தமிழக அமைச்சர் காமராஜ் மீது மோசடி புகார், எப்.ஐ.ஆர் பதிவு
மோசடிப் புகாரின்
பேரில் அமைச்சர் காமராஜ் மீது மன்னார்குடி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு
தமிழக
உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மீது மன்னார்குடி காவல் நிலையத்தில் சட்டப் பிரிவுகள்
420 (மோசடி), 506/1(மிரட்டல் விடுத்தது) ஆகியனவற்றின்
கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த வழக்கு
எந்தத் தேதியில் பதிவு செய்யப்பட்டது என்பது குறித்து உறுதியான தகவல் இல்லை.
மன்னார்குடியில் போலீஸ்
உயர் பதவிகள் பல நிரப்பப்படாமல் உள்ளதால் இத்தகவலை உறுதிப்படுத்த மற்ற போலீஸார்
முன்வரவில்லை.
இருப்பினும், அமைச்சர்
காமராஜ் வழக்கு தொடர்பாக கடந்த 3-ம் தேதி முதல் டெல்லியில்
முகாமிட்டுள்ள டிஎஸ்பிக்கள் அறிவானந்தம், அருண்குமார்,
துணை ஆய்வாளர் கழனியப்பன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளனர் என்பது மட்டும் உறுதியாகியுள்ளது.
கைதாவாரா
காமராஜ்?
சட்டப் பிரிவு 420, சட்டப்
பிரிவு 506 /1 ஆகிய இரண்டுமே ஜாமீன் பெறக்கூடியவையே என்பதால்
அமைச்சர் காமராஜர் கைதாவார் என்று கூற முடியாது. அவர் ஜாமீன் பெற்று வழக்கை
எதிர்கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது.
காமராஜ் மீது
எஃப்.ஐ.ஆர். ஏன்?
சென்னையில் தனக்கு
சொந்தமான வீட்டில் குடியிருந்த ஆக்கிரமிப்பாளர்களை காலி செய்வதற்காக தமிழக உணவுத்
துறை அமைச்சர் காமராஜின் உறவினர் ராமகிருஷ்ணன் என்பவர் மூலம் ரூ.30 லட்சம்
பணத்தை அமைச்சர் காமராஜிடம் கொடுத்ததாகவும், ஆனால், சொன்னபடி வீட்டை காலிசெய்து தராததுடன், பணத்தையும்
திருப்பித் தராமல் தன்னை மிரட்டியதாகவும் கூறி, மன்னார்குடி
டிஎஸ்பியிடம் கடந்த 2015 மார்ச் 10-ம்
தேதி புகார் அளித்தார்.
பின்னர், அந்தப்
புகாரின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, உயர்
நீதிமன்றத்திலும், அதைத்தொடர்ந்து, உச்ச
நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழக காவல்துறை உடனடியாக அமைச்சர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்
என்று ஏப்ரல் 28-ம் தேதி உத்தரவிட்டது. தொடர்ந்து, மே 3-ம் தேதி நடைபெற்ற விசாரணையின்போதும் வழக்கு
பதிவு செய்ய முகாந்திரம் இருந்தும், வழக்கு பதியாதது ஏன் என
கேள்வி எழுப்பியதுடன், வரும் 8-ம்
தேதிக்கு வழக்கை தள்ளிவைத்து, அன்று இதுதொடர்பாக அறிக்கை
தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து கடந்த 3-ம் தேதி
மன்னார்குடி மன்னை நகரில் உள்ள குமாரின் வீட்டில் மன்னார்குடி போலீஸார் ஒரு சம்மனை
ஒட்டிவிட்டு சென்றுள்ளனர். அதேபோல, கீழ வாழாச்சேரியில் உள்ள
வீட்டிலும் சம்மன் ஒட்டப்பட்டது.
மன்னார்குடி டிஎஸ்பி
பெயரில் வழங்கப்பட்டுள்ள சம்மனில், "தாங்கள் அனுப்பிய மனுவின்
அடிப்படையில் தங்களிடம் (குமாரிடம்) விசாரிக்க வேண்டியுள்ளது. எனவே, மன்னார்குடி டிஎஸ்பி அலுவலகத்தில் மே 5-ம் தேதி
ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். தக்க பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது"
என குறிப்பிடப்பட்டிருந்தது.
குமார் ஆஜராவார்
என்பதற்காக மன்னார்குடி டிஎஸ்பி அலுவலகம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள்
வைக்கப்பட்டன. எனினும் அவர், நேற்று இரவு வரை வராததால், காத்திருந்த
போலீஸார் ஏமாற்றம் அடைந்தனர்.
இதுகுறித்து குமார்
தரப்பினர் கூறியபோது, "உச்ச நீதிமன்ற உத்தரவின்படி எஃப்ஐஆர் பதிவு
செய்யாமல், விசாரணைக்கு அழைத்திருப்பதில் வேறு நோக்கம்
உள்ளதாக தெரிகிறது. குமார் மீது போலீஸார் வேறு ஏதாவது வழக்குப் பதிவு செய்யவும்
வாய்ப்பு உள்ளது" என்றனர்.
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 06.05.2017
No comments:
Post a Comment