டாக்டரின் அலட்சியத்தால் உயிரிழப்பு - என்ன செய்ய வேண்டும்?
டாக்டர்களின் அலட்சியத்தால் உயிரிழந்த, பள்ளி முதல்வரின் குடும்பத்துக்கு, 23.54 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும்படி, கர்நாடக நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரின் ரீஜன்சி பப்ளிக் பள்ளியில், முதல்வராக பணியாற்றி வந்தவர் வித்யா பிரசாத். இவருக்கு 'ஸ்லீப் டிஸ்க்' நோய் இருந்ததால், 2010 பிப்ரவரி, 11ல், சேஷாத்திரி புரத்திலுள்ள போர்டீஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அறுவை சிகிச்சையின் போது, அவர் உயிரிழந்தார்.டாக்டர்களின் அலட்சியத்தால், வித்யா உயிரிழந்ததாக அவரது கணவரும் வக்கீலுமான பிரசாத், கர்நாடக மருத்துவ கவுன்சில் - கே.எம்.சி.,யில் புகார் அளித்தார்.
ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதை தொடர்ந்து பிரசாத், அன்றைய மருத்துவ கல்வித்துறை அமைச்சராக இருந்த எஸ்.ஏ.ராமதாசிடம் பிரசாத் புகார் செய்தார்.
அவரும் குழு அமைத்து விசாரணை நடத்தி, அறிக்கை அளிக்கும்படி, பெங்களூரு மருத்துவ கவுன்சில் - பி.எம்.சி., அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதன்படி அமைக்கப்பட்ட குழுவானது, புகார்தாரரிடம் விபரங்களை கேட்டறியாமலும், வித்யாவுக்கு அறுவை சிகிச்சை செய்த டாக்டர்களின் விளக்கத்தை மட்டுமே பெற்றும், ஒரு தலைபட்சமான அறிக்கை தயாரித்தது.
அந்த அறிக்கையும் அரசிடம் தாக்கல் செய்யப்படவில்லை. புகார்தாரருக்கும் கொடுக்கவில்லை.
எனவே பிரசாத், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு செய்து, மறு விசாரணைக்கு உத்தரவிடும்படி கோரினார். விசாரணையில், டாக்டர்களின் அலட்சியத்தால், வித்யா உயிரிழந்தது உறுதியானது.
இதையடுத்து, பிரசாத்தும், அவரது இரு மகன்களும் கர்நாடக நுகர்வோர் தீர்ப்பாயத்தில், நியாயம் கோரி, மனு தாக்கல் செய்தனர்.
மனு விசாரித்த தீர்ப்பாயம், போர்டீஸ் மருத்துவமனை, டாக்டரின் அலட்சியத்தால் உயிரிழந்த வித்யாவின் குடும்பத்துக்கு, எட்டு வாரங்களுக்குள், வட்டியுடன் சேர்த்து, 23.54 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும்படி உத்தரவிட்டுள்ளது.
நன்றி : தினமலர் நாளிதழ் – 26.10.2016
No comments:
Post a Comment