disalbe Right click

Tuesday, June 27, 2017

ஜி.எஸ்.டி வரி பற்றிய கேள்விகள் மற்றும் பதில்கள் - பாகம் : 2

ஜி.எஸ்.டி வரி பற்றிய கேள்விகள் மற்றும் பதில்கள் - பாகம் : 2
அறிவோம் ஜிஎஸ்டி: வரி ஏய்ப்பில் ஈடுபட்டால் அபராதம்..
வரி செலுத்துபவர்கள் தங்களது வரிக் கணக்கை எப்படி தாக்கல் செய்வது?
வரி செலுத்துபவர்கள் தங்களது வரிக் கணக்கை தாக்கல் செய்ய பல வழிகள் உள்ளன. தற்போதுள்ளதுபோல வருமானம் மற்றும் செலவு விவரங்களை நேரடியாக வருமான வரித்துறை இணைய தளத்தின் வழியாக தாக்கல் செய்யலாம். ஆனால் முன்னேற்பாடு இல்லாமல் செய்தால் ஏராளமான ஆவணங்களை இணைக்க வேண்டி இருக்கும். எனவே வரி செலுத்துபவர்கள் வரித்துறை இணையதளத்தில் உள்ள பிரத்யேக விவர குறிப்பை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதை பூர்த்தி செய்து வரித்துறை இணையதளம் வாயிலாகவே தாக்கல் செய்யலாம். அல்லது ஜிஎஸ்டிக்கு என்று உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் வாழியாகவும் தாக்கல் செய்யலாம்.
வருமானத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட வரியை திரும்பப் பெறுவது எப்படி?
ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் வரியை பிடித்தம் செய்தவர், தான் யாரிடமிருந்து வரியை பிடித்தம் செய்தாரோ அவரது விவரத்தை பிடித்தம் செய்த மாதத்தின் அடுத்த மாதத்தில் 10-ம் தேதிக்குள் தனது ஜிஎஸ்டிஆர்-7 படிவத்தில் பூர்த்தி செய்து வருமான வரி தாக்கல் அறிக்கையில் அளிப்பார். தவிர தான் மேற்கொண்ட அனைத்து பிடித்தங்களையும் இந்த வகையில் அவர் அளிக்க வேண்டும். வரிப் பிடித்தம் செய்தவர் தன் விவரங்களை பதிவேற்றம் செய்த பிறகு, யாரிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட்டதோ அவரது ஜிஎஸ்டிஆர்-2 படிவத்துக்கு தானாகவே இந்த விவரங்கள் சென்றுவிடும். இதற்கு அடுத்து வரி பிடித்தம் செய்யப்பட்ட நபர் தொகையைப் திரும்ப பெறுவதற்கு தனது ஜிஎஸ்டிஆர்-2 படிவத்தை உறுதி செய்ய வேண்டும். இதற்காக டிடிஎஸ் சான்றிதழ் அல்லது மின்னணு படிவங்களையுயோ சமர்ப்பிக்கத் தேவை யில்லை. தேவையெனில் டிடிஎஸ் ஆவணத்தை வருமான வரித்துறை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
குறிப்பிட்ட தேதிக்குள் வரித் தாக்கல் செய்யவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படுமா?
பதிவு செய்துள்ள ஒரு நபர் அல்லது நிறுவனம் குறிப்பிட்ட தேதிக்குள் வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். இல்லையெனில் தாமதக் கட்டணம் செலுத்த வேண்டும். குறிப்பாக தாமதித்த ஒவ்வொரு நாளுக்கும் ரூ.100 வீதம் அபராதம் விதிக்கப்படும். இது அதிகபட்சமாக ரூ.5,000 வரையில் செல்லும். கெடு அளிக்கப்பட்ட நாட்களுக்குள் ஆண்டு வரவு செலவு அறிக்கையை தாக்கல் செய்யத் தவறினாலும், ஒவ்வொரு நாளும் நூறு ரூபாய் தாமதக் கட்டணம் செலுத்த வேண்டும். அறிக்கை தாக்கல் செய்வதை திட்டமிட்டே தாமதப்படுத்தினால் அதிகபட்சமாக அவரது மொத்த பரிவர்த்தனையில் இருந்து 0.25% வரை அபராதம் கணக்கிட்டு வசூலிக்கப்படும்.
ஜிஎஸ்டி சட்டத்தின் படி எவையெல்லாம் குற்றங்களாகக் கருதப்படும்?
வரி ஏய்ப்பு குற்றங்களுக்கு தற்போதுள்ள சட்ட வரையறைகள் அனைத்தும் பொருந்தும் என்றாலும் ஜிஎஸ்டி சட்டப்படி சில குறிப்பிட்ட சட்ட வரையறைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. பொருட்களை அளிக்காமல் விற்பனை ரசீது மட்டும் அளிப்பது, வரி ஏய்ப்பு செய்யும் நோக்கத்துடன் தவறான தகவல்களை தருவது, பொய்யான நிதிநிலை அறிக்கை தயார் செய்வது, சட்டவிரோத சரக்குகளை சேமிப்பது, வழங்குவது, வாகனங்களில் கொண்டுசெல்வது போன்றவற்றுக்கு இப்போதுள்ள சட்ட நடவடிக்கைகள் ஜிஎஸ்டிக்கும் பொருந்தும். அதே நேரத்தில் முறையான விற்பனை ரசீதுகள் இல்லாமலோ அல்லது தவறான விற்பனை ரசீதுகளின் அடிப்படையிலோ விற்பனை செய்வது, வரி பிடித்தம் செய்யாமல் இருப்பது அல்லது குறைவாக வரிப் பிடித்தம் செய்வது போன்றவற்றுக்கு நடவடிக்கை இருக்கும்.
வாடிக்கையாளரிடமிருந்து பெறப்பட்ட வரியை மூன்று மாதங்களுக்கு மேலாக வரி ஆணையத்திடம் செலுத்தாமல் இருப்பது, சரக்குகளை அல்லது சேவையைப் பெறாமல் உள்ளீட்டு வரிக் கடனை பெறுவது அல்லது பயன்படுத்துவது. ஆவணங்கள் இன்றி சரக்குப் போக்குவரத்து மேற்கொள்வது போன்றவையும், மற்றொரு நபருடைய ஜிஎஸ்டி எண்ணைப் பயன்படுத்தி விற்பனை செய்வது, அல்லது ஆவணங்களை அளிப்பது தண்டனைக்குரிய நடவடிக்கையாக என்கிறது.
வரி ஏய்ப்பில் ஈடுபட்டால் ஜிஎஸ்டி சட்டப்படி எவ்வளவு அபராதம் விதிக்கப்படும்?
ஜிஎஸ்டி சட்டப்படி வரி ஏய்ப்பில் ஈடுபடு பவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும் அல்லது வரி ஏய்ப்பு செய்த தொகை, மோசடியான வழிகளில் பெறப் பட்ட கூடுதல் தொகை, குறைவாக வசூலிக்கப் பட்ட தொகை இவற்றிலிருந்து 10 சதவீதம் அபரா தமாக விதிக்கப்படும். வரி ஏய்ப்பு தொகையை பொறுத்து 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கவும் சட்டத்தில் இடம் உள்ளது.
வரி விலக்கு பெற்ற சரக்குகளை எடுத்துச் செல்லும்போதும் உரிய ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டுமா?
சட்டப்படியான ஆவணங்கள், அல்லது விற்பனை, கொள்முதல் ரசீதுகள் இல்லாமல் சரக்குகளை எடுத்துச் செல்வது குற்றமாகும். அல்லது பயண வழியில் ஆவணங்கள் இல்லாமல் சரக்குகளை சேகரித்துக் கொண்டு செல்வதும் குற்றமாகும். இதனால் சட்ட நடவடிக்கைக்கு உள்ளாகலாம். சரக்குகள் ஏற்றப்பட்ட வாகனத்தோடு தடுத்து நிறுத்தப்படலாம். இதற்கு ஜிஎஸ்டி சட்டம் அனுமதிக்கிறது.
வரி விலக்கு அளிக்கப்பட்ட பொருட்கள் என்றா லும் அவற்றின் மதிப்பில் 2% அல்லது ரூ.25,000 இவற்றில் எது குறைவோ, அந்தத் தொகை அபராதமாக வசூலிக்கப்படும். வரி விதிப்பு சரக்கு எனில் அவற்றுக்கென விதிக்கப்படும் வரியையும், அதைப்போல 100% அபராதமாகவும் கட்ட வேண்டும். அல்லது அதற்க இணையாக உறுதிமொழி பத்திரங்களை அளிக்க வேண்டும்.
பல மாநிலங்களில் வழங்கப்படும் சேவைகளுக்கு எங்கிருந்து வரி செலுத்துவது?
எந்த ஒரு சேவையாக இருந்தாலும் அந்த சேவையைப் பெறுபவர் பதிவு செய்த நபராக இருந்தால், இந்த சேவையை அளிக்கும் நபர் எங்கிருக்கிறாரோ, அவர் இருக்கும் இடம் சேவை வழங்கும் இடமாக கணக்கிடப்படும். அதேநேரத்தில் சேவையைப் பெறுபவர் பதிவு செய்யாதவராக இருந்தால் அந்த நிகழ்வு நடக்கும் இடத்தை சேவை வழங்கும் இடமாகக் கருதப்படும்.
எனவே இதற்கேற்ப வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். ஒரு சேவை பல மாநிலங்களிலும் நடைபெற்றால் அது நடை பெறும் ஒவ்வொரு இடத்திலும் சேவையின் அளவுக்கு ஏற்ப மதிப்பிடப்படும்.
தொடரும்..

- ஆடிட்டர். கோபால் கிருஷ்ண ராஜூ

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 24.06.2017

No comments:

Post a Comment