14: திட்டத்தை எழுதுங்கள்!
இதுதான் தொழில் என்று முடிவு செய்துவிட்டீர்கள். ஓரளவு ஆராய்ச்சி செய்துவிட்டீர்கள். அடுத்தது என்ன? நல்ல தொழில் திட்ட அறிக்கை ஒன்று தயார் செய்யுங்கள். பிசினஸ் பிளான் எழுதுவது கடன் வாங்க மட்டுமல்ல. உங்கள் எண்ணத்தைத் தெளிவுபடுத்தவும்தான்.
இது பிசினஸ் பிளான் அல்ல!
என்னைப் பொறுத்தவரை பிசினஸ் பிளான் எழுதுவது திரைக்கதை எழுதுவது போலத்தான். மனதில் உள்ள கதையை நம் பார்வைக்குக் காட்சிவாரியாக வரிசைப்படுத்தித் தெளிவாகச் சொல்வது திரைக்கதை. அதே போல பிசினஸ் ஐடியாவைச் செயல்முறையில் வடிவமைத்துத் தேவைப்படும் அனைத்துத் தகவல்களையும் தெளிவாகச் சொல்வது பிசினஸ் பிளான்.
எதையும் யோசிக்கையில் சுலபமாக இருக்கும். பார்வைக்குப் பகட்டாக இருக்கும். உட்கார்ந்து எழுதினால் நிதர்சனங்கள் புலப்படும். “இந்த ஏரியாவில் செம்ம கூட்டம். ஒரு டிஃபன் சென்டர் போடலாம். ஒரு ஆள் 50 ரூபாய்க்குச் சாப்பிட்டாக்கூட ஒரு நாளைக்கு 20,000 ரூபாய்க்கு விற்பனையாகும். நல்ல லாபம் பார்க்கலாம்” என்று தோராயக் கணக்குப்போடுவது பிசினஸ் பிளான் அல்ல.
அடுக்கடுக்காகக் கேள்விகள்
எவ்வளவு முதலீடு தேவைப்படும்? எத்தனை தொழிலாளிகள் வேலைக்குத் தேவைப்படுவார்கள்? தொழிலாளிகள் தொடர்ந்து கிடைக்க என்ன வழி? செலவு போக லாபம் எவ்வளவு நிற்கும்? உங்களின் நேரடி மேற்பார்வை எவ்வளவு நேரம் தேவைப்படும்? நீங்கள் இல்லாவிட்டால் யார் பார்ப்பார்கள்? ஒரு வருடத்தில் எத்தனை நாட்கள் கடை இருக்கும்? போட்டியாளர்கள் யார்? கடை வாடகைக்கு உள்ளது என்றால் மாற்ற வேண்டிவந்தால் என்ன செய்ய? சாலையோரக் கடை என்றால் சாலை விரிவாக்கத்தில் அடிபடுமா? இந்தக் கடை சார்ந்த அனைத்து அரசாங்க விதிகளும் உங்களுக்குத் தெரியுமா? போட்ட முதலீடு எத்தனை மாதங்களில்/ வருடங்களில் திரும்பக் கிடைக்கும்?
வங்கிக் கடன் கிடைக்குமா? அதற்கான தகுதி உள்ளதா? அல்லது வேறு ஏற்பாடு என்ன? மாதந்தோறும் கட்ட வேண்டிய கடன் எவ்வளவு? வருமானத்தில் கடனும் செலவும் போனால் நிற்கின்ற லாபத்தில் குடும்பம் நடத்த முடியுமா? அதற்கு வேறு ஏற்பாடு செய்தால் அதன் பாதிப்பு உங்கள் தொழிலில்/ வாழ்க்கையில் உண்டா? எத்தனை வருடங்கள் இந்தத் தொழிலை நடத்த எண்ணம்? நிர்வாகத்தில் உங்களுடன் பங்கு கொள்ளப்போவது யார்? இந்தத் தொழிலை விட்டு அடுத்த தொழிலுக்குப் போக நினைத்தால் இதை நல்ல விலைக்கு விற்க முடியுமா? லாபத்துடன் வெளியேற முடியுமா?
இதை எல்லாம் நீங்களும் நினைத்து வைத்திருப்பீர்கள். ஆனால் எழுத்தில் நிரப்பப்பட்ட அறிக்கை உள்ளதா? எழுதியதை மாற்றலாம், திருத்தலாம். ஆனால் ஆதார அறிக்கை ஒன்று அவசியம் வேண்டும். இப்படி எழுதுவதால் பல நஷ்டங்களை ஆரம்பக் காலத்திலேயே தவிர்க்கலாம்.
சிற்றூரில் நடக்குமா?
சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒருவர் தொழில் ஆலோசனைக்கு வந்தார். ஒரு சின்ன ஊரில் திருமண ஒப்பந்தக்காரர் ஆக அவருக்கு ஆசை. முதல் உள்ளது. சொந்தமாக இடம் உள்ளது. தெரிந்த மக்கள். மனைவியும் ஒத்தாசையாக இருக்கிறார். சொந்தக்காரர்களின் திருமணங்களை நடத்திவைத்தாலே நல்ல காசு பார்க்கலாம் என்றார். திருமணம் சம்பந்தப்பட்ட அனைத்து நிகழ்வுகளையும் குறைந்த செலவில் செய்துதரலாம் என்றார். மண்டபம், பத்திரிகை, சாப்பாடு, அலங்காரம், ஃபோட்டோ, வீடியோ என்று கட்டு சாப்பாடு வரை செய்யலாம் என்று பட்டியல் இட்டார். பெரிய நகரங்களில் இது பெரிய இண்டஸ்ட்ரியாக வளர்ந்து வருகிறது. ஆனால் அவர் வசிக்கும் சிற்றூரில் நடக்குமா? அதனால் பிசினஸ் பிளான் எழுதச் சொன்னேன். ஒரு மாதம் கழித்து விரிவாக எழுதி வந்தார்.
எழுதும்போதே பல தெளிவுகள் வந்தது அவருக்கு. பெரிய ஆஃபீஸ் போட்டு வாடிக்கையாளர்கள் பிடிக்கலாம் என்ற எண்ணம் மாறியிருந்தது. முதலீடு பணமாக அதிகம் வேண்டாம். சரியான முயற்சிகள்தான் தேவை எனப் புரிந்துகொண்டார். பின்னர் நான் பரிசீலிக்கையில் அவர் தன் தொழிலை B2C (Business to Consumers), அதாவது நுகர்வோரை நேரடியாகத் தொடர்புகொண்டு செய்யும் வணிகம் மாடலில் வடிவமைத்திருந்தார். நான் B2B (Business to Business), அதாவது தொழில் நிறுவனங்களுடன் தொழில் புரிவது எனும் வணிகம் செய்யலாம் என்று சொன்னேன்.
மனமாற்றம் தொழிலைக் காப்பாற்றியது
கல்யாணம் முடிவான குடும்பங்கள்தான் வாடிக்கையாளர்கள் என்று நினைத்தவருக்குக் கல்யாண மண்டப முதலாளிகள்தான் (பல இடங்களில் மேலாளர்கள்தான்!) வாடிக்கையாளர்கள் என்பது புரியவந்தது. ஆஃபிஸுக்குக் கொடுத்த அட்வான்ஸைச் சந்தோஷமாகத் திருப்பி வாங்கிக்கொண்டார். கல்யாணத்துக்கு வேலை / சேவை செய்யும் அனைத்து வியாபாரிகளிடமும் தன் வியாபாரத்தை அறிமுகப்படுத்தினார். இந்த மாடலில் ஒரு ஊர் என்று சுருங்கத் தேவையில்லை என்று புரிந்து கொண்டு மாவட்டத்தில் உள்ள எல்லா மண்டபங்களுடனும் ஒப்பந்தம் போட்டார்.
தானே இறங்கி வேலை செய்து விலையைக் குறைக்க வேண்டும் என்ற நிலையிலிருந்து மாறித் தரமான சேவையைச் சற்று அதிக விலைக்குக் கொடுக்கலாம் என்ற நிலைக்குவந்தார். இந்த மன மாற்றம் அவர் தொழிலைக் காப்பாற்றியது. முதலாண்டு செலவுக்கு இரண்டு லட்சம் என்று எடுத்து வைத்திருந்தவர் ஒரு ப்ரீ பெய்ட் மொபைலையும் மோட்டார் பைக்கையும் வைத்து வெற்றிகரமாகத் தொழிலை ஆரம்பித்தார்.
தொழில் திட்டத்தை எழுதுங்கள். ஆயிரம் கேள்விகள் வரும். சில கேள்விகளுக்கு விடை தெரியும். பல கேள்விகளுக்கு விடை தெரியாது. ஆனால் இந்தக் கேள்விகளைத் தொழில் தொடங்கும் முன் கேட்பது நல்லது. ஒரு தொழில் இப்படித்தான் நடக்கும் என யாராலும் சொல்ல முடியாது. ஆனால் தொழில் பற்றிய முதலீட்டு முடிவுகள் எடுப்பதற்கு முன் ஆயிரம் கேள்விகள் கேட்டுத் தெளிவு பெறுவது நல்லது.
தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 09.05.2017
No comments:
Post a Comment