ஜி.எஸ்.டி வரி பற்றிய கேள்விகள் மற்றும் பதில்கள் - பாகம் : 1
சரக்குகள் மற்றும் சேவைகள் என இரண்டு பிரிவுகளின் அடிப்படையில் மட்டுமே வரி விதிப்பு இருக்கும். மாநிலத்துக்குள் நடக்கும் சரக்கு பரிமாற்றத்துக்கு சிஜிஎஸ்டி / எஸ்ஜிஎஸ்டி மற்றும் யுடிஜிஎஸ்டி என விதிக்கப்படும். மாநிலங்களுக்கு இடையே நடைபெறும் சரக்குகள் பரிவர்த்தனைகளின் மீது ஐஜிஎஸ்டி என விதிக்கப்படும்.
ஜிஎஸ்டி வரியை எப்படி செலுத்துவது?
நேரடி வரி விதிப்பு ஆணையத்தின் இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியாகவே வரியைச் செலுத்தலாம். ஆனால் இதன் மூலம் வரி மட்டுமே செலுத்த முடியும். அபராதம் மற்றும் பிற கட்டணங்களை செலுத்த முடியாது. அதேபோல ஆன்லைன் வழியாக செலுத்தப்பட்ட வரிகளை இன்புட் டேக்ஸ் கிரெட்டாக எடுத்துக்கொள்ளலாம். அவற்றை அவுட்புட் டேக்ஸ் செலுத்தலுக்காகவும் பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதிக்கப்படும். ஆனாலும், சிஜிஎஸ்டியின் இன்புட் டேக்ஸ் கிரெடிட்டை எஸ்ஜிஎஸ்டி வரிச் செலுத்தலுக்காகப் பயன்படுத்த முடியாது. அதாவது ஐஜிஎஸ்டி, சிஜிஎஸ்டி மற்றும் எஸ்ஜிஎஸ்டி என்ற வரிசையில்தான் பயன்படுத்த முடியும். வரி செலுத்துபவர் ரொக்கமாகவும் செலுத்தலாம். தவிர மின்னணு பரிவர்த்தனைகள் மூலம் ஆர்டிஜிஎஸ். என்இஎப்டி வழியாகவும், அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் மூலமாகவும் ஜிஎஸ்டியை செலுத்தலாம்.
ஜிஎஸ்டி வரியை மாதத்தில் எந்த நாட்களில் செலுத்த வேண்டும்?
ஒவ்வொரு வரி செலுத்துபவரும் மாதாந்திர அடிப்படையில் ஜிஎஸ்டியை தாக்கல் செய்ய வேண்டும். முதல் மாதத்தின் விற்பனையை அடுத்து வரும் மாதத்தின் 20ஆம் தேதியில் செலுத்த வேண்டும். பணமாக செலுத்துவதாக இருந்தால் முதலில் வங்கிக் கணக்கில் அவை வைப்பு வைக்கப்பட வேண்டும். வரி செலுத்தும்போது அதிலிருந்து செலுத்திக் கொள்ளலாம். ஒவ்வொரு வரி செலுத்து தலின்போதும் எடுக்கப்படும் தொகை பதிவு செய்யப்படும். உதாரணமாக மார்ச் மாதத்துக்கான வரி ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி செலுத்தப்பட வேண்டும். நிறுவனம் சார்பாக வரி செலுத்துவோர் காலாண்டு அடிப்படையில் வரி செலுத்தலாம்.
வரிக் கணக்கு தாக்கல் செய்து, வரிச் செலுத்தாமல் இருந்தால் என்ன ஆகும்?
இதுபோன்ற சமயங்களில் வரிக் கணக்கு தாக்கல் செய்ததாக எடுத்துக் கொள்ள சட்டம் அனுமதிக்கவில்லை. தாக்கல் செய்யப்பட்ட கணக்குக்கான முழு வரியையும் செலுத்தியிருந்தால் மட்டுமே அது ஏற்றுக்கொள்ளப்பட்ட வரித் தாக்கல் ஆகும். அந்த வரித் தாக்கலுக்கு மட்டுமே பொருட்களைப் பெறுபவர் இன்புட் டேக்ஸ் கிரெடிட்டை பயன்படுத்திக்கொள்ள முடியும். அதாவது வரிக் கணக்கு தாக்கல் செய்து முழு செல்ஃப்-அசெஸ்டு வரியையும் செலுத்தினால் மட்டுமே, பொருளைப் பெற்றவர் தாக்கல் செய்த வரிக்கான இன்புட் டேக்ஸ் கிரெடிட் வசதி ஏற்றுக்கொள்ளப்படும்.
அறக்கட்டளை மூலம் அளிக்கப்படும் பொருட்களுக்கு வரி செலுத்த வேண்டுமா?
எந்த பரிவர்த்தனையாக இருந்தாலும் வர்த்தக நோக்கில் மேற்கொள்ளும்பட்சத்தில் வழங்கப்படும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் வரி விதிக்கப்படும். ஆனால் வர்த்தக நோக்கம் இல்லாமல் அறக்கட்டளைகளுக்கு வழங்கப்படும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டியதில்லை. அதாவது கொடுக்கல் வாங்கல் என்பது வர்த்தக நடவடிக்கையாக இருக்கக்கூடாது.
ஜாப் ஒர்க் செய்யும் நிறுவனங்களுக்கு சரக்கை அனுப்பினால் ஜிஎஸ்டி வரி கணக்கிடப்படுமா?
விநியோகம் என்பது விற்பனை, இடமாற்றம் உள்ளிட்ட அனைத்தையும் உள்ளடக்கியதால் இது விநியோகமாகவே எடுத்துக் கொள்ளப்படும். எனினும் நிபந்தனைகளும் உள்ளன. வரி செலுத்தும் பணி அளிக்கும் நிறுவனம் அல்லது நபர் எவ்வளவு சரக்குகளையும் வரியின்றி ஜாப் ஒர்க் செய்யும் நபருக்கு அனுப்பலாம். அங்கிருந்தும் அது பிற ஜாப் ஒர்க் நபர் / நிறுவனங்களுக்கும் அதைக் கொண்டு செல்லலாம். வரி செலுத்துபவர் அந்த சரக்குகளை ஜாப் ஒர்க் முடிந்த பிறகு அந்த இடத்திலிருந்து அவை அனுப்பப்பட்ட 3 ஆண்டுகளுக்குள் திரும்ப எடுக்கும்போது வரி செலுத்த வேண்டும். அல்லது ஏற்றுமதிச் சரக்கு என்றால் வரி செலுத்தாமலோ திரும்ப எடுத்துக் கொள்ளலாம்.
ஜாப் ஒர்க் செய்யும் இடத்திலிருந்து சரக்குகள் நேரடியாக சப்ளை செய்யட்டால் அது யாருடைய வரிக் கணக்கில் வரும்?
ஜாப் ஒர்க் நிறுவனங்களின் கணக்கில் இது சேராது. அது பணி அளிக்கும் நிறுவனங்களில் கணக்கில்தான் வரும். எனினும் வேலையைச் செய்து முடிக்க ஜாப் ஒர்க் நிறுவனங்கள் பயன்படுத்தும் சரக்குகள் / சேவைகளின் மதிப்பும் பொருளில் சேரும் என்பதால், அந்த குறிப்பிட்ட பகுதி மட்டும் ஜாப் ஒர்க் நிறுவனங்களின் சேவையாக கணக்கிடப்பட்டு வரி கணக்கிடப்படும்.
பணி அளிப்பவரும், பணியை பெறுபவரும் வெவ்வேறு மாநிலமாக இருந்தால் எப்படி கணக்கிடப்படும்?
ஜாப் ஒர்க் பணிகளுக்கான சட்டப் பிரிவுகள் ஐஜிஎஸ்டி சட்டத்திலும் யுடிஜிஎஸ்டி சட்டத்திலும் உள்ளன. இதனால் குழப்பம் ஏற்பட வாய்ப்பில்லை. எனவே, பணி அளிக்கும் நிறுவனமும், அதை செய்து கொடுக்கும் நிறுவனமும் ஒரே மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில் இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. வெவ்வேறு மாநிலம் யூனியன் பிரதேசமாகவும் இருக்கலாம்.
ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்தபின் ஆரம்பத்தில் எழும் சந்தேகங்களை எப்படி தீர்ப்பது?
இதற்கு மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையம் பல்வேறு வகைகளில் வரி செலுத்துபவர்களுக்கு உதவி செய்கிறது. மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையத்தின் இணையதளத்தில் இது தொடர்பாக பல விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக வரி செலுத்துபவர்களில் சந்தேகங்களை இந்தி, ஆங்கிலம் தவிர பிராந்திய மொழிகளிலும் உள்ளன. ஆரம்ப சிக்கல்களுக்கு இவை தீர்வை அளிக்கும். மேலும் உதவி தேவையெனில் வரிஆணைய அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்.
தொடரும்..
- ஆடிட்டர். கோபால் கிருஷ்ண ராஜூ
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 23.06.2017
No comments:
Post a Comment