போட்டுக்கொடுத்தாரா பல்லாவரம் நகராட்சி அதிகாரி?
ஆர்டிஐ ஆர்வலர்களைப் போட்டுக்கொடுத்தாரா பல்லாவரம் நகராட்சி அதிகாரி?
விதிமுறைமீறல்கள், முறைகேடுகள், ஊழல்கள் ஆகியவற்றை வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் ஆர்டிஐ எனப்படும் தகவல் அறியும் உரிமை ஆர்வலர்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர்.
கொடூரக் கொலை
சென்னையில் பாரஸ்மால் என்ற ஆர்டிஐ ஆர்வலர், கட்டட விதிமுறைகள் குறித்து ஆர்டிஐ மூலம் தகவல் கேட்டார். இந்தத் தகவல்கள் சம்பந்தப்பட்ட பில்டருக்குத் தெரிந்துவிட்டது.
இதையடுத்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் பாரஸ்மால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். ஆர்டிஐ மூலம் விண்ணப்பித்த தகவல்கள் சம்பந்தப்பட்ட பில்டருக்குத் தெரிந்தது எப்படி என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
விதிமுறை மீறல் கட்டடம்
இது ஒருபுறம் இருக்க குரோம்பேட்டை ராதா நகரிலுள்ள ஒரு குடியிருப்பில் கார் பார்க்கிங் பகுதிக்கு ஒதுக்கிய இடத்தில் கட்டடம் கட்டி இருக்கிறார்கள்.
இது குறித்து அந்தப் பகுதியிலுள்ள அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த டேவிட் மனோகரன் மற்றும் 5 பேர் பல்லாவரம் நகராட்சிக்கு ஆர்.டி.ஐ மூலம் தகவல் கேட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட கட்டடத்தில் பிளான், அப்ரூவல் நகல் ஆகியவற்றை அனுப்பும்படி கேட்டிருக்கின்றனர். ஏறக்குறைய பல மாதங்களுக்குப் பின்னும் ஆர்.டி.ஐ கேள்விகளுக்கு பல்லாவரம் நகராட்சி பொதுத்தகவல் அலுவலர் உரிய பதிலளிக்கவில்லை.
ஆர்வலர்களுக்கு மிரட்டல்
இந்த சூழலில் கடந்த ஏப்ரல் மாதம் ஆர்.டி.ஐ விண்ணப்பம் செய்த ஒருவரின் வீட்டுக்கு வந்த சிலர், 'என்ன எங்க பில்டர் பத்தி புகார் சொல்றீங்களா. தொலைச்சுப்புடுவோம். ஜாக்கிரதை' என்று மிரட்டிவிட்டுச் சென்றிருக்கின்றனர். ஆர்.டி.ஐ போட்ட இன்னொருவர் பெண். பெண்கள் விடுதியில் தங்கியிருந்து வேலைக்குச் சென்று வருகிறார். அவருடைய விடுதிக்குச் சென்ற சிலர், அந்தப் பெண்ணோடு தங்கியிருக்கும் இன்னொரு பெண்ணிடம் செல்போனை வாங்கி சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு போன் செய்தனர். 'என்னம்மா ஆர்.டி.ஐ-ல போட்டு கேள்வி கேட்கிறாயா? உனக்கு வேலை வெட்டி இல்லையா . இனிமேல் அதுமாதிரி எல்லாம் செய்யாதே' என்று மிரட்டி இருக்கின்னர். அதில் அந்தப் பெண் பயந்து போயிருக்கிறார்.
தகவல் எப்படி லீக் ஆகிறது?
இது குறித்து அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த டேவிட் மனோகரனிடம் பேசினோம்.
"நான் இந்த பகுதியில் உள்ள கட்டட விதிமுறைகள் குறித்த நிறைய மனுக்கள் செய்திருக்கிறேன். 12 கட்டடங்கள் விதிமுறையை மீறி இருப்பதாக சிஎம்.டி.ஏ வுக்குக் கடந்த 2015 டிசம்பரில்-ல் விண்ணப்பம் போட்டேன். அவர்கள் 12 கட்டடங்களை ஆய்வு செய்து பல்லாவரம் நகராட்சியிடம் நடவடிக்கை எடுக்கும்படி சொன்னார்கள். சி.எம்.டி.ஏ-விலிருந்து பல்லாவரம் நகராட்சிக்கு 4 முறை நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பி விட்டனர்.
ஆனால், அதன்பிறகும் 12 கட்டடங்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
இது மட்டுமில்லை. ஒரு குறிப்பிட்ட சாலையில் சாலை போடும் பணியில் விதிமுறை மீறல் இருந்தது தெரியவந்தது. அது குறித்து பல்லாவரம் நகராட்சியிடம், சாலை போடும் பணி யாருக்குக் கொடுக்கப்பட்டது என்று தகவல் கேட்டோம். உடனே அரசியல்வாதிகள், கவுன்சிலர், ஒப்பந்ததாரர்களிடம் சொல்லி விட்டனர். அவர்கள் வந்து எங்களை மிரட்டினர். மிரட்டி விட்டால், ஆர்.டி.ஐ போடமாட்டார்கள் என்று அவர்கள் கருதுகின்றனர். நீர் நிலைகள் ஆக்கிரமிப்புப் பற்றி கேட்டதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரி ஆக்கிரமிப்பாளர்களிடம் சொல்லிவிட்டார். அவர்கள் ஆர்.டி.ஐ மனுப்போட்டவரை மிரட்டினர். இப்போது, குரோம்பேட்டை ராதா நகரிலுள்ள கட்டடம் குறித்து மார்ச் 17-ம் தேதி ஒரு ஆர்.டி.ஐ போட்டேன். கட்டடத்தை முறையாக ஆய்வு செய்தீர்களா என்று கேள்வி எழுப்பியிருந்தேன். கட்டடத்தின் பிளான் நகல் தரும்படியும் கேட்டிருந்தேன்.
ஏப்ரல் 10 வரை பதில் வரவில்லை. இதே போல மேலும் 2 பேர் மனு செய்திருந்தனர்.
பதில் வரவில்லை என்பதால் அறப்போரிலிருந்து மேலும் 3 பேர் மனுப்போட்டனர் . 14-ம் தேதி வணிக வளாகத்தில் கட்டடம் திறக்கப்பட்டது. ஆர்.டி.ஐ போட்ட இரண்டு மிரட்டி இருக்கின்றனர்.
ஆர்.டி.ஐ விண்ணப்பம் குறித்த தகவல்களை யாருக்கும் தெரிவிக்கக் கூடாது என்பது விதிமுறை. ஆனால், பல்லாவரம் பொதுத் தகவல் அதிகாரிக்கு அனுப்பிய விண்ணப்பத்தில் இருந்த முகவரி எப்படி சம்பந்தப்பட்ட பில்டரிடம் கொடுக்கப்பட்டது. இது பொதுத்தகவல் அதிகாரியைத் தவிர வேறு யாரும் இது போல செய்திருக்க முடியாது. எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் புகார் செய்திருக்கிறோம்" என்றார்.
விசாரணை நடக்கிறது
இது குறித்து பல்லாவரம் நகராட்சி நகரமைப்பு திட்ட அலுவலர் சிவக்குமாரிடம் கேட்டோம்.
"ஆர்.டி.ஐ மனு செய்தவர் பற்றி நான் யாரிடமும் கூறவில்லை. அது தவறான தகவல். இது குறித்து புகார் கொடுத்திருக்கின்றனர். உயர் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். என்னுடைய தரப்பிலிருந்து அந்த தகவல் சொல்லப்படவில்லை. உரிய விசாரணைக்குப்
பின்னர்தான் யார் தவறு செய்தார்கள் என்பது தெரியவரும்" என்றார்.
கே.பாலசுப்பிரமணி
நன்றி : விகடன் செய்திகள் - 09.05.2017
No comments:
Post a Comment