disalbe Right click

Saturday, April 29, 2017

கலவரங்களில் பாதிப்படைந்த வாகனங்களுக்கு இழப்பீடு கிடைக்குமா?

கலவரங்களில் பாதிப்படைந்த வாகனங்களுக்கு இழப்பீடு கிடைக்குமா?
ஜல்லிக்கட்டுப் போராட்டம் வரலாறு காணாத வகையில் மாபெரும் போராட்டமாக உருவெடுத்தது. ஆனால், போராட்டம் வன்முறை மற்றும் கலவரத்தில் முடிந்தது. கலவரத்தின் முடிவில் ஏராளமான டூவீலர்கள், வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. போலீஸ் நிலையம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஏராளமான பொதுச் சொத்துகளுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டன. இந்தக் கலவரத்தில் வன்முறையாளர்கள் வாகனங்களைச் சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு. அதேசமயம், போலீஸாரே பொதுச் சொத்துகளுக்கும், வாகனங்களுக்கும் தீ வைத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதை போலீஸாரும் மறுத்துள்ளனர்.
கலவரம் வாகனம் தீ வைப்பு
இந்த நிலையில் வன்முறை மற்றும் கலவரத்தில் சேதம் ஆகும் வாகனங்களுக்கு இழப்பீடு குறித்து வழக்கறிஞர் மற்றும் இன்ஷூரன்ஸ் நிபுணர் திருமலையிடம் பேசினோம். கலவரத்தில் பாதிப்படைந்த வாகனத்தின் உரிமையாளர் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை விவரமாக எடுத்துச் சொன்னார்.
ஜாக்கிரதையாக இருந்தால் இழப்பீடு கிடைக்காது!
"சென்னை கலவரத்தில் ஒரு சில வாகனங்களுக்குச் சிறிய அளவிலான சேதமே ஏற்பட்டு இருக்கும். பல வாகனங்களுக்குப் பெரிய அளவிலான சேதம் ஏற்பட்டு இருக்கும். வன்முறை மற்றும் கலவரத்தில் வாகனம் பாதிப்படைந்து இருந்தால் இழப்பீடு பெற்றுக் கொள்ளலாம். இன்ஷூரன்ஸ் பாலிசிதாரர் எப்போதும் போல இன்ஷூரன்ஸ் நிறுவனத்திற்கு முதலில் தெரியப்படுத்த வேண்டும். கலவரத்தில் பாதிப்படைந்த வாகனத்தை அதன் உரிமையாளர் ஸ்பாட் போட்டோ ஒன்று எடுத்து வைப்பது நல்லது.
இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் இழப்பீடு கேட்கும்போது, அவர்கள் கிளெய்ம் பார்ம் ஒன்றை வழங்குவார்கள். அந்த கிளெய்ம் பார்ம்-ல் வாகனம் பாதிப்படைந்ததற்கு என்ன காரணம் என்பதைக் குறிப்பிட வேண்டும். எங்கு வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது; எதற்காக அங்கு வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது; கலவரம் நடைபெற உள்ளது என்பதை முன்பே தெரிந்தும் ஏன் வாகனத்திற்குப் பாதுகாப்பு அளிக்கவில்லை என பலதரப்பட்ட கேள்விகளைக் கேட்பார்கள். ஏனெனில் வாகனத்தின் பாதுகாப்புக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பாலிசிதாரர் எடுக்க வேண்டும். அந்த நடவடிக்கைகளை பாலிசிதாரர் எடுத்திருக்கிறாரா என்பதை அறிவதற்காகப் பல கேள்விகளை இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் கேட்கின்றன. அதேசமயத்தில் பாலிசிதாரர் அஜாக்கிரதையாக இருந்தால் இழப்பீடு கிடைக்காது.
பொதுவாக வாகனத்துக்கு ஏதாவது ஒரு விபத்து நடைபெற்றால் என்ன நடைமுறையோ அதே வழிமுறைதான் வன்முறை மற்றும் கலவரம் போன்ற சம்பவத்திற்கும். மோட்டார் வாகன காம்ப்ரிஹென்ஸிவ் பாலிஸியில் பிரிவு ஒன்றில் Riot and Strike காரணமாக வாகனம் சேதமடைந்தால் இழப்பீடு உண்டு. பாலிசிதாரரின் வாகனம் சேதம் ஏற்பட்டால் காலம் தாழ்த்தாமல் உடனடியாக பாலிஸி வழங்கிய இன்ஸூரன்ஸ் அலுவலகத்துக்குத் தகவல் கொடுத்திட வேண்டும். அருகில் உள்ள காவல்நிலையத்திலும் புகார் கொடுத்து FIR பெறுவது நன்று. வாகனம் மேலும் சேதமடையாமல் பாதுகாக்க வேண்டும்.
வாகன இழப்பீடு, தேய்மானம் மற்றும் கழிவுத்தொகையை கழித்துவிட்டு சர்வேயர் மதிப்பீட்டின் அடிப்படையில் வழங்கப்படும். டயர் மற்றும் ட்யூப் சேதமாகியிருந்தால், புதிதாக மாற்றுவதில் 50 சதவிகிதம் கழிக்கப்பட்டு இழப்பீடு மதிப்பிடப்படும். நாளிதழ்களில் பாலிஸிதாரரின் வாகனம் சேதமடைந்ததைப் பற்றிய செய்திகள் பிரசுரமாகியிருந்தால் அந்த நாளிதழையும் உங்களது இழப்பீட்டு மனுவோடு இணைத்திடலாம்.
FIR தேவையா?
ஜல்லிக்கட்டு கலவரத்தில் போலீஸாரே வாகனங்களுக்கு தீ வைத்ததாக குற்றச்சாட்டு எழுப்பப்படுகிறது. இந்த நிலையில், வாகனத்தின் உரிமையாளர் அருகில் உள்ள காவல்நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்து FIR பெறுவது என்பது மிக முக்கியமில்லை. ஏனெனில் FIR என்பது கூடுதல் ஆதாரத்திற்காகத்தான் கேட்கப்படுகிறது.
காவல் நிலையத்தில் FIR போடவில்லை என்றால் CSR வழங்கினால் அதுவே போதும். எப்படி கடையில் ஏதாவது ஒரு பொருளை வாங்கினால் ரசீது வழங்கப்படுகிறதோ, அதைப் போல காவல் நிலையத்தில் வழங்கப்படுவதுதான் CSR (Community Service Register) எனும் ரசீது. CSR வழங்கினாலே, காவல் நிலையத்தில் உங்கள் புகாரை ஏற்றுக் கொண்டார்கள் என அர்த்தம். இந்த CSR-ஐ இன்ஷூரன்ஸ் கிளெய்ம் பார்ம்-ல் இணைத்துக் கொள்ளலாம்" என்றார்.
ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைப் பொறுத்தவரை முன்னமே தெரிந்திருக்க வாய்ப்பில்லை.பொதுவாக வாகனத்துக்கு ஏதாவது ஒரு விபத்து நடைபெற்றால் என்ன நடைமுறையோ அதே வழிமுறைதான் வன்முறை மற்றும் கலவரம் போன்ற சம்பவத்திற்கும் என்பதால் தாராளமாக இழப்பீடு கிடைக்கும்.
Image result for கலவரங்களில் பாதிப்படைந்த வாகனங்களுக்கு இழப்பீடு கிடைக்குமா?

சோ.கார்த்திகேயன்
நன்றி : விகடன் செய்திகள் - 28.01.2017

No comments:

Post a Comment