சட்ட விரோத காவல் & சித்ரவதை - போலீஸ் மீது வழக்கு
சென்னை:சட்டவிரோத காவலில் வைத்து
துன்புறுத்தியதாக, கோவை மாவட்ட
போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்
செய்யப்பட்டுள்ளது. மனுவுக்கு பதிலளிக்க, அரசுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், திப்பனம்பட்டியைச் சேர்ந்த சரவணன் தாக்கல் செய்த மனு:
என் சொந்த ஊர் உடுமலைப்பேட்டை; கோவை மாவட்டத்தில், ரியல் எஸ்டேட், மொத்த காய்கறி வியாபாரம் செய்து வந்தேன். அங்கு சொத்துக்களும் வாங்கினேன். கோவை மாவட்டம், வெள்ளக்கிணறில் வசித்து வந்தேன்.என் நண்பர் வைத்திலிங்கத்துடன், சந்தைக்கு சென்று கொண்டிருந்தேன். அப்போது, சீருடையில் இல்லாத ஏழு போலீசார், எங்கள் இருவரையும் வேனுக்குள் ஏற்றிச் சென்றனர். 2016 பிப்ரவரியில் சம்பவம் நடந்தது.
திருமண மண்டபத்தில் திருடி விட்டதாக, என் மீது குற்றம் சாட்டினர்; லத்தியால் அடித்தனர். கோவையில் உள்ள லாட்ஜில் அடைத்து வைத்து தாக்கினர். பின், என் வீட்டுக்கு அழைத்து சென்று, நகை, பணம், ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.என் மனைவியின் கழுத்தில் தொங்கிய தங்க தாலியை, வலுக்கட்டாயமாக பறித்தனர். காந்திபுரம் சார் - பதிவாளர் அலுவலகத்துக்கு அழைத்து சென்று, ஷாஜகான் என்பவர் பெயரில், விற்பனை பத்திரத்தில் கையெழுத்திட வைத்தனர்; வெற்று தாளிலும் கையெழுத்து பெற்றனர்.
சட்டவிரோதமாக காவலில் வைத்து, சித்ரவதை செய்ததற்காக, கோவை மாவட்ட உதவி ஆணையர் ரமேஷ் கிருஷ்ணா, காட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமொழி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, அரசுக்கு மனு அனுப்பினேன்.
என் மனுவை பரிசீலித்து, போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, உள்துறை செயலர், டி.ஜி.பி., கோவை போலீஸ் ஆணையருக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, நீதிபதி ராஜா முன், விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதிலளிக்கும்படி, உள்துறை செயலர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு, நோட்டீஸ் அனுப்ப, நீதிபதி உத்தரவிட்டார்.
நன்றி : தினமலர் நாளிதழ் செய்தி - 23.04.2017
No comments:
Post a Comment