ஜாதி பின்னணியில் தீர்ப்பு வழங்கக்கூடாது!
ஜாதி பின்னணியில் தீர்ப்பு வழங்க கூடாது!:
கீழமை நீதிமன்றங்களுக்கு
ஐகோர்ட் அறிவுரை
சென்னை:'ஜாதி மற்றும் சமூக பின்னணி அடிப்படையில், தண்டனை வழங்க கூடாது' என, கீழமை நீதிமன்றங்களுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. அத்துடன், கொலை, கொள்ளை வழக்கில், ஜாதி அடிப்படையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து பேரை, உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது.
- காஞ்சிபுரம் மாவட்டம், திருமங்கலம் கண்டிகை கிராமத்தில், பொன்னியம்மன் கோவிலின் கதவை உடைத்து, உள்ளே புகுந்த சிலர், உண்டியலில் இருந்த பணத்தை கொள்ளை அடித்தனர்.
- கோவிலுக்கு வெளியே துாங்கி கொண்டிருந்த சுப்ரமணி என்பவர், சத்தம் கேட்டு விழித்தார்.
- கட்டையாலும், கடப்பாரையாலும் சுப்ரமணியனை தாக்கியதில், அங்கேயே இறந்தார்.
- 2010 ஜனவரியில் நடந்த சம்பவம் குறித்து, சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். குமார் உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்தனர்.
ஆயுள் தண்டனை
- இந்த வழக்கை, காஞ்சிபுரம் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் விசாரித்தது.
- ஐந்து பேருக்கும், ஆயுள் தண்டனை விதித்து, 2015 ஜூலை, 31ல் தீர்ப்பளித்தது.
- தண்டனையை எதிர்த்து, குமார் தவிர மற்ற நான்கு பேரும், மேல்முறையீடு செய்தனர்.
மனுவை விசாரித்த, நீதிபதிகள் நாகமுத்து, என்.சேஷசாயி அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:
- குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை, சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கும் வகையில், ஆதாரங்கள் இருக்க வேண்டும்.
- ஆதாரங்கள் இல்லாமல், ஜாதி அடிப்படையில் குற்றவாளி என, முடிவு செய்வது, அரசியல் சட்டத்துக்கு எதிரானது.
- இந்த வழக்கைப் பொறுத்தவரை, குற்றம் சாட்டப்பட்டவர்களின் ஜாதி பின்னணி மற்றும் சமூக அடிப்படையை, விசாரணை நீதிமன்றம் ஆராய்ந்துள்ளது.
- குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், இவர்கள் குற்றம் புரிந்துள்ளனர் என்ற முடிவுக்கு, நீதிமன்றம் வந்துள்ளது.
பாரம்பரிய தொழில்
- குறிப்பிட்ட வகையான குற்றங்களில், குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் தான் பாரம்பரியமாக ஈடுபடுவர் என, நீதிமன்றம் எப்படி அனுமானிக்க முடியும் என்பதை, புரிந்து கொள்ள முடியவில்லை.
- குறிப்பிட்ட சமூகத்தினருக்கு, திருடுவது தான் பாரம்பரிய தொழில் என, விசாரணை நீதிமன்றம் எப்படி முடிவுக்கு வர முடியும்.
- ஒரு காலத்தில் அந்த சமூகத்தினர், திருட்டு தொழில் செய்ததாக அனுமானித்தாலும், அதே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் தான், கொலை மற்றும் கொள்ளையில் ஈடுபட்டதாக, நீதிமன்றம் முடிவுக்கு வந்தது, கேலிக்குரியதாக உள்ளது.
- ஒட்டு மொத்தமாக, ஒரு சமூகத்தின் மீது முத்திரை குத்துவதை, எந்த சட்டமும் அனுமதிக்கவில்லை.
- முன்னோர்களின் கிரிமினல் நடவடிக்கையை அடிப்படையாக வைத்து, அவர்களின் வழி வந்தவர்கள் மீதான வழக்குகளை, நீதிமன்றம் முடிவு செய்ய முடியாது.
- தீர்ப்பு எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு, இது ஒரு உதாரணம்.
- இப்படி ஒரு மோசமான தீர்ப்பை, எங்கள் அனுபவத்தில் சந்தித்ததில்லை.
- ஜாதி அடிப்படையிலான தீர்ப்பு, இதுவே கடைசியாக இருக்கட்டும்.
- உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள, அனைத்து முதன்மை செஷன்ஸ் நீதிபதிகளுக்கும், பதிவுத்துறை சுற்றுக்கு அனுப்ப வேண்டும்.
- வரும் காலங்களில், ஜாதி மற்றும் சமூக பின்னணியில், தீர்ப்புகள் இருக்கக் கூடாது.
- செஷன்ஸ் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது.
தண்டனையை எதிர்த்து, குமார் என்பவர் மேல்முறையீடு செய்யவில்லை என்றாலும், ஐந்து பேருக்கும் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டு உள்ளது.
நன்றி : தினமலர் நாளிதழ் - 23.04.2017
No comments:
Post a Comment