முத்தலாக் பிரச்சனை - சர்வமத நீதிபதிகள் அமர்வு
முஸ்லிம் பெண்களை விவாகரத்து செய்யப் பயன்படுத்தப்படும் முத்தலாக் பிரச்சனையை விசாரிக்கும் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, பல்வேறு மதங்களைக் கொண்ட அமர்வாக அமைக்கப்பட்டுள்ளது விசேடமாகக் கருதப்படுகிறது.
முஸ்லிம்களின் வாழ்க்கை நடைமுறைகளில் ஒன்று முத்தலாக். முத்தலாக் நடைமுறைகளில் நிறைகளை விட குறைகளே அதிகம் நிறைந்திருப்பதாக கூறப்படும் நிலையில், அதிமுக்கியத்துவம் வாய்ந்த இந்த விவகாரத்தை விரிவான கண்ணோட்டத்துடன் பல கோணங்களில் விசாரித்து, விவாதித்து, தீர்க்கமான முடிவை எட்டும் நோக்கில் வெவ்வேறு மதங்களை சார்ந்த நீதிபதிகள் இந்த சட்ட அமர்வில் இடம் பெற்றிருக்கின்றனர்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும், சீக்கிய மதத்தை சேர்ந்தவருமான ஜே.எஸ். கெஹரின் தலைமையில், கிறித்துவ மதத்தை சேர்ந்த நீதிபதி குரியன் ஜோசஃப், பார்சி மதத்தை சேர்ந்த ஆர்.எஃப். நாரிமன், இந்து மதத்தை சார்ந்த யூ.யூ.லலித், இஸ்லாமியரான நஜீர் என ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முத்தலாக் பற்றிய கருத்துக்களையும், விவாதங்களையும், ஆலோசனைகளையும் கேட்டு முடிவெடுக்கவிருக்கிறது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ். கெஹர் வரும் ஆகஸ்ட் மாதம் பதவி ஓய்வு பெறவிருப்பதால், உச்ச நீதிமன்றத்தின் கோடைக்கால விடுமுறையிலேயே முத்தலாக் குறித்த விசாரணையை முடிக்கலாம் என்று அவர் முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
முத்தலாக் என்பது இஸ்லாமிய சட்டமுறையான 'ஷரியா'வின்படி, ஒரு முஸ்லிம் ஆண், தனது மனைவியிடம் மூன்று முறை தலாக் என்ற வார்த்தையை சொல்லிவிட்டால் திருமண பந்தம் முறிந்துவிடும். இது சரி-தவறு, பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி, சமூக சிக்கல்கள், பெண்களின் அடிப்படை உரிமை பறிப்பு என முத்தலாக் குறித்த விவாதங்கள் அண்மைக் காலங்களில் வலுத்துவருகின்றன.
முத்தலாக் முறையை தொடர்வது மற்றும் முடிவுக்கு கொண்டு வருவது என்ற இரு தரப்பு குறித்தும் சட்ட அமர்வில் விவாதிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.
இந்த அதிமுக்கியத்துவம் வாய்ந்த, அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் முத்தலாக் விவகாரத்தை விசாரிக்கும் நீதிபதிகள் யார்? அவர்களின் பின்புலம் என்ன?
நீதி சொல்லப்போகும் நீதிபதிகள் குறித்த ஒரு கண்ணோட்டம்.
தலைமை நீதிபதி ஜே.எஸ். கெஹர்
1952 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28 ஆம் தேதி பிறந்த நீதிபதி கெஹர், சண்டிகர் அரசுக் கலைக்கல்லூரியில் அறிவியல் துறையில் இளநிலை பட்டம் பெற்றவர். பிறகு, பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் எல்.எல்.பி மற்றும் எல்.எல்.எம் பட்டம் பெற்றார்.
1979 ஆம் அண்டு பஞ்சாப்-ஹரியாணா உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தனது பணியைத் துவங்கிய ஜே.எஸ்.கெஹர், 1992 ஜனவரி மாதம் பஞ்சாப் மாநில கூடுதல் அரசு வழக்குரைஞராக பதவியேற்றார். 1999 ஆம் ஆண்டில் பஞ்சாப் உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார்.
2009 அம் ஆண்டு உத்தராகண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்ற அவர், 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். இந்த ஆண்டு ஜனவரி மாதம், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார் கெஹர்.
இந்த ஆகஸ்ட் மாதம் பதவியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னதாக, முத்தலாக் விவகாரத்தை முடித்து வைக்கவேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் விரும்புகிறார்.
நீதிபதி குரியன் ஜோசஃப்
1953 ஆம் ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதி கேரள மாநிலத்தில் பிறந்த குரியன் ஜோசஃப், திருவனந்தபுரம் கேரள சட்டக்கல்லூரியில் சட்டம் படித்தவர். 1977-78 இல் கேரள பல்கலைக்கழக அகாடமி கவுன்சில் உறுப்பினர் ஆனார்.
1979 ஆம் ஆண்டு கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றத் தொடங்கிய குரியன், 1983-85 வரை கொச்சி பல்கலைக்கழகத்தில் செனட் உறுப்பினராக இருந்தார். 1987 ஆம் ஆண்டு அரசு வழக்குறிஞராக பதவியேற்ற குரியன் ஜோசஃப், 1994-96 இடைப்பட்ட காலகட்டத்தில் கூடுதல் ஜெனரல் வழக்கறிஞராக பதவி வகித்தார்.
1996 ஆம் ஆண்டு மூத்த வழக்கறிஞரான அவர், 2000 வது ஆண்டு ஜூலை 12ஆம் தேதி கேரள உயர் நீதிமன்ற நீதிபதியானார். 2006 முதல் 2008 வரை கேரள நீதித்துறை அகாடமியின் தலைவராக பதவி வகித்தார். 2008 அம் ஆண்டு லட்சத்தீவுகளுக்கான சட்ட சேவைகள் அமைப்பின் தலைவராக பதவியேற்றார்.
அதன்பிறகு, 2006 முதல் 2009 வரை கேரள உயர் நீதிமன்றத்தின் சட்ட சேவைகள் கமிட்டியின் தலைவராக இருந்த குரியன் ஜோசஃப், கேரள உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருமுறை பணியாற்றியிருக்கிறார்.
அதன்பிறகு, 2010 பிப்ரவரி எட்டாம் தேதி முதல் 2013 மார்ச் ஏழாம் தேதி வரை ஹிமாசல பிரதேச மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த அவர், 2013 மார்ச் எட்டாம் தேதியன்று உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2018, நவம்பர் 29 ஆம் தேதியுடன் இவரது பதவிக்காலம் முடிகிறது.
நீதிபதி ரோஹிங்டன் ஃபாலி நாரீமன்
நீதிபதி ஆர்.எஃப் நாரிமன் 1956 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13 ஆம் தேதியன்று மும்பையில் பிறந்தவர். மும்பை கதீட்ரல் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த நாரீமன், தில்லி ஸ்ரீராம் கல்லூரியில் வணிகவியல் இளங்கலை பட்டத்தை பெற்றார். தில்லி பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பு பயின்றார்.
ஹார்வர்ட் சட்ட கல்வி நிறுவனத்தில் எல்.எல்.எம் படித்த நாரிமன், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியால் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.
நாரிமனின் திறமையை அங்கீகரித்த, அப்போதைய உச்ச நீதிமன்ற நீதிபதி வெங்கடாச்சலையா, வயது வரம்பு விதிகளை மாற்றி, அதாவது உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞராக நியமிக்க குறைந்தபட்ச வயதுத் தகுதி 45 வயதாக இருந்தபோது, 37 வயதிலேயே மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.
2014 ஜூலை ஏழாம் தேதி முதல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணிபுரிந்து வருகிறார் நீதிபதி ரோஹிங்டன் ஃபலி நாரிமன்.
யூ.யூ.லலித்
1957 ஆம் ஆண்டு நவம்பர் ஒன்பதாம் தேதி பிறந்த உதய் உமேஷ் லலித், 1983 ஆம் ஆண்டு வழக்கறிராக தனது பணியை தொடங்கினார். 1985 வரை மும்பை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றிய அவர், 1986 முதல் தில்லியில் தனது பணியைத் தொடர்ந்தார். 2004 ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞரானார்.
பல வழக்குகளின் 'நீதிமன்றத்தின் நண்பனாக' பங்களித்திருக்கும் யூ.யூ.லலித், உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி, 2-ஜி அலைக்கற்றை (ஸ்பெட்க்ரம்) வழக்கில் சி.பி.ஐயின் சார்பில் சிறப்பு அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.
2014, ஆகஸ்ட் 13 முதல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியைத் தொடங்கினார் யூ.யூ.லலித். 2022 நவம்பர் எட்டாம் தேதியன்று அவர் பதவி ஓய்வு பெறுவார்.
நீதிபதி அப்துல் நஜீர்
1958 ஆம் ஆண்டு ஜனவரி ஐந்தாம் தேதியன்று கர்நாடக மாநிலத்தில் பிறந்தவர் நீதிபதி அப்துல் நஜீர்.
1983 ஆம் ஆண்டு முதல் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றத் தொடங்கிய அப்துல் நஜீர், 2003 ஆம் ஆண்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
2004 ஆம் ஆண்டு கர்நாடக உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக அப்துல் நஜீர் நியமிக்கப்பட்டார்.
இந்திய நீதித்துறை வரலாற்றிலேயே, எந்தவொரு உயர் நீதிமன்றத்திலும் தலைமை நீதிபதியாக பதவி வகிக்காமல், நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட மூன்றாவது நீதிபதி அப்துல் நஜீர் ஆவார். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார் அப்துல் நஜீர்.
இக்பால் அஹமத்
Thanks to BBC News - 11.05.2017
No comments:
Post a Comment