disalbe Right click

Monday, May 15, 2017

பெண்களின் சொத்துரிமையும், திருமண ஒப்பந்தங்களும்


பெண்களின் சொத்துரிமையும், திருமண ஒப்பந்தங்களும்

இன்று ஆணும் பெண்ணும் ஓரளவிற்கு மன முதிர்ச்சி அடைந்த பிறகே திருமணம் செய்து கொள்வதால், சமீப காலங்களாக, திருமணத்தை ஒரு ஒப்பந்தமாகப் பார்க்கும் பழக்கமும், அதன் அடிப்படையில் மேலை நாடுகளைப் போலவே, இந்தியாவிலும், திருமண ஒப்பந்தங்கள் போட்டுப் பதிவு செய்து கொள்வதும் புழக்கத்தில் வர ஆரம்பித்துவிட்ட்து. ஆகவே, சராசரி மக்களும் இது குறித்து அறிந்து கொள்வதும், இது பற்றிப் பேச வேண்டிய நேரமும் நெருங்கி விட்டது.திருமண ஒப்பந்தம் என்பது, திருமணத்திற்கு ஆகும் செலவு முதல், திருமணத்தின் பின், இணைந்து வாழும் தாம்பத்ய வாழ்க்கையில் ஆகும் செலவுகளும், ஒரு வேளை பிரிய நேர்ந்தால், எவருக்கு எந்த சொத்து உரிமையானது என்பது பற்றியும், ஒருவர் இறந்தால் அடுத்தவர் அந்த சொத்தை என்ன செய்ய வேண்டும் என்பது வரை திட்டமிட்டு, அதை ஒப்பந்தமாகப் பதிவு செய்வதும் ஆகும். இதில் ஆண் பெண் இருவரின் கடமைகளும், உரிமைகளும் இடம் பெறும்.
ஒப்பந்தம் தேவையா?
இந்தியாவில் இந்த வழக்கம் ஆரம்பித்திருக்கிறது என்றாலும், இங்கே, திருமணம் என்பது தனிப்பட்ட இரு நபர்களின் இணைவாகப் பார்க்கப்படாமல், குடும்ப இணைப்பாகவும், சமூக நிகழ்வாகவும் பார்க்கப்படுவதால், இது போன்ற திருமண ஒப்பந்தங்கள் போட்டுக் கொள்வதில் சிக்கித்தான் நிற்கிறது.
இந்திய வழக்கத்தில் இந்த ஒப்பந்த முறை வருமாயின், அதை எந்த அளவுக்கு அனுமதிக்கலாம், அப்படி அனுமதிக்கும் விசயங்களில் என்னென்ன மாறுதல்கள் தேவை அல்லது எவ்வெவற்றை நாம் சட்டபூர்வமாக மாற்ற வேண்டும் என்பதை அலசுவதே இக்கட்டுரையின் நோக்கம்.
இஸ்லாமிய திருமணங்களில் அவை ஏற்கனவே ஒப்பந்தம் போலவே பாவிக்கப்படுகிறது. கிறித்தவர்களிடையேயும் ஓரளவிற்கு இதே நிலை. இந்து திருமணங்களில் தான் திருமணம் என்பது ஜன்ம பந்தம் என்பது போன்ற நம்பிக்கைகள் நிலவுவதால், அதை ஒட்டி எழுந்து, பின் மாற்றங்களுடன் உருவாக்கப்பட்ட இந்து சட்டங்கள்ஆனதால், திருமண ஒப்பந்தங்களுக்கு ஏற்ப தம்மை மறுபரிசீலனை செய்ய வேண்டி இருக்கிறது. அது மட்டுமன்றி, இந்து திருமண பந்த்த்தில் சாத்திரம் எனும் பெயரில் நிலவும் பாரபட்சமும் களையப்பட வேண்டி இருக்கிறது. அதற்கு இந்த ஒப்பந்தங்கள் ஓரளவுக்கு உதவுகின்றனதான்.
திருமணச் செலவுகள்
இந்திய திருமணத்தைப் பொருத்த வரையில், குறிப்பாக தமிழக இந்து திருமணத்தைப் பொருத்த வரையில், பெண்ணின் பெற்றோரே திருமணத்தின் முழு செலவையும் ஏற்கின்றனர்.அவளின் திருமண செலவானது, அந்த குடும்பத்தின் அந்தஸ்தை வைத்தே முடிவு செய்யப்படுகிறது. இங்கே திருமணச் செலவு என சொல்லப்படுவதில் அவளுக்கு தொகையாகவோ நகையாகவோ கொடுக்கப்படும் சொத்துக்கள் அல்லாமல், திருமணத்தை எந்த மண்டபத்தில் நடத்துவது, எத்தனை பேரை அழைப்பது, பத்திரிகை, உணவு, போன்றவற்றை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டால், அது அந்த குடும்பத்தின் அந்தஸ்தைப் பிரதிபலிப்பதாகவே இருப்பதாக நினைக்கப்படுகிறது.பின் ஒரு நாளில், அந்த குடும்பத்தின், அதாவது அவளின் பெற்றோரின் சொத்தானது பிள்ளைகளுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்டால், குடும்ப அந்தஸ்துக்காக செலவழிக்கப்பட்ட தொகையும், அவளின் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
உயில் எழுதாமல் பெற்றோர் இறந்தால்...?
உதாரணமாக ஒரு பெண், இரண்டு ஆண் குழந்தைகள் ஒரு குடும்பத்தில் இருக்கிறார்கள் எனில், பெற்றோர் இருவரும் உயில் எழுதாமல் இறந்திருந்தால், பெற்றோரின் சொத்து மூன்றாகப் பிரிக்கப்பட்டு, அதில் பெண்ணிற்கு ஏற்கனவே கொடுத்த தொகை மற்றும் நகை போன்றவற்றிற்கான தொகை பெண்ணின் கணக்கில் இருந்து கழிக்கப்பட்டு, அதன் பின் உள்ள தொகை பகிரப்பட வேண்டும். ஆனால், உண்மையில் அவளுக்கான தொகையில் , மொத்த குடும்பத்தின் அந்தஸ்திற்காக செலவழித்த தொகையும் அதாவது கல்யாண செலவும், கழிக்கப்படுகிறது. உண்மையில் அந்தத் தொகை அவள் கைக்கு வந்திருக்கவே இல்லை. அவள் கைக்கு வராத தொகை அவள் கணக்கில் இருந்தே எடுக்கப்படுகிறது. அது போலவே, அவளின் கைக்கு வராமலேயே, அவள் செலவாகவே, பிள்ளை பிறப்புச் செலவு, அந்த விசேசங்களுக்கு செலவழிக்கப்படும் தொகையும். புது குடும்பம்:
மனைவியின் பங்கு...?
அதே போல, உயில் ஏதும் எழுதாமல், ஒருவன் இறந்துவிட்டால், அவனின் சொத்தானது, அவனது மனைவிக்கும், குழந்தைகளுக்கும் சம பாகங்களாக பிரித்துக் கொடுக்கப்படும். மனைவியும், இரு பிள்ளைகளும் இருந்தால், மொத்த சொத்தும் மூன்றாகப் பிரிக்கப்பட்டு, அதில் ஒரு பங்கு மனைவிக்கு வரும்.உண்மையில் அந்த சொத்தை சம்பாதிக்க அவளின் உழைப்பும் அதில் இருந்திருக்கிறது. ஒரு வீட்டில், உணவுக்கானவற்றைப் பெற்றுவருதல், அப்படிப் பெற்று வந்தவற்றை உணவாக மாற்றுதல் என இரு வேலைகளே முதன்மையானவை. அதில் பிள்ளை பெறுதல் போன்ற வேலைகள் பெண் மட்டுமே செய்ய முடியும் என்பதால், அவள் வீட்டில் இருந்தபடி, பொருட்களை உணவாக மாற்றும் சமையல் வேலையையும், அதனாலேயே, மற்றொரு வேலையான உணவை சம்பாதித்து வரும் வேலையை ஆணும் கைக்கொள்கிறார்கள். குடும்பத்தின் மொத்த வேலைகளை ஆணும் பெண்ணும் பகிர்ந்து கொள்கிறார்கள். அவள் சமைத்த உணவு அவளுடையது அல்ல. அந்தக் குடும்பத்தினுடையது. அது போலவே அவன் சம்பாதித்தது அவனுடையது அல்ல. அந்தக் குடும்பத்தினுடையது. அந்த இருவர் ஆட்சியின் குடிமகன்களே பிள்ளைகள், பெற்றோர் எல்லாம்.அப்படி இருக்க, அவன் இறந்துவிட்டால், அந்த சொத்து முழுவதுமே அவளுடையது மட்டுமே. (இன்றைய சட்டம் அப்படிப் பார்க்கவில்லை)
பெற்றோர்கள்?
ஆம். அந்த சொத்தில் அதாவது, அவளும் அவனும் இணைந்து சம்பாதித்த சொத்தில், அண்டி வாழும் நிலையில் இருக்கும் அந்த இருவரின் பிள்ளைகளும், அந்த இருவரின் பெற்றோர்களும் உதவி பெறத்தக்கவர்களே ஆவார்கள். கவனிக்க..இங்கு குறிப்பிடப்பட்டிருப்பது ”இருவரின் பெற்றோருமே.”ஆனால், உண்மையில், அந்த ஆண்/பெண் இருவரின் சம்பாதித்த சொத்தானது, அவனின் சொத்தாகவே கொள்ளப்பட்டு, அந்த சொத்தில், அவனின் மனைவி, அவனின் பெற்றோர், குழந்தைகள் மட்டுமே பெற முடிகிறது. அவளின் சம உழைப்பு அங்கு கவனிக்கப்படுவதே இல்லை. காரணம் நம் இந்திய மனங்களில், ஒரு திருமணம் என்பது ஒரு ஆண் பெண் -னின் இணைப்பு, ஒரு ”புது குடும்ப உருவாக்கல்” எனும் எண்ணம் இல்லாமல், பெண் வந்து ஆணின் குடும்பத்தோடு இணைவதாகவே பதிந்திருப்பதே காரணம்.இறந்த ஒருவனின் சொத்தில் மனைவிக்கு, ”அவனின் பெற்றோருக்கு”, அவனின் பிள்ளைகளுக்கு என ஆளுக்கு ஒரு பங்கு சமமாகப் பிரித்துக் கொடுக்கப்பட்டுவிட்டால், அங்கே கணக்கு முடிக்கப்படுவதாகவே பொருள். கமிட்மெண்ட் ஏதும் இல்லை என்றாகிவிடுகிறதல்லவா?
விவாகரத்து:
திருமணம் ஆன ஒரு தம்பதி விவாகரத்து செய்து கொள்கிறார்கள் எனில், அந்த விவாகரத்தின் பின் அதுவரை அவர்கள் சம்பாதித்த அவர்களின் சொத்தைப் பகிர்வதில் பெரும் சிக்கல்களைச் சந்திக்க நேர்கிறது.இருவரும் சேர்ந்து சம்பாதித்த சொத்தில், எவர் பெயரில் சொத்து இருக்கிறதோ அதை அவர் எடுத்துக் கொள்ள இயலாது. ஏனெனில், அது கூட்டு சம்பாத்தியம். அநேக சமயங்களில் சொத்துக்கள் ஒருவரின் பெயரில் மட்டுமே வாங்கப்படுகின்றன. அது பெரும்பாலும் அந்த வீட்டின் ஆணின் பெயரில். பெண்ணின், பிறந்த வீட்டில் அவளுக்கு கொடுக்கப்பட்ட நகைகளை வைத்து வாங்கிய சொத்து என்றால்தான் அது அவள் பெயரில் கிரயம் ஆகிறது. இது சரிதான். அதே போல, அவனின் பெற்றோர் அவனுக்குக் கொடுத்த சொத்தில் இருந்து வாங்கிய வீடு எனில் அவன் பெயரில் கிரயம் ஆகிறது. இதுவும் சரிதான். ஆனால் அவர்கள் இருவரும் சேர்ந்து சம்பாதித்த சொத்து?
ஒப்பந்த விவரங்கள்
இந்த இடத்தில்தான் மேலைநாட்டு சட்டமும், சில இஸ்லாமிய சட்டங்களும் ஒப்பந்த வடிவில் இன்று புழக்கத்தில் வர ஆரம்பித்திருக்கின்றன. இந்த ஒப்பந்தங்களில் திருமண செலவு, ஆண்/பெண் இருவரின் பொறுப்பும். அதை அவர்கள் தமது பெற்றோரிடமிருந்து பெறுகிறார்களா? அல்லது கடனாக வாங்குகிறார்களா? சம்பாதிக்கிறார்களா? என்பது அவர்கள் பிரச்சனை. ஒப்பந்தப்படி, திருமண செலவில் எதை எவர் செய்வது என்பது முடிவாகிறது. அதன் பின் அவர்கள் இருவரும் சம்பாதிக்கும் சொத்துக்கள் இருவரும் சேர்ந்திருந்தால் எப்படி அனுபவிப்பது, பிரிந்தால் எப்படி பிரித்துக் கொள்வது? ஒருவர் இறந்தால் அந்த சொத்தில் மற்றவருக்கு எந்த அளவுக்கு பாத்தியதை? என எல்லாமும் தெளிவாக குறிப்பிடப்படுகிறது. இஸ்லாத்தில், பெண்ணுக்கு ஆண் தரும் மஹர் தொகையானது, அவளுக்கு அவள் கணவன் தர வேண்டிய கடன் தொகை போலவே பாவிக்கப்படுகிறது. கணவனுடன் அவள் சேர்ந்து வாழ்ந்திருக்கையிலேயே, கணவனானவன், மனைவிக்குத் தர வேண்டிய மகர் தொகையைத் தந்திருக்காவிடில், அந்த்த் தொகையை கடனை வசூலிப்பது போல மனைவி வழக்கிட்டும் கூட வசூலிக்கலாம்.அது போலவே இந்த ஒப்பந்தங்களிலும், ஒருவர் மற்றவருக்குத் தர வேண்டிய கடப்பாடுகள் எவையும் இணைந்து வாழ்கையிலும் கடன் தொகை போலவே பாவிக்கப்படுகிறது.
பிள்ளையில்லா விதவை இறந்தபின்?
இந்து சொத்துரிமைச் சட்டத்தின்படி, பிள்ளை இல்லாத ஒரு விதவை தம் கணவனிடமிருந்து பெற்ற சொத்துக்கள், அவளது கணவனின் சகோதரர்களின் சொத்தாக அவன் பக்கம் மட்டுமே பிரிக்கப்படும். அதாவது, பிள்ளையில்லாத தம்பதிக்கு, கணவனின் குடும்ப சொத்து, தவிர, அவர்கள் இருவரும் சேர்ந்து இருந்த மண வாழ்க்கையில் சம்பாதித்த சொத்தானது, அந்த தம்பதி இருவருமே இறந்ததும், உயில் ஏதும் எழுதிவைக்காவிட்டால், அது அந்த ஆணின் சகோதர,சகோதரிகள் வசமே சென்றுவிடும். இதுதான் இப்போது நிகழ்வது. உண்மையில் அதில் அவளின் உழைப்பு?விதவையின் உயிலில்லா சொத்து:கணவனின் இறப்பிற்குப் பின் அவன் அந்த சொத்தை தன் மனைவிக்கு எழுதி வைக்கிறான். இந்நிலையில் அந்த சொத்தை அனுபவித்துவந்த மனைவியும், இறக்கிறாள் எனில், அந்த சொத்தானது, அவனது பிள்ளைகள் தவிர அவனது பெற்றோருக்கும் பங்காக பிரிக்கப்படுகிறது. இந்த சூழலில், அந்த மனைவி தம் பெற்றோரைப் பாதுகாத்து வந்திருந்தால் கூட இன்றைய நிலவரப்படி, அந்த சொத்தில் அவளின் பெற்றோருக்கு உரிமை இல்லை.
சட்டத்தில் இல்லாத அம்சம்
அதாவது, ஒரு குடும்பத்தில் அண்டி வாழும் நிலையில் உள்ள பிள்ளைகளுக்கு உள்ள உரிமை போலவே, ஆணின் பெற்றோருக்கும் சொத்துரிமை போய்ச் சேர்கிறது. மூத்தோர் பாதுகாப்புச் சட்டப்படி, பெண்ணுக்கும் தம் பெற்றோரைப் பாதுகாக்கும் கடமை இருப்பதைப் போலவே, அவர்களுக்கும் அந்த சொத்தில் உரிமை உண்டு எனினும் அது சட்டத்தால் தரப்படவில்லை என்பதே இன்றைய நிஜம். காலம் மாற மாற, சமூக சிந்தனைகள் மாற மாற சட்டமும் அதற்கேற்ப தன்னை மாற்றியே வருகிறது. ஆனால், ஆண்/பெண் உறவு முறை திருமணம் போன்றவற்றில் தம்மை மாற்றிக்கொள்ள சட்டத்திற்கு அதிக காலம் ஆவதாலேயே இது போன்ற ஒப்பந்தங்கள் மக்களுக்குள் புழக்கத்தில் வர ஆரம்பித்திருக்கிறது.இந்திய சமூகத்தில் திருமண ஒப்பந்தங்கள் வெல்லுமா? சட்டங்கள் உடனிருக்குமா?
- ஹன்ஸா ஹன்ஸா(வழக்கறிஞர்)Legally.hansa68@gmail.com
நன்றி : தினமலர் நாளிதழ் - 03.12.2016

No comments:

Post a Comment