குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு-280
ஒரு நாள் குற்றவியல் நீதிமன்றம் ஒன்றில் கொலை வழக்கு பற்றிய விசாரணை நடந்து கொண்டிருந்தது. கொலை செய்ததாக குற்றவாளிக் கூண்டில் ஒருவரை நிற்க வைத்து விசாரித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகின்றவரின் பிரேதம் கைப்பற்றப்படவில்லை.
எதிரியின் வழக்கறிஞர் முன் வைத்த வாதம்
குற்றஞ்சாட்டப்பட்டவரின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், தனது வாதங்களை கோர்ட்டார் முன் வைத்துக் கொண்டிருந்தார். திடீரென்று அவர், ”எனது கட்சிக்காரர் கொலைகாரர் அல்ல, அவரால் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகின்றவர் இன்னும் கொஞ்ச நேரத்தில் உயிரோடு இங்கு வரப்போகிறார், பாருங்கள்!” என்று கூறினார். அதனைக் கேட்ட பார்வையாளர்கள் எல்லோரும் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
ஆனால், யாரும் வரவில்லை.
சற்று நேரம் கழித்து, அந்த வழக்கறிஞர், எனது கட்சிக்காரரால், கொலை செய்ததாக கூறப்படுகின்றவர் இன்னும் சற்று நேரத்தில் வரப்போவதாக நான் கூறியபோது எல்லோரும் சந்தேகத்துடன் வாசலையே பார்த்தார்கள். அதனால், அந்த சந்தேகத்தின் பலனை எனது கட்சிக்காரருக்கு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என்று தனது வாதத்தை முடித்தார்.
நீதிபதி எழுதிய தீர்ப்பு
நீதிபதி தனது தீர்ப்பில், குற்றஞ்சாட்டப்பட்டவரை, கொலைகாரன் என்று தீர்மானித்து தீர்ப்பு எழுதினார்.
என்ன காரணத்தினால், எனது கட்சிக்காரருக்கு தண்டணை வழங்கினீர்கள்? என்று வழக்கறிஞர் நீதிபதியிடம் கேட்டபோது, கொலை செய்யப்பட்டவர் உயிரோடு இங்கு வரப்போகிறார் என்று நீங்கள் கூறியபோது, எல்லோரும் வாசலை பார்த்தார்கள் என்பது உண்மைதான். ஆனால், குற்றஞ்சாட்டப்பட்டவர் வாசலை பார்க்கவில்லை. தன்னால் கொலை செய்யப்பட்டவர் உயிரோடு எப்படி இங்கு வரமுடியும்? என்ற நம்பிக்கையில் அவர் தலை குனிந்து கொண்டு நின்றார். அதனால்தான், அவரை குற்றவாளி என்று தீர்மானித்தேன் என்றார்.
CrPc-280
குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு - 280ல் ஒரு வழக்கை விசாரிக்கும் நீதிபதி, ”தரப்பினரின் வாக்குமூலத்தை பதிவு செய்யும் போது, அவர்களது முகக்குறிப்பையும் பதிவு செய்ய வேண்டும்!” என்று குறிப்பிடப் பட்டுள்ளது.
*************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 26.04.2017
No comments:
Post a Comment