disalbe Right click

Monday, May 29, 2017

ஜெயலலிதா, சசிகலா சொத்துகள் பறிமுதல்

சொத்துக்குவிப்பு வழக்கில் தொடர்புடைய
ஜெயலலிதா, சசிகலா சொத்துகள் பறிமுதல்
முதல்கட்ட நடவடிக்கைகளை தொடங்கியது தமிழக அரசு
6 மாவட்ட ஆட்சியர்களுக்கு அவசர உத்தரவு
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தொடர்புடைய சொத்து களை கையகப்படுத்தும் நடவடிக் கைகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது. இது தொடர்பாக சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1991-96ம் ஆண்டு காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், 4 பேருக்கும் தலா 4 ஆண்டு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மேலும், ஜெயலலி தாவுக்கு ரூ.100 கோடியும், மற்ற 3 பேருக்கும் தலா ரூ.10 கோடியும் அபராதம் விதிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை கடந்த பிப்ரவரியில் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
இந்நிலையில், வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் சொந்த மான 68 சொத்துகளை கைப்பற்று மாறு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட் டுள்ளது. மாநில அரசின் உத்தர வின்படி இந்த சொத்துகளைக் கைப்பற்றும் நடவடிக்கைகளை தொடங்குமாறு 6 மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககம் (டிவிஏசி) கடிதம் எழுதியுள்ளது. அதன் நகலை மாநில கண்காணிப்பு ஆணையருக்கும் அனுப்பியிருக்கிறது. இந்த 68 சொத்துகளின் இன்றைய மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என்று கண்காணிப்பு இயக்கக வட்டாரங்கள் தெரிவித்தன.
இது தொடர்பாக தமிழக அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:
நிலம், வீடு உள்ளிட்ட இந்த சொத்துகளை அடையாளம் கண்ட பிறகு மாவட்ட வருவாய் அதிகாரிகள் அந்தந்த இடங்களில், ‘இது தமிழக அரசுக்கு சொந்த மானது’ என்று அறிவிப்பு பலகைகளை வைப்பார்கள். சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக கைப் பற்றப்பட்ட இந்த சொத்துகள் தொடர்பாக எந்தவித பரிமாற்றத் தையும் அனுமதிக்கக் கூடாது என்று பத்திரப்பதிவுத் துறை அதிகாரிகளுக்கு மாநில அரசு உத்தரவு பிறப்பிக்கும்.
அபராதத்துக்கு ஈடு அல்ல
இந்த சொத்துகள், சம்பந்தப் பட்ட குற்றவாளிகள் செலுத்த வேண்டிய ரொக்க அபராதத்துக் கான ஈடு அல்ல. இந்த வழக்கில் மொத்தம் 128 சொத்துகள் கையகப் படுத்தப்பட்டாலும், விசாரணை நீதிமன்றம் அவற்றில் 68-ஐ மட்டும் பறிமுதல் செய்ய உத்தரவிட்டது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் முக்கியமான இடங்களில் இந்த சொத்துகள் உள்ளன. இவற்றின் கொள்முதல் விலை, 20 ஆண்டுகளுக்கு முந்தைய வழிகாட்டு மதிப்பு விலைக்கு இணையாக குறிப்பிடப்பட்டு இருந்தாலும் இன்றைய சந்தைய மதிப்புக்கு மிகமிகக் குறைவானதாகும். இனி இந்த சொத்துகளுக்கு தமிழக அரசுதான் உரிமையாளர். தமிழக அரசு விரும்பினால் இந்த சொத்துகளைத் தன்னுடைய பயன் பாட்டுக்கு வைத்துக்கொள்ளலாம். இல்லையென்றால் பொது ஏலத்தில் விற்று பணமாக்கிக் கொள்ளலாம்.
1991 ஜூலை 1-ம் தேதியில் ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் இருந்த சொத்துகள் மற்றும் ரொக்கத்தின் மொத்த மதிப்பு ரூ.2.01 கோடிதான் என்று சொத்துக்குவிப்பு வழக்கில் அரசுத் தரப்பு சுட்டிக்காட்டியது. ‘1991 ஜூலை 1-க்குப் பிறகு (1.7.1991 முதல் 30.4.1996 வரை) இவர்கள் இருவரின் சொத்துகளின் மதிப்பு மளமளவென்று உயர்ந்து கொண்டே போனது. ஜெயலலிதா (அரசிடம் ஊதியம் பெற்றதால் அரசு ஊழியர்) மற்றும் அவரைச் சேர்ந்தவர்கள் ரூ.66.65 கோடிக்கு சொத்துகளைக் குவித்தனர். அவர்களுடைய அறிவிக்கப்பட்ட வருவாய்க்கு இது பொருந்தாத சொத்துக் குவிப்பாகும்’ என்பது தான் அரசுத் தரப்பின் வாதம்.
இந்த வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், வருவாய்க்கு பொருந்தாத வகையில் குவிக்கப்பட்ட சொத்தின் அளவு ரூ.53.60 கோடி என்று நிர்ணயித்தது. அதன் அடிப்படை யில் குற்றம்சாட்டப்பட்ட ஜெயல லிதா உள்ளிட்ட 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதம், மற்ற மூன்று பேருக்கும் தலா ரூ.10 கோடி அபராதம் என்று தீர்ப்பு வழங்கியது.
குன்ஹா தீர்ப்பு செல்லும்
தண்டனையை எதிர்த்து ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்தது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல் முறையீடு செய்தது. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா அளித்த தீர்ப்பு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்தது.
குற்றம்சாட்டப்பட்ட 4 பேரின் வங்கிக் கணக்குகளில் உள்ள நிரந்தர வைப்புத் தொகை மற்றும் இதர ரொக்கக் கையிருப்பு ஆகிய அனைத்தையும் அரசுக்கு வழங்குமாறும், அவர்கள் செலுத்த வேண்டிய அபராதத்துக்கு அவற்றை ஈடு செய்யுமாறும் உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது. அப்படி செய்த பிறகும் அபராதத் தொகை முழுதாக வசூலாகவில்லை என்றால் கைப்பற்றப்பட்ட தங்க, வைர நகைகளை ரிசர்வ் வங்கி அல்லது பாரத ஸ்டேட் வங்கிக்கு விற்றோ அல்லது பொது ஏலத்தில் விற்றோ பற்றாக்குறையை சரி செய்ய வேண்டும். மீதமுள்ள தங்க, வைர நகைகளை தமிழக அரசு கைப்பற்றிக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தது.
6 நிறுவனங்கள்
வங்கிகளில் இருக்கும் ரொக் கத்தை பறிமுதல் செய்வதிலும் தங்க, வைர நகைகளை விற்பதி லும் ஊழல் தடுப்பு, கண்காணிப்பு இயக்ககத்துக்கு பங்கு எதுவும் கிடையாது. வழக்கில் தொடர் புள்ள லெக்ஸ் பிராப்பர்ட்டி டெவலப் மெண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட், மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ் பிரைவேட் லிமிடெட், ராமராஜ் அக்ரி ஃபார்ம்ஸ் பிரைவேட் லிமிடெட், சிக்னோரா பிசினஸ் என்டர்பிரைசஸ் (பி) லிமிடெட், ரிவர்வே அக்ரோ பிராடக்ட்ஸ் (பி) லிமிடெட், இந்தோ தோஹா கெமிக்கல்ஸ் பார்மசூட்டிகல்ஸ் லிமிடெட் ஆகியவற்றின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள அசையாச் சொத்துகள் அனைத்தையும் மாநில அரசு பறிமுதல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்ற ஆணையின் மூன்றாவது பகுதி கூறுகிறது.
இந்த 6 நிறுவனங்களுக்கான வருவாய் முழுவதும் குறிப்பிட்ட அந்தக் காலத்தில்தான் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெயரிலான நிறுவனங்களுக்கு வந்துள்ளன. இந்த நிறுவனங்கள் வியாபாரத்தில் தங்களுடைய பணம் எதையும் முதலீடு செய்யவில்லை என்பது விசாரணையின்போது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிறுவனங்கள் கணக்கில் வராத பெருந் தொகையை ஜெயலலிதா, சசிகலா வங்கிக் கணக்குகளில் மாற்றுவதற்கு பயன்பட்டுள்ளன.
இந்த நிறுவனங்களின் பெயர்களில் பதிவு செய்யப்பட்டுள்ள சொத்துகள் அனைத்தும் உண்மையில் வழக்கில் முதல் எதிரியாக குற்றம்சாட்டப்பட்டுள்ளவருக்காக (ஜெயலலிதா) உள்ளவை என்பதை விசாரணைகள் அடிப்படையில் பதிவு செய்கிறேன். எனவே, இந்த சொத்துகளை பறிமுதல் செய்ய உத்தரவிடுவதில் எந்தத் தடையும் இல்லை என்று விசாரணை நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருக்கிறார்.
ஜெயலலிதா பெயரில் உள்ள இதர சொத்துகள், அவரது சட்டப் பூர்வ வாரிசுக்கு போய்ச் சேரும். இல்லையென்றால் மாநில அரசால் கையகப்படுத்தப்படும். ஜெயலலிதா இறந்து விட்டதால் அவருக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு முடிவுக்கு வந்தாலும், சொத்துகளை கைப்பற்றுவதற்கு பிறப்பிக்கப்பட்ட ஆணை தொடர்கிறது.
சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் வங்கிக் கணக்குகளில் உள்ள பணத்தை, அபராதத்துக்கு ஏற்ப வசூலிப்பது தொடர்பாக கர்நாடக விசாரணை நீதிமன்றம் நடவடிக்கைகளைத் தொடங்கும். 6 நிறுவனங்களுக்குச் சொந்தமான சொத்துகளை பறிமுதல் செய்ததும் அதை விசாரணை நீதிமன்றத்துக்கு தமிழக அரசு தெரிவிக்கும்.
இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் – 30.05.2017



No comments:

Post a Comment