disalbe Right click

Saturday, April 1, 2017

இஸ்லாமிய பெண்களுக்கு விவாகரத்து உரிமை உண்டா?


இஸ்லாமிய பெண்களுக்கு விவாகரத்து உரிமை உண்டா?

சட்டமே துணை: இஸ்லாமியப் பெண்களுக்கு விவாகரத்து உரிமை உண்டா?

இஸ்லாமியப் பெண்ணை அவரது கணவர் மும்முறை ‘தலாக்’ சொல்லியோ, மூன்று மாதங்களில் மாதம் ஒரு தலாக் சொல்லியோ விவாகரத்து செய்துவிட முடியும்.

 நொடிப் பொழுதில் முத்தலாக் சொல்லி ஒரு பெண்ணின் மண வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவருவது, பெண்ணின் அடிப்படை உரிமைக்கு ஊறு விளைவிக்கும் செயல் இல்லையா? 

இஸ்லாமிய அடிப்படைகளைக் கேள்விக்குள்ளாக்குவது திருக்குரானைக் கேள்விக்குட்படுத்துவதா என்பது போன்ற கேள்விகளுக்கு விடை காணும் பொருட்டு உச்ச நீதிமன்றத்தின் பேரமர்வு இந்த ஆண்டு மே மாதம் விவாதிக்க இருக்கிறது.

இஸ்லாமிய ஆண்களுக்கு இருக்கும் விவாகரத்து உரிமை, இஸ்லாமியப் பெண்களுக்கும் உண்டா? உண்டு.

ஷெரீப்புக்கு அவரது மகள்கள் நஸ்ரினையும் நௌஷத்தையும் நன்றாகப் படிக்க வைக்க விருப்பம். நல்ல மதிப்பெண்கள் எடுத்த நஸ்ரினைச் சட்டக் கல்லூரியில் சேர்த்தார். ஆனால், கல்லூரிக்குச் சென்ற முதல் ஆண்டே நஸ்ரினுக்குத் திருமணமாகிவிட்டது.

 படிப்பை விடாமல் பட்டம் பெற்றார் நஸ்ரின். வழக்கறிஞராக வேலை பார்ப்பதற்குக் கணவர் அனுமதி தரவில்லை. அதனால் வங்கி வேலையில் சேர்ந்தார். நௌஷத் கல்லூரிக்குப் போக மாட்டேன் என்று அடம்பிடித்து, தன் முறைப் பையனைத் திருமணம் செய்துகொண்டார். வெளிநாட்டில் வசதியாக வாழ்ந்தார்.

இரு குழந்தைகள் பிறந்ததும் நெளஷத்தின் கணவருக்கு இரண்டாவது திருமணம் செய்துகொள்ளும் ஆசை வந்தது. 

நௌஷத்துக்கு ஓய்வு வேண்டும் என்றும் வீட்டு வேலைகளை இன்னொரு மனைவி பார்த்துக்கொள்வார் என்றும் கூறினார். 

நெளஷத்தால் மறுக்கவோ எதிர்க்கவோ முடியவில்லை. இரண்டாவது மனைவி வீட்டுக்கு வந்ததிலிருந்து தினமும் சண்டை, சிக்கல்கள் அதிகமாயின.

நௌஷத் நான்கு வருடங்களாக எல்லா இன்னல்களையும் தன் குழந்தைகளுக்காகப் பொறுத்துக்கொண்டார். தான் படிக்காமல், வேலைக்குப் போகாமல் இருந்தது எவ்வளவு தவறு என்பதை உணர்ந்தார். தன்னுடைய அடையாளம் தனது அழகு, அதற்கு இணை எதுவும் இல்லை என்று நினைத்ததெல்லாம் எவ்வளவு அபத்தம் என்று உணர்ந்தார். 

இவ்வளவு கொடுமைகளை அனுபவித்தபோதும் நௌஷத் தீர்வைப் பற்றி நினைத்ததே இல்லை.

நௌஷத் தான் ஒரு மனுஷி என்பதையும், தனக்குள்ள அடிப்படை உரிமைகள் தன்னிடமிருந்து பிரிக்க முடியாத ஓர் அம்சம் என்பதையும் உணராமல் வளர்க்கப்பட்டதே இந்தப் பிரச்சினைக்குக் காரணம் என்று கருதினார் நஸ்ரின். 

இந்தக் கொடுமையிலிருந்து மீள, விவாகரத்து ஒன்றுதான் வழி என்பதை அவர் குடும்பத்தார் ஏற்கவில்லை.

இஸ்லாமியப் பெண்ணுக்கு விவாகரத்து எதற்கு? 

பணமும் வசதியும் உள்ள கணவன் மனைவிக்குச் சோறுபோட்டுப் பராமரித்தால், ஒரு பெண் விவாகரத்து பெற முடியாது என்றே உறவினர்கள் நினைத்தார்கள். 

சட்டப்படி விவாகரத்து பெற முடியுமா என்பதை நஸ்ரின் தெளிவுபடுத்தினார்.

1939-ம் ஆண்டிலிருந்து நடைமுறையில் உள்ள இஸ்லாமிய விவாகரத்துச் சட்டமானது, பெண்கள் கீழ்கண்டவற்றில் ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட காரணங்களோ இருந்தால் விவாகரத்து கோரலாம் என்கிறது.

1) கணவர் எங்கு சென்றார் என்பதே தெரியாமல் நான்கு ஆண்டுகள் இருப்பது.

2) கணவர் மனைவியை இரண்டாண்டுகள் பராமரிக்காமல் இருப்பது. 

3) கணவர் ஏழு ஆண்டுகள் அல்லது அதற்குக் கூடுதலான சிறைத் தண்டனை பெற்றிருப்பது (தீர்ப்பு உறுதியாக்கப்பட்டால் மட்டுமே விவாகரத்து உத்தரவு பெற முடியும்). 

4) நியாயமற்ற காரணங்களைக் கூறி, குடும்பக் கடமைகளை கணவர் ஆற்றாமல் இருப்பது. 

5) இரண்டாண்டுகள் வரை மனநோயாளியாகவோ, கடும் பாலியல் நோயாளியாகவோ, தொழுநோயாளியாகவோ இருப்பது. 

6) தன் தந்தை அல்லது பாதுகாவலர் பதினைந்து வயதுக்கு முன்னரே திருமணம் செய்து கொடுத்திருந்தால், 18 வயது நிறைவடையும் முன்னர் தாம்பத்திய வாழ்க்கை தொடங்காமல் இருந்தால், அந்தத் திருமணத்தை ரத்து செய்யும்படி கோரலாம். 

7) கணவர் மனைவியைக் கீழ்க்கண்ட வகைகளில் கொடுமைப்படுத்தினால் விவாகரத்து கோரலாம்: 

அ. உடல் ரீதியான கொடுமைகள் இல்லாமல் இருந்தாலும், வாழச் சாத்தியமற்ற வகையில் கொடுமைப்படுத்தினால்.

ஆ. முறை தவறிய வாழ்க்கை வாழும் பெண்களுடன் உறவுகொண்டால்.

இ. நடத்தை குறைவான வாழ்க்கையை வாழும்படி கட்டாயப்படுத்தினால்.

ஈ. பெண்ணின் சொத்துகளை அவள் அனுமதியின்றி விற்றால் அல்லது பிறருக்குக் கொடுத்தால்.

உ. மத ரீதியான வாழ்க்கை முறைக்கு இடையூறு செய்தால் அல்லது தடுத்தால்.

ஊ. ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியரைக் கொண்டு வாழும்போது எல்லோரையும் சமமாக நடத்தவில்லை எனில், கொடுமை இழைத்ததாகக் கருதி விவாகரத்து தரலாம் என்று சட்டம் கூறுகிறது.

நௌஷத்துக்கு விவாகரத்துப் பெற போதுமான காரணம் இருந்தது. இவ்வளவு காரணங்களின் அடிப்படையில் இஸ்லாமிய பெண்களுக்கு விவாகரத்து உரிமை இருந்தாலும், விவாகரத்து செய்த பின்னர் கணவரிடமிருந்து ஜீவனாம்ச உரிமையோ அல்லது நிரந்தர வாழ்க்கைப் பொருளுதவியோ கோருவதற்கு இந்தச் சட்டம் உரிமை அளிக்கவில்லை. 

விவாகரத்து வேண்டுமென்றால் வாங்கிக்கொள்ளலாம். அதிகபட்சம் குழந்தைக்கு இரண்டு வயதுவரை மட்டுமே ஜீவனாம்சம் தர வேண்டும் என்று 1986-ல் போடப்பட்ட இஸ்லாமியப் பெண்கள் விவாகரத்து உரிமைப் பாதுகாப்புச் சட்டம் கூறுகிறது.

மற்ற மதங்களைச் சார்ந்த மனைவிகள், குழந்தைகள், பெற்றோர்களுக்கு ஜீவனாம்ச உரிமை (125 Cr.P.C) சட்டத்தின் கீழ் உள்ள உரிமைகள் விவாகரத்தான இஸ்லாமியப் பெண்களுக்கு இல்லை. 

இஸ்லாமியப் பெண்கள் விவாகரத்துச் சட்டம் இருந்தாலும், நிவாரணம் இன்றி அல்லலுறும் வாழ்க்கையில் பயணிக்கிறார்கள். 

ஆனால், இஸ்லாமியக் குழந்தைகளுக்குப் பொது ஜீவனாம்ச சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் இஸ்லாமிய ஜீவனாம்ச சட்டத்தின் எல்லையை விரிவாக்கி, குழந்தைகளுக்கு ஜீவனாம்ச உரிமையை உறுதி செய்துவிட்டது.

கட்டுரையாளர், வழக்கறிஞர்
தொடர்புக்கு: ajeethaadvocate@yahoo.com

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 02.04.2017

No comments:

Post a Comment