வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
தவறுதலாகத் தாக்கல் செய்யப்படும் வருமான வரிப் படிவங்கள், வரி செலுத்துபவரை பல இன்னல்களுக்கு ஆளாக்குகின்றன. மன உளைச்சலை ஏற்படுத்துவதுடன், வட்டி, அபராதம் எனக் கூடுதல் செலவுகளையும் இழுத்துவிடுகிறது. ஆகவே, வரி செலுத்துபவர்கள் வரிக் கணக்கைத் தாக்கல் செய்யும்போது அதிகக் கவனத்தோடு இருக்கும்பட்சத்தில், சிறிய தவற்றையும் தவிர்க்க முடியும். வரிக் கணக்குத் தாக்கல் செய்யும்போது தவிர்க்க வேண்டிய 10 தவறுகள் என்னென்ன?
1.குறைபாடுள்ள படிவம் 26AS
படிவம் 26AS-ல் உள்ள குறைபாடுகளை, வரி செலுத்துபவர்கள் தங்களது வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்குமுன்பாக, வருமான வரி இணையதளத்தில் உள்ள படிவம் 26AS-ல் என்ன பதிவாகி இருக்கிறது என்று பார்க்க வேண்டும். அதில் வருமான வரிப் பிடித்தம், முன்கூட்டியே கட்டிய வரி (Advance Tax), சுய மதிப்பீட்டு வரி (Self- Assessment tax) என மூன்றும் இருக்கும். இந்த மூன்றில் ஏதேனும் ஒரு விவரம் பூர்த்தி செய்யப்படாமல் இருந்தால், வரி செலுத்துபவருக்கு அதற்குரிய வரவு (Credit) கிடைக்காது.
உதாரணமாக, உங்களுக்கு வருமான வரிப் பிடித்தம் செய்தவர், அதை வருமான வரி இலாகாவுக்கு செலுத்தா விட்டாலோ, செலுத்தியபின் அதற்குரிய படிவத்தைத் (TDS Return) தாக்கல் செய்யா விட்டாலோ அல்லது தாக்கல் செய்யும்போது தவறு செய்திருந்தாலோ அதற்குரிய வரவு, உங்கள் 26AS-ல் வந்து சேராது.
ஆகவே, நீங்கள் வரிக் கணக்கைத் தாக்கல் செய்யும் முன்பு 26AS-ல் உங்களுக்காகச் செலுத்தப்பட வேண்டிய வருமான வரிப் பிடித்தம், முன்கூட்டியே கட்டிய வரி (Advance Tax), சுய மதிப்பீட்டு வரி (Self-Assessment Tax) என மூன்றும் இருக்கிறதா என்பதைப் பார்த்துவிட்டு, வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்.
2. தவறுதலான தனிநபர் விவரங்கள்
ஒவ்வோர் ஆண்டும் ஏராளமான வரிப் படிவங்கள் தாக்கல் செய்யப்படுகின்றன. பெயர், வங்கிக் கணக்கு, இந்திய நிதி அமைப்புக் குறியீடு (IFSC Code) மற்றும் முகவரி போன்றவை சரியாகக் குறிப்பிடப்படாததால், ஏராளமான வரி தாக்கல் கணக்குகள் ரத்து செய்யப்படுகின்றன. உங்களுக்கு வர வேண்டிய அதிகம் செலுத்திய வரியும் (Refund) ரத்தாகக்கூடிய வாய்ப்புகள் அதிகம். ஆகவே, உங்கள் விவரங்களும், படிவத்தில் இருக்கக்கூடிய விவரங்களும் சரியாக இருக்கிறதா என்பதைச் சரிபார்க்கவும்.
3. கணக்கில் வராத வருமானம்
பொது வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி, டிவிடெண்ட், காப்பீட்டு பாலிசி முதிர்வுத் தொகை ஆகியவை வருமான வரிக்கு உட்படாதவை. ஆனாலும், இவற்றின் விவரங்களை வரிக் கணக்குத் தாக்கலில் குறிப்பிட வேண்டும். இவை கட்டாயமாக இல்லையென்றாலும் வருமான வரி சம்பந்தமான தேவையற்ற கேள்விகளைத் தவிர்க்க இது உதவும்.
4. நிரந்தர வைப்பு நிதிக்கான வட்டி
வரிச் செலுத்துபவர்கள் நிறையபேர், தங்களுடைய ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கான வட்டியை வருமான வரிக்கு உட்படுத்துவதில்லை. இது தவறான செயல். வங்கிச் சேமிப்புக் கணக்கில் ரூ.10,000 வரை பெறும் வட்டிக்கு மட்டும்தான் வரி விலக்கு உள்ளது. அதற்கு மேல் பெறும் தொகைக்கு உரிய வரியைக் கட்டும்பட்சத்தில் வருமான வரித் துறையின் கேள்விகளிலிருந்து தப்பிக்கலாம்.
5. சரியான படிவம்
வருமான வரித் துறையில் வரி தாக்கல் செய்ய ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு வகை வரிப் படிவங்களை அறிமுகப்படுத்துகிறார்கள். சரியான படிவத்தைப் பூர்த்திசெய்து தந்தால்தான் வரிப் படிவங்கள் சரியான முறையில் தாக்கல் செய்யப்பட்டதாக அர்த்தம். இல்லையெனில் உங்களது வரிப் படிவம் நிராகரிக்கப்படும் அபாயம் உள்ளது.
6.படிவங்களைச் சரிபார்ப்பது
வருமான வரியை மின்னணு முறையில் (இ - ஃபைலிங்) செய்வதுடன், அதற்கான ஒப்புதல் படிவத்தை (Acknowledgement) 120 நாள்களுக்குள் கையொப்ப மிட்டு, மையப்படுத்தப்பட்ட செயலாக்க மையத்துக்கு (Centralized Processing Center) அனுப்ப வேண்டும் அல்லது டிஜிட்டல் கையொப்பமிட்டு வருமான வரி ஒப்புதல் படிவத்தைத் தாக்கல் செய்ய வேண்டும். அப்போதுதான் வருமான வரி தாக்கல் முழுமை அடையும்.
7. சொத்துகள் பற்றிச் சரியாகக் குறிப்பிடாமல் இருப்பது
வரி செலுத்துகிறவர்களில் பலர் ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகள் வைத்திருப்பார்கள். வருமான வரிச் சட்டத்தின்படி, ஒரே ஒரு வீட்டுக்கு மட்டும்தான் சுய ஆக்கிரமிக்கப்பட்ட வீடு எனக் கருதி வரி விலக்கு அளிக்கப் பட்டுள்ளது. மீதமுள்ள வீடுகளுக்குச் சந்தையில் உள்ள வாடகை வருமானத்தைக் (Fair Market Value) குறிப்பிட்டு, அதில் 30 சதவிகிதத்தைப் பராமரிப்புச் செலவுக்காகக் கழித்துவிட்டு வரும் தொகைக்கு வருமான வரி கட்ட வேண்டும்.
8.முந்தைய பணியின் வருமானத்தைத் தவிர்த்தல்
வேலை செய்பவர் வேறு பணிக்கு மாறும்போது, முந்தைய பணியின் மூலமான வருமானத்துக்கு வரியைக் கணக்கிடாமல் விட்டு விடுதல். முந்தைய நிறுவனம் மூலம் பெற்ற வருமானம், தற்போது பணியாற்றும் நிறுவனம் மூலம் பெறும் வருமானம் என இரண்டு வருமானத்தையும் கணக்கிட்டு வருமான வரிப் பிடித்தம் செய்ய சொல்ல வேண்டும்.
9.வெளிநாட்டிலுள்ள சொத்துகளை அறிவிக்காதது
நீங்கள் இந்தியராக இருக்கும் பட்சத்தில் வெளிநாட்டில் உங்களுக்குச் சொத்துகள் இருந்தாலோ, வெளிநாட்டில் வருமானம் இருந்தாலோ, அதை இந்திய வருமான வரிச் சட்டப்படி வருமான வரிக் கணக்கில் குறிப்பிட்டு அதற்குரிய வரியைச் செலுத்த வேண்டும். மறைக்கப்படும் பட்சத்தில் வட்டி, அபராதத்துடன் சிறைத் தண்டணையும் உண்டு. ஆகவே, வெளி நாட்டுச் சொத்துகள் பற்றி முழுமையாகக் குறிப்பிடுவது அவசியம். 10.காலகெடுவுக்குள் வரிக் கணக்குத் தாக்கல்
காலகெடுவுக்குள் வரிக் கணக்குத் தாக்கல் செய்வது, வீணாக வட்டி செலுத்துவதைத் தவிர்க்க உதவும். மேலும் வருமான வரி துறையினர், நீண்ட காலமாக வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யாதவர் களைத்தான் குறி வைக்கிறார்கள்.
ஆகவே, இதிலிருந்து தப்பித்துக் கொள்ள, வருமான வரிக்கணக்குத் தாக்கலைச் சரியான தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.!
ஜி.கார்த்திகேயன், ஆடிட்டர், கோயம்புத்தூர்
நன்றி : நாணயம் விகடன் 21.05.2017
No comments:
Post a Comment