பாம்பு கடித்தால் உடனடியாக என்ன செய்ய வேண்டும்?
பாம்புகள் என்றாலே பலருக்கும் அலர்ஜி அல்லது பயம் தான். அதனாலே எவை விஷப்பாம்பு எவை விஷமற்றவை என்பதை கூட தெரிந்துகொள்ள முயல்வதில்லை. ஒருவேளை பாம்புக் கடித்துவிட்டால் என்ன செய்வது? கடித்தது விஷப்பாம்பா என்பதை எப்படி அறிவது? சில டிப்ஸ் இதோ.
என்ன செய்ய வேண்டும்?
1) சினிமாவில் பார்த்திருப்போம். கடித்த இடத்தின் அருகில் இறுக்கி கட்டுப் போட வேண்டும். ஆனால், ரொம்ப இறுக்கினால் விஷம் ஓரிடத்திலே தங்கி அந்த இடம் அழுகிப்போகும். எனவே லேசாக கட்டினால் போதும்.
2) கடிப்பட்டவர் பதற்றமடையக் கூடாது. அப்படி ஆனால், ரத்த ஓட்டம் அதிகரித்து விஷம் வேகமாக ஏறும். கொஞ்சம் சிரமமான விஷயம் தான். ஆனால், அதுதான் தேவை
3) கடிபட்டவரை நடக்க விடக்கூடாது. அவர் உடல் குலுங்கும்படி தூக்கிக்கொண்டு ஓடவும் கூடாது. இலகுவாகத்தான் கையாள வேண்டும்.
4) ரத்தம் வெளியே வந்தால் வர விடுங்கள். விஷம் ஏறிய ரத்தம் தான் முதலில் வெளிவரும். கடிப்பட்ட இடத்தை ஓடும் நீரில், சோப்பு கொண்டு கழுவுங்கள்.
5) மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது படுக்க வைத்து அழைத்துச் செல்லவும்
6) பாம்புக் கடிக்கு அரசு மருத்துவமனையே சிறந்தது. தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாக இருந்தால், முன்கூட்டியே அழைத்துப் பேசி விடவும். இல்லையேல், அங்கு போன பிறகு உதவ மருத்துவர்கள் இல்லை என தட்டிக்கழிப்பார்கள்.
7) கடித்தது எந்தப் பாம்பு எனத் தெரிந்தால் மருந்து தருவது எளிது. எனவே நோயாளி நினைவுடன் இருக்கும்போது இது பற்றிய தகவல்களை கேட்டு தெரிந்துகொள்ளலாம். பாம்பின் நீளம், நிறம், தடிமன் ஆகியவை வைத்துக் கூட அது என்னப் பாம்பு என்பதை அறியலாம். பெயர் தெரியாவிட்டாலும் இது போன்ற தகவல்களை நோயாளியிடம் கேட்டுப் பார்க்கலாம்.
8) கடிப்பட்ட இடத்தில் வரிசையாக பல பற்களின் தடம் தெரிந்தால் அது விஷப்பாம்பாக இருக்கும் வாய்ப்பு இல்லை. ஒன்றோ அல்லது இரண்டு மட்டும் இருந்தால் அது விஷப்பாம்பாக இருக்கும் வாய்ப்பு அதிகம். ஒரு பல் மட்டும் பதிந்திருந்தால் அது தோலை மட்டுமே தீண்டியிருக்கும். விஷம் அதிகம் ஏறியிருக்கும் வாய்ப்புக் குறைவு. எதுவாக இருந்தாலும் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது அவசியம்
9) எல்லா சமயங்களிலும் மருத்துவமனைக்கு கொண்டு வருவது சாத்தியம் ஆகாது. அப்படிப்பட்ட நேரத்தில் கிராமங்களில் பின்பற்றப்படும் வைத்தியங்களை செய்து பார்க்கலாம். நோயாளிக்கு வாழைச் சாற்றை கொடுப்பது நமது கிராமங்களில் உண்டு. அது விஷ முறிவுக்கு நல்ல மருந்து என்கிறார்கள் அனுபவ வைத்தியர்கள். அல்லது மஞ்சளை தீயில் காட்டி எரிந்துகொண்டிருக்கும் மஞ்சளை பாம்பு கடித்த இடத்தில் வைத்து அழுத்துவார்கள். அப்படி செய்தாலும் நோயாளியை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சோதித்து பார்ப்பது நல்லது.
10) நல்ல பாம்பு கடித்தால் ரத்தம் வேகமாக உறையும். கண் இமை சுருங்கும். பேச்சு குழறும். கட்டு விரியன் கடித்தால் இதனுடம் வயிறும் சேர்ந்து வலிக்கும். கண்ணாடி விரியன் கடித்தால் வலி அதிகமாக இருக்கும்.
என்ன செய்யக்கூடாது?
1) வாயால் ரத்தத்தை எடுக்க முயலாதீர்கள். அது விஷத்தை இன்னொருவருக்கும் கடத்தும். மேலும், பாக்டீரியாக்களை கடிபட்ட இடத்தில் அதிகரிக்க செய்து, விஷத்தின் வீரியத்தை மேலும் தீவிரமாக்கும்
2) காயத்தை மேலும் பெரிதாக்காதீர்கள். சிலர் காயத்தை வெட்டி பெரியதாக்கி, அதன் பின் வாயால் ரத்தத்தை எடுப்பார்கள்.
3) ஐஸ் பேக்குகள் அல்லது குளிர்ந்த பொருட்களை காயத்தின் மேல் வைக்காதீர்கள்.
கார்க்கிபவா
நன்றி : விகடன் செய்திகள் - 27.04.2017
No comments:
Post a Comment