disalbe Right click

Saturday, April 1, 2017

எதுக்காக லஞ்சம் வாங்குறோம்?


எதுக்காக லஞ்சம் வாங்குறோம்?

காவல் நிலையத்தில் ஏன் லஞ்சம் வாங்குகிறார்கள் தெரியுமா..? - ஒரு குபீர் விளக்கம்!

'ஆடுதானே காணாம போச்சு. அதை அப்படியே விட்டுடு. போலீஸ் ஸ்டேஷன் போனா... இருக்குற மாட்டையும் விக்க வேண்டியிருக்கும்' - கிராமங்களில் இப்படி சொல்வதுண்டு.

பிரச்னைனா போலீஸ் ஸ்டேஷன் வர வேண்டியதுதானே. நீங்களாவே ஒரு முடிவு எடுத்துக்குவீங்களா? என போலீஸ் தரப்பு நியாயம் பேசினாலும், 'போலீஸ் ஸ்டேஷனே வேண்டாம். நமக்கேன் பிரச்னை?' என போலீஸ் ஸ்டேஷனையே பிரச்னையாக நினைப்பவர்கள்தான் அதிகம். இதற்கு காரணமும் உண்டு.

உங்கள் பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களில் அதிகபட்ச அதிகாரம் குவிந்திருக்கும் அலுவலகம் எதுவென்று தெரியுமா? சந்தேகமே வேண்டாம் போலீஸ் ஸ்டேஷன்கள்தான். புகார் கொடுப்பவரையே கைது செய்ய போலீசாரால் முடியும். என் மீது தவறில்லை என நீங்கள் போலீஸ் ஸ்டேஷனின் நான்கு சுவருக்குள் நிரூபிக்க முடியாது. அதற்கு நீங்கள் நீதிமன்றம் செல்ல வேண்டியிருக்கும். 

நீங்கள் காவல்நிலையத்துக்கு எதற்காக சென்றாலும், வாசலில் காவலுக்கு துப்பாக்கியோடு நிற்கும் காவலாளியை கடந்து செல்ல வேண்டியிருக்கும். அடுத்து நீங்கள் சந்திக்கும் நபர் ரைட்டர். 

நீங்கள் சென்றால் உங்களை பார்க்காமல் ஏதாவது எழுதிக்கொண்டே இருப்பார். சில நிமிடங்கள் நீங்கள் நின்று கொண்டே இருந்தால் மெல்ல நிமிர்ந்து பார்த்து, 'என்ன பிரச்னை..?' என கேட்பார். 

நீங்கள் ஏதாவது பெரிய பிரச்னையை சொல்லிவிட்டால், எஸ்.ஐ.,யையோ, இன்ஸ்பெக்டரையோ கை காட்டி விடுவார். அதுவே சிறிய பிரச்னையாக ஏதாவது சொன்னால் அவரே களத்தில் இறங்கி விடுவார். 

பேப்பர் கட்டு, பேனாவில் துவங்கி...பிரச்னை என கேட்டு விட்டு, 'அப்படியா. முதல்ல பக்கத்துல கடைக்கு போய் 2 கட்டு பேப்பர், 10 பேனா வாங்கிட்டு வா. வரும்போது எல்லோருக்கும் டீ சொல்லிடு" என ஆரம்பிப்பார். 

அதில் இருந்துதான் துவங்குகிறது வசூல் வேட்டை. காவல்நிலையத்தில் நீங்கள் புகார் அளித்தால் உடனடியாக புகார் ஏற்பு சான்றிதழ் கொடுக்க வேண்டும். 

புகாரைப்பொறுத்து அதன் மீது முதல் தகவல் அறிக்கை போட வேண்டும். அதன் பின்னர்தான் விசாரணையை துவக்க வேண்டும்.

ஆனால் இது எதையுமே போலீசார் செய்யமாட்டார்கள். நீங்கள் புகார் கொடுக்கிறீர்கள் என்றால் உடனே எதிர் தரப்பை அழைத்து பேசுவார்கள். இருவரிடமும் ஒரே நேரத்தில் பேரம் பேசுவார்கள். யாரிடம் அதிகம் பேரம் படிகிறதோ அவர்களுக்கு ஆதரவாக போலீசார் செயல்படுவார்கள். 

அதாவது புகார் கொடுத்தவரை விட எதிர் தரப்பு அதிக பணம் கொடுத்தால், முதலில் புகார் மீது நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். இதை மீறி புகார்தாரர் கேள்வி கேட்டால் அவ்வளவுதான். எதிர்தரப்பிடம் புகாரை வாங்கி, புகாரை கொடுத்தவர் மீதே நடவடிக்கை எடுத்து விடுவார்கள். 

ஒருவரை தகாத வார்த்தைகளில் பேசுகிறீர்கள் என்றால் அது சாதாரண வழக்கு. அதுவே கொலை செய்து விடுவேன் என சேர்த்துக்கொண்டால் அது கொலை மிரட்டல் ஆகிவிடும். அதேபோல் தாக்குதல், ஆயுதங்களை கொண்டு தாக்குதல் என ஒரே சம்பவத்தில் ஜாமீனில் வரக்கூடிய அளவுக்கும் போலீசால் வழக்குப்பதிவு செய்ய முடியும். ஜாமீனில் வரமுடியாத அளவுக்கும் போலீசாரால் வழக்குப்பதிவு செய்ய முடியும். 

சட்டப்பிரிவுகளை மாற்றி உங்கள் ஜாதகத்தை இவர்கள் மாற்றி அமைத்து விடுவார்கள். ஜாமீனில் வெளி வரக்கூடிய அளவுக்கு வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றால் நீங்கள் லஞ்சம் கொடுத்துதான் ஆக வேண்டும்.

குற்றப்பிரிவு திருட்டு, கொள்ளை சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களிடம் கூட போலீசார் தங்கள் கைவரிசையை காட்ட மறுப்பதில்லை. ஒரு வீட்டில் 50 பவுன் நகை கொள்ளை போகிறது என்றால், அவர் புகார் அளித்தாலும் உடனடியாக வழக்குப்பதிவு செய்ய
மாட்டார்கள். 

அப்படியே வழக்குப்பதிவு செய்தாலும் கொள்ளைபோன அளவை விட குறைவாகவே குறிப்பிட்டு வழக்கு பதிவார்கள். அதாவது 50 பவுன் கொள்ளை போன இடத்தில் 20 பவுன், 30 பவுன் நகை திருட்டு போனதாக வழக்கு பதிவாகும்.

திருடர்களை பிடித்த பின்னர் ஒட்டுமொத்த நகையையும் பறிமுதல் செய்து விடுவார்கள். ஆனால் பாதிக்கப்பட்டவர்களிடம் அத்தனை நகை இல்லை. எல்லாவற்றையும் விற்றுவிட்டான். பாதிதான் கிடைக்கும் என்பார்கள். பலருக்கு எப்.ஐ.ஆரில் குறிப்பிட்ட அளவு நகைதான் கிடைக்கும். மீதி போலீசின் பாக்கெட்டுக்கு போய் விடும். பத்திரிகையாளர்களை அழைத்து 20 பவுன் நகையையும் மீட்டு விட்டதாக பந்தாவாக பிரஸ் மீட்டும் கொடுப்பார்கள்.

எதுக்காக லஞ்சம் வாங்குறோம்?போலீஸ் ஸ்டேஷன்களில் நடக்கும் இத்தனை கொள்ளைகளும் உண்மைதானா என்றால், கொஞ்சம் கூட மறுக்காமல் ஒப்புக்கொள்கிறார்கள் போலீசார். 

"காவல்துறையில் லஞ்சம் அதிகளவில் புழங்குவது உண்மைதான். ஆனால் காவல்துறையில் லஞ்சத்தை ஒரு போதும் தவிர்க்க முடியாது. ஏனென்றால் காவல்நிலையங்களே இந்த லஞ்சப்பணத்தில்தான் நடக்கிறது" என அதிர வைத்தார் முன்னாள் போலீஸ் அதிகாரி.

"புகார் கொடுக்க வருபவரை பேப்பர் வாங்கி வரச்சொல்வதும், டீ வாங்கி கொடுக்க சொல்வதும், உணவு பொட்டலங்களை வாங்கி வரச்சொல்வதும் உண்மை. அது எங்களுக்கு மட்டுமல்ல. காவல்நிலையங்களில் உள்ள விசாரணை கைதிகளுக்காகவும்தான். விசாரணை கைதிகளை வைத்து பராமரிக்க அரசு வழங்கும் நிதியை வைத்து ஒரு டீ கூட வாங்கி தர முடியாது. 

மேலும் சட்டப்படி ஒருவரை ஒரு நாளுக்கு மேல் விசாரணைக்கு வைத்திருக்கவும் முடியாது. அதேபோல் குற்றவாளிகளை கைது செய்ய செல்வதற்கான வாகன செலவுகளையும் அரசு ஏற்காது. 

விசாரணைக்கு வரும் போலீஸ் அதிகாரிகள் தங்குவதற்கான ஏற்பாடுகள் என எதற்கும் அரசு செலவு இல்லை. இதுதவிர போலீஸ் வாகனம் துவங்கி, மறியலில் கைது செய்யப்படும் ஆயிரக்கணக்கானோருக்கு சாப்பாடு கொடுப்பது வரை எல்லாவற்றுக்கும் லஞ்சப்பணம் தேவை.

ஏனென்றால் அரசு இதற்கெல்லாம் செலவிடும் தொகை மிக மிக சொற்பம். சாலை மறியலில் ஆயிரம் பேரை கைது செய்தால், அவர்களுக்கு உணவுக்கு கொடுக்கும் தொகை ஒரு நபருக்கு வெறும் 10 ரூபாய். 

ஆனால் ஒரு நபருக்கு குறைந்த பட்சம் 100 ரூபாய் செலவாகும். இதற்கெல்லாம் நாங்கள் எங்கு போவது. இதற்கு துவங்கிய லஞ்சம்தான் இப்போது மிக அதிகமாகி இருக்கிறது" என இதற்கு விளக்கமும் சொன்னார் அந்த ஓய்வுபெற்ற அதிகாரி.

ஏன் லஞ்சம் வாங்குறீங்கனு கேட்டா... ஜென்டில்மேன் அர்ஜூன்மாதிரி விளக்கம் சொல்றீங்களே பாஸ்...! 

- ச.ஜெ.ரவி


விகடன் செய்திகள் - 31.03.2016

No comments:

Post a Comment