நீதிமன்றம் தானாகவே ஜாமீன் வழங்கலாமா?
உயர் நீதிமன்ற வழக்கறிஞர், யு.எம்.ரவிச்சந்திரன் கூறுகிறார்
சாதாரணமாக, ஒரு வழக்கில் ஒருவரை கைது செய்து, மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தும் போது, போலீஸ் தரப்பில், 'ரிமாண்ட்' அறிக்கை அளிக்க வேண்டும். அதை பரிசீலித்த பின், காவலில் வைக்கும்படி, மாஜிஸ்திரேட் உத்தரவிடுவார்.
சாதாரண குற்ற வழக்குகளில், 60 நாட்களிலும், கடுமையான குற்றங்கள் தொடர்பான வழக்குகளில், 90 நாட்களிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும். அதன்படி, மாஜிஸ்திரேட்டும், 60 நாட்கள், 90 நாட்கள் வரை, காவலை நீட்டிப்பு செய்யலாம்.
இந்த நாட்களுக்குள்
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்றால், அதன்பின் காவலை நீட்டிக்க முடியாது. காவல் நீட்டிப்பு செய்யும்படி, போலீஸ் தரப்பில் கோரவில்லை என்றாலும், மாஜிஸ்திரேட்டுக்குரிய அதிகாரத்தின்படி,
ஜாமினில் விடுவிக்க முடியும்.
ஜாமின் மனுவை, குற்றவாளி தரப்பில் தாக்கல் செய்யவில்லை என்றாலும், விசாரணைக்கு அவர் தேவையில்லாத பட்சத்தில், சிறையில் இருக்க வேண்டிய அவசியம் எழவில்லை. புலன் விசாரணை அதிகாரி, குற்றவாளியை காவலில் வைக்கும்படி கோராத போது, மாஜிஸ்திரேட், தனக்குரிய அதிகாரத்தை செயல்படுத்தி, ஜாமின் வழங்கி இருக்கலாம்.
விசாரணைக்கு குந்தகம் விளைவிப்பார்; சாட்சியங்களை கலைப்பார் என, கருதினால் மட்டுமே, ஒருவரை சிறையில் வைக்க முடியும். தனிமனித சுதந்திரம், ஒவ்வொருவருக்கும் அரசியலமைப்பு சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது.
கடந்த, 1984ல் நடந்த ஆசிரியர்கள் போராட்டத்தின்
போது, அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். 15 நாட்களுக்கு பின், காவல் நீட்டிப்புக்காக
ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, கோவையில், மாஜிஸ்திரேட்டாக நான் இருந்தேன்.
ஆசிரியர்கள், ஜாமினில் செல்ல விரும்பவில்லை. ஆனால், அவர்களை சிறையில் வைக்க நான் விரும்பவில்லை. அதனால், காவல் நீட்டிப்பு தேவையில்லை; சொந்த ஜாமினில் விடுவிக்கும்படி,
நான் உத்தரவிட்டேன்.
எனவே, சிறையில் இருப்பவர், ஜாமின் கோரவில்லை என்றாலும், அவரை ஜாமினில் விட, நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது. அது, அந்தந்த நீதிபதிகளைப் பொறுத்தது.
(ஜாமீனில் வெளிவரலாமா வைகோ? என்ற செய்தியில் இருந்து தலைப்புக்குத் தேவையானது மட்டும் எடுக்கப்பட்டுள்ளது.)
நன்றி : தினமலர் நாளிதழ் - 20.05.2017
No comments:
Post a Comment