disalbe Right click

Monday, May 29, 2017

சட்டம் படிக்க வயது தடையில்லை!

சட்டம் படிக்க வயது தடையில்லை!
தமிழகத்தில், சட்ட படிப்பில் சேருவதற்கான வயது வரம்பை நீக்கி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை, மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி, செங்கல்பட்டு, வேலுார், விழுப்புரம், தர்மபுரி, ராமநாதபுரம் ஆகிய இடங்களில், அரசு சட்டக் கல்லுாரிகளும், சென்னையில் சீர்மிகு சட்ட கல்லுாரியும் செயல்படுகின்றன.
இவற்றில், எல்.எல்.பி., மூன்று ஆண்டு படிப்பு; பி.ஏ., - எல்.எல்.பி., ஐந்து ஆண்டு; எல்.எல்.பி., 'ஹானர்ஸ்' படிப்புகளில், மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இந்த படிப்புகளில், எந்த வயதினரும் சேரலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், பிளஸ் 2 முடித்தவர் முதல், 100 வயது முதியோர் வரை, சட்டம் படிக்கலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. 40 வயதுக்கு மேற்பட்டவர்கள், சட்டம் படிக்க விருப்பப்பட்டு, முடியாமல் போயிருக்கலாம். அவர்களுக்கும், வழக்கறிஞர் கனவை நிறைவேற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
கடந்த ஆண்டு வரை, ஐந்தாண்டு படிப்புக்கு, 20; மூன்றாண்டு படிப்புக்கு, 30 வயது என, உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், பஞ்சாப், ஹரியானா உயர் நீதிமன்ற உத்தரவுகளால், இந்திய பார் கவுன்சில், வயது வரம்பை நீக்கியது.
உச்ச நீதிமன்றம் தள்ளுபடி:
அதை பின்பற்றி, 'சட்டம் படிக்க, வயது தடையில்லை' என,தமிழக அரசு, 2016ல் அறிவித்தது. அதற்கு, மதுரை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. தடையை எதிர்த்து, பார் கவுன்சில் தொடர்ந்த வழக்கை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதனால், பார் கவுன்சில் மீண்டும் வயது உச்ச வரம்பை, அமலுக்கு கொண்டு வந்தது.
பார் கவுன்சில் உத்தரவை எதிர்த்து, 2016 செப்டம்பரில், ரிஷப் துகால் என்பவர் உட்பட, இரண்டு பேர், உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது, வயது உச்சவரம்பை நீக்கி, உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை தொடர்ந்தே, வயது வரம்பு இல்லாமல், அனைவரும் சட்டம் படிக்கலாம் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
எங்கே; எப்போது?
* அரசு கல்லுாரிகளில் சேர, அந்தந்த கல்லுாரிகளிலும், சென்னை, கிரீன்வேஸ் சாலை, சட்டப்பல்கலை பதிவாளர் அலுவலகத்திலும், விண்ணப்பங்களை நேரில் பெறலாம். சீர்மிகு சட்டக் கல்லுாரியில் படிக்க, சென்னை, அடையாறில் உள்ள, பல்கலை வளாகத்தில் மட்டுமே, விண்ணப்பங்கள் வழங்கப்படும்
*
அரசு கல்லுாரிகளில், பி.ஏ., - எல்.எல்.பி., படிப்புக்கு, ஜூன், 2 முதல், 23 வரை விண்ணப்பங்கள் பெறப்படும். மூன்றாண்டு எல்.எல்.பி., படிப்புக்கு, ஜூன், 7 முதல், 17 வரை, விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கலாம்
* சீர்மிகு சட்டக் கல்லுாரியில், பி.ஏ., - பி.பி.ஏ., - பி.காம்., - பி.சி.ஏ., படிப்புகளுடன் சேர்ந்து, எல்.எல்.பி., ஹானர்ஸ் ஐந்தாண்டு மற்றும் மூன்றாண்டு மட்டும் படிக்க, ஜூன், 31 முதல், விண்ணப்பங்கள் கிடைக்கும்
*
எல்.எல்.பி., ஹானர்ஸ் மூன்றாண்டு படிப்புக்கு, ஜூன், 19 வரையிலும், ஐந்தாண்டு படிப்புக்கு, ஜூன், 30 வரையிலும், விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்
*
எல்.எல்.எம்., மற்றும் தொலைநிலையில், எம்.சி.எல்., முதுநிலை டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புக்கு, ஜூன், 12 முதல், ஜூலை, 28 வரை விண்ணப்பங்கள் கிடைக்கும்.
இதுகுறித்து, கூடுதல் விபரங்களை, http:/tndalu.ac.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 30.05.2017


No comments:

Post a Comment