20 லட்சம் ரூபாய் வழிப்பறி... கடலூரை அதிரவைத்த 3 போலீஸ்காரர்கள்
கடலூரில் 20 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்த தலைமைக் காவலர்கள் மூன்றுபேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் காவல்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஜலாலுதீன் என்பவர் நேற்றிரவு ஆம்னி பேருந்தில் சென்னையிலிருந்து நாகப்பட்டினத்துக்கு 50 லட்ச ரூபாய் பணத்தைக் கைப்பையில் எடுத்துச் சென்றுள்ளார். கடலூர் ஆல்பேட்டை மதுவிலக்குச் சோதனைச் சாவடியில் காவலர்கள் அந்தப் பேருந்தைச் சோதனை செய்தனர். அப்போது ஜலாலுதீன் கைப்பையில் பணம் இருப்பதைக் கண்ட காவலர்கள் அவரைப் பேருந்தைவிட்டு கீழே இறக்கி விசாரணை செய்தனர்.
இது ஹவாலா பணம் தானே என்று ஜலாலூதீனை மிரட்டி 20 லட்ச ரூபாயைப் பறித்துக்கொண்டு, செல்போனையும் பறித்துக்கொண்டு அவரை விரட்டித்துள்ளனர். இதுகுறித்து ஜலாலுதீன், மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்தார். இதுதொடர்பாக விசாரணை செய்து வழிப்பறி செய்த மூன்று காவலர்களையும் இடைநீக்கம் செய்து மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து ஜலாலுதீன் வழக்கறிஞர் சுந்தர் கூறுகையில், 'ஜலாலுதீன் நாகப்பட்டினத்தில் வீடு வாங்குவதற்கு சென்னையிலிருந்து உறவினர்களிடம் 50 லட்ச ரூபாய் பணம் வாங்கி வந்துள்ளார். அதைத் தனியாக காரில் எடுத்துக்கொண்டு போனால் கொள்ளையடித்து விடுவார்கள் என்று பயத்தில் ஆம்னி பேருந்தில் வந்துள்ளார். சோதனை என்ற பெயரில் போலீஸார் அவரை பேருந்திலிருந்து இறக்கி மிரட்டி 20 லட்ச ரூபாயையும் செல்போனையும் வழிப்பறி செய்து அதை முட்புதரில் பதுக்கி வைத்திருந்தார்கள். இதுதொடர்பாக எஸ்.பி., அவர்களிடம் விசாரணை செய்தபோது அதுபோல் எதுவுமே இங்கு நடக்கவில்லை என்று சொல்லியுள்ளார்கள்.
அவர்களை நம்பாமல் எஸ்.பி ஸ்டேஷனிலிருந்த சப்-இன்ஸ்பெக்டரை விசாரிக்கச் சொல்லியுள்ளார். அவர் அந்த இடத்தைச் சோதனை செய்தபோது முட்புதரிலிருந்து ரூபாய் 20 லட்சத்தைக் கண்டெடுத்துள்ளார். இதனையடுத்து சோதனைச் சாவடியில் பணியிலிருந்த தலைமைக் காவலர் ரவிக்குமார், காவலர்கள் செல்வராஜ், ஓட்டுநர் அந்தோனிசாமிநாதன் மூவரையும் புதுநகர் காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை செய்தனர்.
இதுகுறித்து டி.எஸ்.பி நரசிம்மன் கூறுகையில், 'தொடர்ந்து அந்த காவலர்களிடம் விசாரணை செய்துவருகிறோம். இந்தப் பணத்துக்கான தக்க ஆதரம் கொடுத்தால் பணத்தை உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும். இல்லையென்றால் கருவூலத்தில் செலுத்தி அரசிடம் ஒப்படைக்கப்படும்' என்றார்.
க.பூபாலன் & எஸ்.தேவராஜன்
நன்றி : விகடன் செய்திகள் -03.06.2017
No comments:
Post a Comment