disalbe Right click

Monday, April 10, 2017

பத்திரப்பதிவு அனுமதி தற்காலிக அனுமதிதான்!


பத்திரப்பதிவு அனுமதி தற்காலிக அனுமதிதான்!

பத்திரப் பதிவு அனுமதி தற்காலிகமே: உயர் நீதிமன்றம் உத்தரவு
அக்டோபர் 20-ம் தேதிக்கு முன்பாக பதிவு செய்யப்பட்ட அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை மறு விற்பனை செய்யும் வகையில் தளர்த்தப்பட்டிருந்த தடை உத்தரவு, வழக்கின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை பத்திரப் பதிவு செய்ய ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை உத்தரவை உயர் நீதிமன்றம் மார்ச் 28-ம் தேதி அன்று தளர்த்தியது. கடந்த ஆண்டு அக்டோபர் 20-ம் தேதிக்கு முன்பாக பத்திரப் பதிவு செய்யப்பட்ட வீட்டு மனைகளை மறு விற்பனை செய்யலாம் எனவும் அனுமதியளித்திருந்தது.

இதுதொடர்பான உத்தரவின் நகல் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியானது. அதில் பத்திரப் பதிவு அனுமதி, வழக்கின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கின் பின்னணி
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘‘தமிழகம் முழுவதும் விவசாய நிலங்கள் அனைத்தும் சட்ட விரோத வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. இதனால், விவசாயமும், விவசாய நிலங்களும் முற்றிலுமாக அழிந்து வருகிறது. இந்த சட்ட விரோத விற்பனையை பத்திரப் பதிவுத்துறையும் ஊக்குவித்து வருகிறது. எனவே விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்ற தடை விதிக்க வேண்டும்’’ என கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தமிழகம் முழுவதும் அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை பத்திரப் பதிவு செய்ய தடை விதித்து கடந்தாண்டு செப்டம்பர் 9-ம் தேதி உத்தரவிட்டனர்.

இந்த தடை உத்தரவு எதிரொலியாக தமிழக அரசு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு சட்ட திருத்தம் கொண்டு வந்து அரசாணை பிறப்பித்தது. அதில் ‘‘2016 அக்டோபர் 20-ம் தேதிக்கு முன்பு பத்திரப் பதிவு செய்யப்பட்ட அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை மறு விற்பனை செய்யலாம் என்றும், ஆனால் அந்த தேதிக்குப் பிறகு புதிதாக உருவாக்கப்பட்ட அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை எக்காரணம் கொண்டும் பத்திரப் பதிவு செய்யக் கூடாது’’ என்றும் உத்தரவிடப்பட்டது.

ஆனால் இந்த அரசாணையை நீதிபதிகள் ஏற்க மறுத்ததால் தமிழகம் முழுவதும் ரியல் எஸ்டேட் தொழில் கடுமையாக பாதிப்படைந்தது. இதனால் நிலங்களை வாங்கிய பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி ரியல் எஸ்டேட் அதிபர்கள், முகவர்கள் சார்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்நிலையில், தலைமை நீதிபதியாக பதவி வகித்த எஸ்.கே.கவுல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணி மாறுதலாகி சென்றார். அதன்பிறகு இந்த வழக்கு விசாரணை பொறுப்பு தலைமை நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ் மற்றும் நீதிபதி ஆர்எம்டி. டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்து வருகிறது. மார்ச் 28-ம் தேதி இந்த வழக்கு இதே அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரரான வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.முத்துக்குமாரசாமி மற்றும் ரியல் எஸ்டேட் தரப்பில் 10-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆஜராகி சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வாதிட்டனர்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ’’அங்கீகாரமற்ற விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்ற கடந்த செப்டம்பர் 9-ம் தேதி உயர் நீதிமன்றம் விதித்த தடையில் நாங்கள் சிறு மாற்றம் செய்கிறோம். அதன்படி, தமிழக அரசு பத்திரப் பதிவு சட்டப்பிரிவு 22(ஏ) - வில் கொண்டு வந்துள்ள சட்ட திருத்தங்களின்படி, கடந்த 2016 அக்டோபர் 20-ம் தேதிக்கு முன்பாக விற்பனை செய்யப்பட்ட அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை மறு விற்பனை செய்ய எந்த தடையும் இல்லை.

அதேநேரம், இந்த தேதிக்குப் பிறகு விற்பனை செய்யப்பட்ட அங்கீகாரமற்ற நிலங்களை எக்காரணம் கொண்டும் மறு விற்பனை செய்யக்கூடாது. அரசு புதிதாக வகுக்கும் கொள்கை முடிவைப் பொருத்தே அதுதொடர்பாக முடிவு செய்யப்படும். இந்த கொள்கை முடிவை வரும் ஏப்ரல் 11-ம் தேதிக்குள் அரசு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியான உத்தரவு நகலில் பத்திர பதிவு அனுமதி என்பது வழக்கின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டதே என்று கூறப்பட்டுள்ளது. இது வீட்டு மனை விற்பனையாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


ஆர். பால சரவணக்குமார்

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 11.04.2017



No comments:

Post a Comment