அங்கீகாரமற்ற மனைகள் பத்திரப்பதிவு - இடைக்கால அனுமதி
சென்னை:தமிழக அரசு கொண்டு வந்த புதிய விதிகளின்படி வீட்டுமனைகளை பத்திரப்பதிவு செய்ய நிபந்தனைகளுக்கு உட்பட்டு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால அனுமதி வழங்கி உள்ளது.
சென்னையைச் சேர்ந்த, வழக்கறிஞர் ராஜேந்திரன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் விளைநிலங்களை வீட்டுமனைகளாக மாற்றவும், அங்கீகாரமற்ற மனைகளை பத்திரப்பதிவு செய்யவும், தடை விதித்தது. தடையை நீக்கக்கோரி, 'ரியல் எஸ்டேட்' வணிகர்கள் மற்றும் தனிநபர்கள் மனுக்கள் தாக்கல் செய்தனர். அங்கீகாரமற்ற மனைகளை வரன்முறைப் படுத்தவும் நில பயன்பாட்டை மாற்றுவதற்கும் தமிழக அரசு புதிய விதிகளை கொண்டு வந்தது. அதை, அரசு பிளீடர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி M.சுந்தர் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் அய்யாதுரை, அரசு பிளீடர், எம்.கே.சுப்ரமணியன் ஆஜராகினர்.
மனுதாரரான வழக்கறிஞர் ராஜேந்திரன், ''நீதிமன்றம் தடை விதித்திருந்த காலத்தில், பத்திரப்பதிவு நடந்துள்ளது. அந்த அதிகாரிகள் மீது, நீதிமன்ற அவ மதிப்பு மனு தாக்கல் செய்ய, அனுமதிக்க வேண்டும்,'' என்றார்.
அதற்கு, அரசு பிளீடர்,எம்.கே.சுப்ரமணியன், ''தடை காலத்தில் நடந்த பத்திரப்பதிவு குறித்து, அரசு ஆய்வு செய்து வருகிறது. அது தொடர்பாக, அறிக்கை தாக்கல் செய்கிறோம்,'' என்றார்.
இதன்பின், முதல் பெஞ்ச் பிறப்பித்த இடைக்கால உத்தரவு:
பத்திரப்பதிவு சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தம் மற்றும் தமிழக அரசின் புதியவிதிகளின் படி, மனைகளை பதிவு செய்யலாம். நீதி மன்ற உத்தரவை மீறி,
2016 செப்., 9ல் இருந்து, 2017 மார்ச், 28 வரை; ஏப்., 21ல் இருந்து மே, 12 வரை, அங்கீகார மில்லாத மனைகளின் பத்திரப்பதிவு நடந்திருந்தால்,
அது செல்லாது.
புதிய விதிகளில், 2016 அக்., 20க்கு முன், அங்கீகாரமற்ற லே - அவுட்டில்,வீட்டு மனைகள் விற்கப்பட்டு பதிவு செய்யப்பட்டிருந்தால், அதற்கு, தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு சட்டப்பிரி வில் இருந்து, விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. இதை, அமல்படுத்தக் கூடாது.இந்த இடைக்கால உத்தரவு, 'ரிட்' மனுக்கள் மீதான இறுதி உத்தரவை பொறுத்தது. எனவே, மறுஉத்தரவு வரும் வரை, இது அமலில் இருக்கும்.
இடைக்கால உத்தரவை தொடர்ந்து நடக்கும் அனைத்து பத்திரபதிவுகளும், வழக்கின் இறுதி முடிவுக்கு கட்டுப்பட வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டுள்ளது. விசாரணை,ஜூன்,14க்கு தள்ளி வைக்கப்படுகிறது.
நன்றி : தினமலர் நாளிதழ் - 12.05.2017
No comments:
Post a Comment