பிரசாத் தத்தா கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதற்கு ஆதரவாக 37 ஓட்டுக்களும், எதிராக 221 ஓட்டுக்களும் கிடைத்தன. விபத்தில் உயிர் இழப்பு ஏற்பட்டால் வழங்கப்படும் இழப்பீடு தொகையை உயர்த்த வாய்ப்பில்லை என்று நிதின் கட்கரி கூறினார்.

நன்றி : தினகரன் நாளிதழ் - 11.04.2017

No comments:

Post a Comment