disalbe Right click

Wednesday, May 17, 2017

இடையூறாக உள்ள ஆட்டோ ஸ்டாண்டை முன்னறிவிப்பின்றி அகற்றலாம்:

பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள நடைபாதை ஆட்டோ ஸ்டாண்டை முன்னறிவிப்பின்றி அகற்றலாம்:
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை ஆவடியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் காந்திராஜ், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘‘ஆவடி அரசு பேருந்து பணிமனைக்கு பின்புறம் அண்ணா சிலை அருகே ஆட்டோ ஸ்டாண்டு வைத்துள்ளோம். எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் இதை அகற்றும் நடவடிக்கையில் காவல்துறையும், ஆவடி நகராட்சியும் ஈடுபட்டுள்ளன. இந்த நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்’’ என்று கோரியிருந்தார்.
உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோரைக் கொண்ட முதல் அமர்வு முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்கறிஞர் எம்.கே.சுப்பிரமணியம் ஆஜராகி, பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடை யூறு செய்யும் வகையில் ஆட்டோ ஸ்டாண்டு அமைத்துள்ளதாக கூறினார்.
அண்ணா சிலை அருகே ஆட்டோக்களை நிறுத்திக் கொள்ள காவல்துறையினர் அனுமதி அளித்திருப்பதாகக் கூறிய மனுதாரரின் வழக்கறிஞர், அதற்கான ஆவணத்தை தாக்கல் செய்தார்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:
பொதுமக்கள் பயன்படுத்தும் நடைபாதையை வழிமறித்து பொதுமக்கள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆட்டோ ஸ்டாண்டு அமைக்க மனுதாரருக்கு உரிமை இல்லை. தவிர, அங்கு அதிகபட்சம் 5 ஆட்டோக்களை சுழற்சிமுறையில் நிறுத்திக்கொள்ளவே காவல்துறை அனுமதி அளித்துள்ளது. அந்த இடத்தில் ஸ்டாண்டு அமைக்க அனுமதிக்க முடியாது.
பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக நடைபாதையில் ஆட்டோ ஸ்டாண்டு அமைத்தால், அதை முன்னறிவிப்பு இல்லாமல் அகற்ற காவல்துறையினருக்கும், நகராட்சி அதிகாரிகளுக்கும் உரிமை உள்ளது’’ என்று கூறி, மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 17.05.2017

No comments:

Post a Comment