disalbe Right click

Tuesday, June 6, 2017

பைனான்ஸ் நிறுவனத்துக்கு ரூ.55 லட்சம் அபராதம்: நுகர்வோர் ஆணையம் அதிரடி

பைனான்ஸ் நிறுவனத்துக்கு ரூ.55 லட்சம் அபராதம்: நுகர்வோர் ஆணையம் அதிரடி
புதுடெல்லி: டெல்லியை சேர்ந்தவர் தன்கர். இவர் கடந்த 2004ம் ஆண்டு அசோக் லைலேண்ட் பைனான்ஸ் என்ற நிறுவனத்திடம் (தற்போது இந்த நிதி நிறுவனம் இண்டஸ்இண்ட் பாங்க்)  இருந்து லாரி இன்ஜின் ஒன்றை வாங்கினார். இதற்கு அந்நிறுவனம் அவருக்கு ரூ.8.5 லட்சம் கடன் வழங்கியிருந்தது. அசலுடன் வட்டியும் சேர்த்து ரூ.9,64,750 பணத்தை ஒரேயடியாகவோ அல்லது மாதம் ரூ.28,375 என 34 மாதங்களில் வழங்கலாம் என நிறுவனம் தன்கரிடம் அறிவுறுத்தி இருந்தது. மேலும் இது தொடர்பாக இருவருக்கும் இடையே ஒப்பந்தம் போடப்பட்டு, தன்கரிடம் இருந்து 39 வெற்று காசோலைகளையும் பைனான்ஸ் நிறுவனம் வாங்கியிருந்தது. ஆனால் ஒப்பந்தம் நகல் தன்கருக்கு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
 
மாத தவணை தொடர்பாக நிறுவனத்துடன் தன்கருக்கு பிரச்னை இருந்து வந்த நிலையில், கடந்த 2005ம் ஆண்டு ஜூன் 13ம் தேதி அவர் வாகனத்தை ஓட்டி சென்றபோது, திடீரென அவரை வழிமறித்து சிலர் தாக்கியுள்ளனர். பின் நிலுவை தொகையை கட்டாமல் இருந்து வருவதாக கூறி, அவர்கள் லாரியை பறிமுதல் செய்தனர்.அதன்பின் அந்நிறுவனம் தன்கருக்கு எவ்வித முன்னறிவிப்பும் தெரிவிக்காமல், அந்த வாகனத்தை வேறு ஒரு நபருக்கு மலிவான விலைக்கு விற்பனை செய்துள்ளது. எனினும் சம்பந்தப்பட்ட நிறுவனம், தன்கர் வழங்கிய வெற்று காசோலைகளை நிரப்பி, அவர் மீது மோசடி வழக்கை தொடர்ந்தது.ஆனால் தன்னை ஏமாற்றி வாகனத்தை அபகரித்த அந்நிறுவனத்திடம் இருந்து தான் செலுத்தியதிலிருந்து குறிப்பிட்ட தொகையை பெற்று தரவேண்டும் என மாவட்ட நீதிமன்றத்தில் தன்கர் வழக்கு தொடர்ந்தார். 

வழக்கை விசாரித்த நீதிமன்றம், குறிப்பிட்ட நிறுவனம் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தது தொடர்பான எந்த ஆதாரத்தையும் தன்கர் தாக்கல் செய்யவில்லை என்பதோடு, முறைப்படி தவணை தொகை செலுத்தாதபட்சத்தில், நிறுவனம் வாகனத்தை பறிமுதல் செய்ததாக வழக்கு தொடர முடியாது எனக் கூறி நீதிமன்றம்மனுவை தள்ளுபடி செய்தது. 

எனினும் தன்கர் மாவட்ட நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மாநில நுகர்வோர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். மனுவில் தன்கர், வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள போதிலும், 2004ம் ஆண்டு வழங்கிய வெற்று காசோலையை தவறாக பயன்படுத்தி தன் மீது மோசடி வழக்கு தொடர்ந்து உள்ளதாகவும், அந்நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இவ்வழக்கு மீதான விசாரணை நேற்று முன்தினம் மாநில நுகர்வோர் நீதிமன்ற உறுப்பினர் என் பி கவுஷிக் முன் நடந்தது. 

அப்போது, நிறுவனம் இதேபோல் எத்தனை செக் மோசடி வழக்குகளை கடன் பெற்றோர் மீது பதிவு செய்துள்ளது? என ஆச்சரியப்பட்டார். 
மேலும் அவர் கூறுகையில், இந்திய நீதிமன்றங்களில் ஐபிசி சட்டம் 138ன் கீழ், பல செக் மோசடி வழக்குகள் பொய்யாக பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதுவரை எத்தனை கடன்காரர்கள் மீது இந்நிறுவனம் இதுபோல் பொய் மோசடி வழக்குகளை பதிவு செய்துள்ளது என்பதை யாராலும் யூகித்து பார்க்க முடிகிறதா என கேள்வி எழுப்பினார். 

அதன்பின் நுகர்வோர் ஆணையம் தனது தீர்ப்பில் கூறியதாவது
விசாரணையில் பைனான்ஸ் நிறுவனம் மனுதாரர் மீது பொய்யான செக் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளது உறுதியாகிறது.  இதுபோன்ற நிறுவனத்தின் மோசடி வழக்குக்கு தீர்வு காண வேண்டுமானால், சம்பந்தப்பட்ட நிறுவனம் நுகர்வோர் ஆணையத்துடன் தொடர்புடைய நலவாரியத்துக்கு ரூ.50 லட்சம் அபராதமாக செலுத்த வேண்டும். மேலும் இந்த மோசடி வழக்கு மூலம் பாதிப்புக்குள்ளான டெல்லிவாசி தன்கருக்கு ரூ.5.1 லட்சத்தை இழப்பீடாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
நன்றி : தினகரன் நாளிதழ் - 07.06.2017


No comments:

Post a Comment