disalbe Right click

Wednesday, June 28, 2017

ஜி.எஸ்.டி வரி பற்றிய கேள்விகள் மற்றும் பதில்கள் - பாகம் : 4

ஜி.எஸ்.டி வரி பற்றிய கேள்விகள் மற்றும் பதில்கள் - பாகம் : 4
அறிவோம் ஜிஎஸ்டி: ஜிஎஸ்டியால் வர்த்தகருக்கு என்ன பயன்?
தொழில்நுட்ப வசதி இல்லாத சிறு விற்பனையாளர்கள் வரித் தாக்கல் செய்வது எப்படி?
வரித் தாக்கல் செய்வதற்கு நேரடியாக தொழில்நுட்ப வசதி இல்லையென்றாலும், அவர்களுடைய தேவைகளுக்கேற்ப பிறரது உதவுடன் வருமான வரி தாக்கல் தயாரித்தல் (TRPS) இணையதளத்தை பயன்படுத்தலாம். ஒரு வரி செலுத்தும் நபர் TRPS இணையதளத்தில் உள்ள படிவங்களில் தங்களது தகவல்களை உள்ளீடு செய்தால் வரித் தாக்கல் விவரங்களை தயார் செய்துவிடலாம். TRPS ல் தயார் செய்யப்பட்ட விவரங்களில் தவறுகள் இருந்தால், அதற்கான பொறுப்பு வரி செலுத்துபவரையே சேரும்.
இதுதவிர இதற்காக பதிவு பெற்ற உதவி மையங்களிலும் (Facilitation Centres) தாக்கல் செய்யலாம். இந்த உதவி மையங்களில் வரி செலுத்துகை படிவங்களை வரி செலுத்துபவர் களுக்கு அளிப்பார்கள். அதை பூர்த்தி செய்தபின் அடையாளக் குறியீடு மற்றும் கடவுச் சொல்லை பயன்படுத்தி தரவுகளை பதிவேற்றம் செய்வார்கள். பதிவுக்கு பிறகு இவர்கள் தரும் ஆவணங்களை வாடிக்கையாளர் பத்திரப்படுத்த வேண்டும்.
ஜிஎஸ்டி பதிவு சான்றிதழில் திருத்தம் மேற்கொள்ள முடியுமா?
விண்ணப்பம் அளித்த தேதியிலிருந்து 15 வேலை நாட்களுக்குள் தகவல்களை திருத்தம் செய்ய அனுமதிக்கப்படும். ஆனால் சில குறிப்பிட்ட முக்கியமான தகவல்களை திருத்தம் செய்ய அதற்குரிய அதிகாரிக்கு மட்டுமே அனுமதியுண்டு. எனினும் ஜிஎஸ்டி பதிவிற்கான இணையதளம் மூலம் பதிவு சான்றிதழின் இதர தகவல்களை திருத்தம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.
ஜிஎஸ்டி செலுத்தத் தேவையில்லாதவர்களும் பதிவு செய்ய வேண்டுமா?
ஜிஎஸ்டி செலுத்த தேவையில்லாத நபர்கள் பதிவு செய்வது கட்டாயமில்லை என்றாலும் அவசியமானது. தாமாகவே முன்வந்து பதிவு செய்வதன் மூலம் சட்ட முறைக்குள் வருபவர் ஆகிறார். வரி செலுத்தும் நபருக்குரிய சட்ட விதிமுறைகள் இவருக்கும் பொருந்தும். எதிர் காலத்தில் இன்புட் டாக்ஸ் கிரெடிட் பெறுவதற்கு இது உதவியாக இருக்கும்.
ஜிஎஸ்டி சட்டத்தின்படி யாரெல்லாம் பதிவு செய்ய வேண்டும்?
வரி செலுத்துவதற்குட்பட்ட சரக்கு, சேவைகளை விற்பவர்கள் அனை வரும் பதிவு செய்ய வேண்டும். அதாவது, ஜிஎஸ்டி சட்டப்படி சரக்கு வழங்குதல் / அல்லது சேவைகள் வரி விதிக்கப்பட வேண்டியவை என வரையறுக்கப்படுகிறது. ஒருவரின் ஆண்டு மொத்த பரிவர்த்தனை ரூ. 20 லட்சத்துக்கு மேற்படும்பட்சத்தில் தானாக முன்வந்து பதிவு செய்ய வேண்டும். தவிர இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 279A(4)(g)யின் படி ஜம்மு காஷ்மீர் மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் வர்த்தகம் செய்பவர்களின் ஆண்டு பரிவர்த்தனை ரூ.10 லட்சத்துக்கு மேற்பட்டாலும் பதிவு செய்ய வேண்டும்.
யாரெல்லாம் பதிவு செய்ய தேவையில்லை?
தான் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனை செய்யும் விவசாயி பதிவு செய்ய வேண்டியதில்லை. தவிர ஜிஎஸ்டி சட்டத்தின்படி வரியில்லாத பொருட்களை அல்லது மொத்தமும் வரி விலக்கு அளிக்கப்பட்ட சரக்கு மற்றும் சேவைகளை அளிப்பவர்கள் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆனால் அனைத்து வர்த்தகத்தையும் பதிவின்கீழ் கொண்டு வருவதை ஜிஎஸ்டி அறிவுறுத்துகிறது.
பல மாநிலங்களில் தொழில் செய்பவர் ஒரே ஒரு இடத்தில் ஜிஎஸ்டி பதிவு செய்து கொள்ளலாமா?
ஜிஎஸ்டி சட்டம் இதை அனுமதிக்கவில்லை. சிஜிஎஸ்டி / எஸ்ஜிஎஸ்டி சட்டப்படி ஒரு நபர் பல மாநிலங்களில் வர்த்தகம் செய்பவராக இருந்தால் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனியாக ஜிஎஸ்டி பதிவு செய்ய வேண்டும். அவர் எந்தெந்த மாநிலங்களில் வர்த்தகம் செய்கிறாரோ அந்தந்த இடத்தில் தனித்தனியாக பதிவு செய்ய வேண்டியது அவசியமாகும்.
ஜிஎஸ்டியில் பதிவு செய்யாத வர்த்தகர் வரியை வசூலிக்க முடியுமா? இன்புட் டாக்ஸ் கிரெடிட் பெற முடியுமா?
ஜிஎஸ்டி பதிவு பெறாத வர்த்தகர் அவருடைய வாடிக்கையாளர்களிடமிருந்து ஜிஎஸ்டியை வசூலிக்க முடியாது. அதுபோல ஜிஎஸ்டிக்கு செலுத்திய இன்புட் டாக்ஸ் கிரெடிட்டை பெறவும் உரிமை இல்லை.
ஜிஎஸ்டியால் வர்த்தகருக்கு என்ன வகையான பயன் கிடைக்கும்?
சரக்குகள் மற்றும் சேவை வரி சட்டத்தின் கீழ் வர்த்தகம் மற்றும் வரி விதிப்பு முறைப்படுத்தப்படுகிறது. வரி மேல் வரி விதிப்பு தவிர்க்கப்படுகிறது. சரக்குகள் மற்றும் சேவைகள் முறையாக கணக்கில் காட்டப்பட்டு வரிகள் செலுத்தப்படுகின்றன.
சரக்கு அல்லது சேவைகள் வழங்குபவர் சட்டப்படி அங்கீகரிக்கப்படுகிறார். உள்ளீட்டு சரக்கு / சேவைகளுக்கான வரியை, சரக்கு / சேவைகள் வழங்கலுக்கான வரியிலிருந்து கழித்துக் கொள்ளலாம். சரக்கு வாங்கியவர்களிடமிருந்து சட்டப்படி வரியை வாங்கலாம். ஜிஎஸ்டி சட்டப்படி அறிவிக்கப்படும் பலன்கள் மற்றும் சலுகைகளை பெறுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.
பெறுநர் சரக்குகளை வாங்காமல் திருப்பி அனுப்பினால் என்ன செய்வது?
பெறுநர் சரக்கை திருப்பி அனுப்பும்பட்சத்தில், சரக்கை அனுப்பிய நபர் அந்த சரக்குகளின் விவரங்கள் அடங்கிய கடன் குறிப்பை (credit note) அவருக்கு அனுப்ப வேண்டும். இந்த கடன் குறிப்பை (credit note) வழங்கிய மாதத்தின் வருமான வரி தாக்கலில் இந்த விவரங்களை அனுப்புநர் சேர்க்க வேண்டும்.
பெறுநர் தன்னுடைய வரி தாக்கல் கணக்கிலோ அல்லது இன்புட் டாக்ஸ் கிரெடிட்டை திரும்பப் பெறுவதற்கான ஆவணங்களில் இதை குறிப்பிடுவார். பெறுநருக்கும், அனுப்புநருக்கு மான இந்த கடன் குறிப்பு (credit note) விவரங்கள் ஒப்பிட்டு பார்க்கப்படும். இந்த தகவல்கள் இரு தரப்பினருக்கும் தெரிவிக்கப்படும்.
சரக்குகளை போக்குவரத்து மூலமாக அனுப்பும்போது, அந்த போக்குவரத்து தனி சேவையாக கணக்கிடப்பட்டால் அதற்கு யார் வரி செலுத்துவது?
ஒரே மாநிலத்துள்ளான அனுப்புகை என்றால் அந்த சரக்கை பெறுபவர் அல்லது அந்த நபரின் இடம்தான் பொருள் வழங்கும் இடமாகக் கருதப் படும். ஒருவேளை அவர் பதிவு செய்யாம லிருந்தால் பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டு எங்கே கொடுக்கப்படுகிறதோ அந்த இடம் பொருள் வழங்கல் இடமாகக் கருதப்படும்.
அதேபோல சர்வதேச பொருள் போக்குவரத்து சேவைகளைத் தவிர, உள்நாட்டு போக்குவரத்து சேவைகளைப் பொறுத்தவரையில் அந்த பொருள் சேரும் இடம்தான் சேவை வழங்கும் இடமாகக் கணக்கிடப்படும்.
கூரியர் மூலமான சேவை எனில் பொருட்கள், கடிதங்களைக் கொண்டு சேர்க்கும் இடம்தான் பொருள் / சேவை வழங்கும் இடமாகக் கணக் கிடப்படும். அதேநேரத்தில் இப்படி கொடுக்கும் போது, அது சேர வேண்டிய இடம், சிறு அளவில் இந்தியாவில் இருந்தாலும் வழங்கல் இந்தியாவில் நடந்ததாகக் கருதப்படும்.
தொடரும்..
ஆடிட்டர். ஜி. கார்த்திகேயன்
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 27.06.2017

No comments:

Post a Comment